மாலி நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் இராணுவத்தின் கிளர்ச்சிப் படைப் பிரிவு ஒன்றினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து நாட்டில் இராணுவச் சதிப் புரட்சி இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி இப்ராஹிம் பூபக்கர் கெய்த்தா(Ibrahim Boubacar Keïta), பிரதமர் பூபோ சீசீ (Boubou Cissé) ஆகிய இருவரும் இராணுவக் கிளர்ச்சிக் குழு ஒன்றின் கட்டுப்பாட்டில் உள்ளனர் என்பதை அந்நாட்டு அதிகாரிகள் சர்வதேச ஊடகங்களிடம் உறுதிப்படுத்தி உள்ளனர்.
இவர்களது கைதுகளை அடுத்து தலைநகர் பமக்கோ (Bamako) படைகளது கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. .கிளர்ச்சிப் படைகளுக்கு ஆதரவாக நகரில் பேரணிகள் இடம்பெற்றுள்ளன. அரச வானொலியின் வழமையான சேவைகள் நின்றுபோயுள்ளன.
கடந்த 2018 இல் இரண்டாவது தடவையாக தேர்தலில் வென்று அதிகாரத்துக்கு வந்த ஜனாதிபதி கெய்த்தாவை பதவி விலகக் கோரி கடந்த பல மாதகாலமாக அங்கு எதிர்க்கட்சிகள் பெரும் போராட்டங்களை நடத்திவந்தன. அந்த நிலையிலேயே தற்போது இராணுவக் குழு ஒன்று ஆட்சிக் கவிழ்ப்பை மேற்கொண்டு உள்ளது.
மாலி நாட்டின் அரசமைப்பு வழிமுறைகளுக்குப் புறம்பாக ஆட்சியை கவிழ்க்க அங்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்கு உலக அளவில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சர் தனது நாட்டின் கடுமையான கண்டனத்தை தெரிவிக்கும் அறிக்கை ஒன்றை உடனடியாக வெளியிட்டிருக்கிறார்.
பிரான்ஸின் முன்னாள் காலனித்துவ நாடான மாலியின் நிலைவரம் குறித்து அதிபர் மக்ரோன் பிராந்திய நாடுகளின் தலைவர்களோடு தொடர்பு கொண்டு வருகின்றார் என எலிஸே மாளிகை தெரிவித்துள்ளது.
ஆபிரிக்காவின் சாஹல் பிராந்தியத்தில் இஸ்லாமியத் தீவிரவாதிகளை எதிரான படை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் ஆயிரக்கணக்கான பிரெஞ்சுத் துருப்புக்களில் பெரும் பங்கினர் மாலி நாட்டில் நிலைகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மாலியின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக ஐ. நா. பாதுகாப்புச்சபை புதனன்று அவசரமாகக் கூடி ஆராயவுள்ளது. மாலி மக்கள் தங்களது ஜனநாயகக் கட்டமைப்புகளைப் பாதுகாக்க வேண்டும் என்று ஐ. நா. செயலாளர் நாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில், மாலியின் ஜனாதிபதி இப்ராகிம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தெடார்பாக அவர் தொலைக்காட்சியில் பேசும்போது, தனது தலைமையிலான ஆட்சியையும், நாடாளுமன்றத்தையும் கலைப்பதாக அறிவித்தார். மேலும், தான் அதிகாரத்தில் நீடிப்பதற்காக எந்த ரத்தமும் சிந்தக்கூடாது என்று விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சம்பள பிரச்சினை மற்றும் ஜிகாதிகளுடன் தொடர்ச்சியான மோதல் மற்றும் முன்னாள் ஜனாதிபதியுடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக ராணுவ வீரர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டு ஆட்சிக் கவிழ்ப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மூலம் – Kumarathasan Karthigesu முகநூல்..
.