பலநாள் மீன்பிடி கலங்களுக்கு விரைவில் கண்காணிப்பு உபகரணங்களை பொருத்துவதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதுதொடர்பான கலந்துரையாடல் ஐ.எம்.ஓ. நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான பிரதானி சரத் டாஸ் மற்றும் இலங்கைக்கான அதிகாரி சாந்த குலசேகர ஆகியோருக்கும் அமைச்சருக்கும் இடையில் இன்று(08.09.2020) மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது உடனடியாக சுமார் 4500 பல நாள் மீன்பிடிக் கலங்களுக்கு கண்காணிப்பு உபகரணங்களை பொருத்துவதற்கு சர்வதேச கடற்றொழில் செயற்பாடுகள் தொடர்பான விவகாரங்களை கையாளுக்கின்ற அமைப்பான ஐ.ஓ.எம் (International Migration Organization) நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது.
வி.எம்.எஸ். கருவிகள் பொருத்தப்படுவது சர்வதேச நியமங்களில் ஒன்றாக காணப்படுவதுடன், பலநாள் மீன்பிடிக் கலங்களில் ஆழ்கடலுக்குச் செல்லும் மீன்பிடியாளர்கள் நாடுகளுக்கிடையேயான எல்லைகளைத் தாண்டுவது மற்றும் இயற்கை அனர்த்தங்களால் திசைமாறிச் செல்வது போன்ற விடயங்கள் அவதானிக்கப்பட்டு தேவையற்ற அசௌகரியங்களை தவிர்க்க முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது தெரிவித்தார்.
மேலும், கடல்வழியாக நடைபெறும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆட்கடத்தல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் குறித்த உபகரணங்கள் உதவும் என்று தெரிவித்த அமைச்சர், வி.எம்.எஸ் கருவிகளின் செயற்பாட்டை வினைத்திறனாக மாற்றும் கடற்றொழில் அமைச்சின் முயற்சிகளுக்கு ஐ. எம். ஓ. நிறுவனம் வழங்கும் உதவிகளுக்கு தனது நன்றிகளையும் ஐ. எம். ஓ. பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சுமார் 6000 பலநாள் மீன்பிடிக் கலங்கள் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் சர்வதேச மீன்பிடி நியமங்களில் ஒன்றாக காணப்படும் வி.எம்.எஸ் (Vessel monitoring system) உபகரணங்கள் இதுவரை சுமார் 1500 பலநாள் கலங்களுக்கு மாத்திரமே பொருத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு பொருத்தப்பட்டவற்றிலும் 600 வி.எம்.எஸ். கருவிகள் மாத்திரமே தொழிற்படுவதாக பலநாள் கலங்களின் உரிமையாளர்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முறையிடப்பட்டிருந்த நிலையில் அமைச்சரின் முயற்சியினால் தற்போது முதற்கட்டமாக 4500 வி.எம்.எஸ் கருவிகள் பொருத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. #பலநாள்கலங்கள் #விஎம்எஸ்கருவிகள் #மீன்பிடி #போதைப்பொருள்கடத்தல்