தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பிற்கோ அதன் தலைவர் சஹரான் ஹாசிமிற்கோ ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் நேரடி தொடர்பு இருக்கவில்லை என ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்றையதினம் முன்னிலையாகி சாட்சியமிளத்த போதே அவா் இதனைத் தொிவித்துள்ளாா்.
இந்த பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் நாட்டைச் சீர்குலைக்கும் நோக்கில் செயற்படும் மறைமுக சக்தி ஒன்று காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளா்ா.
சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய உயிா்த்தஞாயிறுத் தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாதிகளின் பெயர் பயன்படுத்தப்பட்டமையின் ஊடாக தாக்குதலின் பின்னணியில் செயற்பட்ட மறைமுக சக்தியின் நோக்கம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவா் தொிவித்துள்ளாா்.
சஹரான் தலைமையிலான குழுவினர் இந்த மறைமுக சக்தியால் பயன்படுத்தப்பட்ட , பணத்திற்காக செயற்பட்ட அடிப்படைவாத குழுவினர் எனவும் இவ்வாறான தாக்குதல் மீண்டும் நடத்தப்படுவதற்கான சந்தர்ப்பம் இல்லை எனவும் அவர் தொிவித்துள்ளார்.
அதேவேளை குறித்த மறைமுக சக்தி யார் என கேட்கப்பட்ட போது ஊடகவியலாளர்கள் இல்லாத சந்தர்ப்பத்தில் அவர்கள் தொடர்பில் அறிவிக்க தயார் என ஹக்கீம் பதிலளித்துள்ளார்.
புலனாய்வுப் பிரிவினா் ஊடாக இவ்வாறு அடிப்படைவாதிகளாக அடையாளம் காணப்பட்டவர்கள் தொடர்பில் முஸ்லிம் தலைவர்களை தௌிவுபடுத்துவதற்கு அப்போதைய அரச தலைவர்கள் கடமைப்பட்டிருந்ததாகவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான அரசியல் நெருக்கடி, ஒரு சந்தர்ப்பத்தில் தனிப்பட்ட வைராக்கியமாக வலுப்பெற்றதாகவும் ஹக்கீம் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தேசிய பாதுகாப்பு பேரவையின் கூட்டங்களுக்கு தான் அழைக்கப்படவில்லை என அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, 52 நாட்கள் நீடித்த அரசியல் நெருக்கடியின் போது கூறியதாகவும் அவா் தொிவித்துள்ளா்ா.
அத்துடன் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கும் அப்போதைய ஜனாதிபதி மைத்திாிக்கும் இடையில் ஒரு மோதல் நிலை காணப்பட்டதாகவும் விசாரணை நடத்தி பூஜித் ஜயசுந்தரவை பதவியிலிருந்து நீக்குமாறு மைத்திாி கோரியிருந்ததாகவும் ஹக்கீம் தொிவித்துள்ளாா்
இதேவேளை ஐனாதிபதி ஆணைக்குழுவின் காவல்துறைப் பிரிவில் முன்னிலையாகி சாட்சி வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரஹ்மான் இந்தியாவிற்கு தப்பிச்சென்றுள்ளதாகக் கூறப்படும் உயிா்த்த ஞாயிறுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளில் ஒருவரான சாராவை மீண்டும் நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
சாரா என்றழைக்கப்படும் புலஸ்தினி இராஜேந்திரன் , நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் தாக்குதல் மேற்கொண்டவரின் மனைவியாவார்.
சாரா இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக, ஜனாதிபதி ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்படும் குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரி ஒருவரின் வாக்குமூலத்தில் இதற்கு முன்னர் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதேவேளை, அம்பாறை – சாய்ந்தமருதில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சாரா எனப்படும் புலஸ்தினி இராஜேந்திரனின் மரபணு பரிசோதனை அறிக்கையை மீண்டும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் சாரா எனப்படும் புலஸ்தினியின் தாயார் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.
இன்று கொழும்பில் உள்ள அரச பகுப்பாய்வு பிரிவிக்கு மீண்டும் அவரை அழைத்துச்சென்று மரபணு பரிசோதனைக்கான மாதிரிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தாா் .
அதன்படி, சாராவின் தாயாரை கொழும்பிற்கு அழைத்து வந்து மரபணு பரிசோதனையை மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார். #உயிர்த்தஞாயிறு #தாக்குதல் #மறைமுகசக்தி #தேசியதௌஹீத் #சஹரான் #ஹக்கீம் #புலஸ்தினி