சுவீடனில் தீவிர வலதுசாரி அமைப்பு ஒன்று இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை எரித்ததை எதிர்த்து அங்கு நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியுள்ளது.
சுவீடனின் தெற்கு பகுதியில் இருக்கும் மால்மோவில் பல மணி நேரங்களாக இடம்பெற்ற இந்த கலவரத்தில், வாகனங்களுக்கு தீயிடப்பட்டதுடன் கடைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனையடுத்து அங்கு பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
குரான் எரிக்கப்பட்ட அதே இடத்தில் நடைபெற்ற போராட்டத்தில் போராட்டக்காரர்கள் காவல்துறையினா் மீது கல் எறிவதாகவும், கார் டயர்களுக்கு தீ வைப்பதாகவும் சா்வதேச செய்திகள் தொிவித்துள்ளன.
தீவிர வலதுசாரியும் டென்மார்க் அரசியல்வாதியுமான ராஸ்முஸ் பலுடான் குரான் எரிப்பு பேரணியை முன்னெடுத்திருந்தார். அவரை கலந்து கொள்ள விடாமல் காவல்துறையினா் தடுத்த போதிலும் அவரது ஆதரவாளர்கள் குரான் எரிப்பு பேரணியை நடத்தியுள்ளனர்.
பலுடான் சுவீடனுக்குள் நுழைவதை டென்மார்க் எல்லையில் தடுத்த காவல்துறையினா் அவர் சுவீடனிற்குள் நுழைய இரண்டு ஆண்டுகள் தடை விதித்திருந்தனர்.
டென்மார்க் கடும்போக்கு ஸ்ட்ராம் குர்ஸ் கட்சியின் தலைவரான ராஸ்முஸ் பலுடான் இஸ்லாமிற்கு எதிராக சமூக ஊடகங்களில் காணொளி பகிர்ந்த குற்றச்சாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதனையடுத்து இவ்வாண்டு தொடக்கத்தில் டென்மார்க் நீதிமன்றம் அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது #சுவீடன் #குரான் #கலவரம் #கைது