தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்த கட்சியின் உறுப்பினர் சட்டத்தரணி வி.மணிவண்ணனுக்கு தலைமையினால் அனுமதி மறுக்கப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து சட்டத்தரணி வி. மணிவண்ணனை நீக்குவதாக அந்தக் கட்சியின் மத்திய குழு, கடந்த 13ஆம் திகதி தீர்மானத்தது. இதுதொடர்பில் மணிவண்ணனுக்கு கட்சியின் தலைவர், செயலாளரால் கடிதமும் அனுப்பிவைக்கப்பட்டது.
பல்வேறு காரணங்களைக் குறிப்பிட்டு அவை தொடர்பிலேயே மத்திய குழு ஆராய்ந்து இந்த நடவடிக்கையை எடுத்ததாகவும் அந்தக் கடிதத்தில் வெளிப்படுத்தப்பட்டது.
கட்சியின் குற்றச்சாட்டுத் தொடர்பில் தனது நிலைப்பாட்டை மக்களுக்கு விளக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை சட்டத்தரணி வி.மணிவண்ணன் இன்று பிற்பகல் 2 மணிக்கு யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நடத்துவதாக அறிவித்திருந்தார்.
எனினும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்துக்குச் சென்ற அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அங்கு மணிவண்ணனுக்கு அனுமதியளிக்கவேண்டாம் என்று தலைமையினால் அறிவிக்கப்பட்டது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இருந்தோர் தெரிவித்தனர்.
அதனால் இன்றைய தினம் நடாத்தப்படவிருந்த ஊடக சந்திப்பை மணிவண்ணன் நிறுத்தி நாளைய தினம் ஊடக சந்திப்பினை நடாத்த உள்ளதாக அறிவித்துள்ளார். #தமிழ்தேசியமக்கள்முன்னணி #கதவடைப்பு #ஊடகசந்திப்பு #ரத்து #மணிவண்ணன்