2020 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு பொறுப்பேற்பதாக, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமிழரசுக் கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் ஏனைய பதவிப் பொறுப்புக்கள் தொடர்பாக தமிழரசுக் கட்சியின் மாநாடும், பொதுக்குழுவுமே கட்சி யாப்பிற்கு அமைவாக தீர்மானங்களை எடுக்கமுடியும். மாறாக பொதுவெளியிலும், ஊடவகியலாளர் மாநாட்டிலும் தமிழரசுக் கட்சியின் பதவிப் பொறுப்புக்களை தீர்மானிக்க முடியாது எனவும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் மக்கள் வரலாற்றில் தொடர்ச்சியான இன அழிவுகளையும் சமூக பொருளாதார இழப்புக்களையும் அவலங்களையும் தமிழ் மக்கள் சந்தித்துள்ளனர். இவை தொடர்கின்றன. இவற்றிற்கு இன்னுமே ஒரு தீர்வு ஏற்படவில்லை.
இப்பொழுது நடைபெற்று முடிந்த 2020 பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பல வகையான நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆறுதலான ஒரு ஜனநாயக வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த நிலையில், தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுகளுக்கும் கூட்டமைப்பு பொறுப்பேற்கின்றது. இவை பற்றித் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைமை விரைவில் கூடி ஆராயவுள்ளது.
அத்தோடு, தமிழரசுக் கட்சியின் உயர்பீடத்தையும், மத்திய செயற்குழுவையும் விரைவில் கூட்டி, தேர்தல் காலத்திலும், தேர்தல் காலத்திற்கு அண்மித்த காலப்பகுதியிலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் உறுப்பினர்களின் நடவடிக்கை தொடர்பாக பூரணமாக விசாரனை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதன்படி நடவடிக்கைக்குழு பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கும்.
அத்துடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் அடைந்த வெற்றி, ஏற்பட்ட இழப்பு தொடர்பாக கூட்டமைப்பு உயர்பீடம் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு முன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தேர்தல் தொடர்பாக இன்று கேள்வி எழாமலே வெளியிடப்பட்ட தன்னிச்சையான கூட்டுப் பொறுப்பற்ற பத்திரிகை செய்திகள் மீண்டும் கட்சிகளுக்குள்ளும், மக்களிடத்திலும் விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளன. இவை கட்டுப்படுத்தப்பட வேண்டும்.”எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்று நடத்தத் தயார் என சிறிதரன் தெரிவிப்த்துள்ளார். குறிப்பாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பதவி தற்போது இலங்கை தமிரசுக் கட்சி உறுப்பினர்களின் பிரதான பேசுபொருளாக மாறியுள்ளது.
பொதுத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் ஆகியோர் தோல்வியடைந்தமை தொடர்பில் நேற்றும் இன்றும் நடைபெற்ற இருவேறு ஊடகவியலாளர் சந்திப்புகளில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
ஒரு சில வாக்குகளால் அன்றி, தீர்மானமாக அவர்கள் தோற்றுள்ளதால், அது குறித்து கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தழிரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். இதேவேளை, கட்சியின் மத்திய குழு மக்களின் விருப்பத்தைக் கேட்டறிந்து தலைமைத்துவத்தை வழங்கினால், அதனை ஏற்று நடத்தத் தயாராக இருப்பதாக சிவஞானம் சிறிதரன் கூறியுள்ளார்.
“நானாக ஒரு தனி மனிதனாக கட்சியின் தலைமையைப் பறித்து அல்லது எடுத்து கட்சி நடத்துதல் என்பது சாத்தியமற்ற ஒன்று. எல்லோருடைய ஒத்துழைப்பும் வேண்டும். எல்லோருடைய ஒன்றுபட்ட முயற்சியும் வேண்டும். எல்லோரும் இணைந்தால், அப்படி ஒரு பொறுப்பு தரப்பட்டால் அதனை செவ்வனே செய்வதற்கு நான் தயாராக இருக்கின்றேன்.” என சிவஞானம் சிறிதரன் அறைகூவல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.