மட்டக்களப்பு வாள்வெட்டு குழுவின் தலைவர் தனு உட்பட இருவரை வாள் மற்றும் கைக்குண்டுடன் நேற்று (11.09.20) கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு தலைமையக காவற்துறைப் பிரிவிலுள்ள நாற்கேணி மற்றும் ஊறணி தொடர்ச்சியாக வாள்வெட்டு மற்றும் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் வாள் வெட்டுக்குழு ஒன்று பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், பெண்கள் தனிமையில் வீடுகளில் இருக்க முடியாத நிலை மற்றும் மக்களை அச்சுறுத்தி வருவதாகவும் இக் குழுவால் தங்களுக்கு உயிர் ஆபத்து ஏற்படும் என மக்கள் காவற்துறையில் முறைப்பாடு செய்வதற்கு பயந்து வருவதாக காவற்துறையினருக்கு நீண்ட காலமாக முறைப்பாடுகள் கிடைக்பெற்று வந்தது.
இந்த நிலையில் காவற்துறையினர் இவ் வாள்வெட்டு குழு பற்றி புலனாய்வுத் துறையினருக்கு அறிவித்ததை அடுத்து புலனாய்வுத் துறையினர் தொடர்ச்சியாக இவர்கள் தொடர்பாக தகவல்களை திரட்டிவந்துள்ள நிலையில், நேற்று மாலை நாவற்கேணி பிரதேசத்தில் வாள் வெட்டுக்குழுவின் தலைவர் தனு வாளுடன் மக்களை அச்சுறுதி வருவதாக காவற்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து காவல் நிலைய பொறுப்பதிகாரி பி.கே. ஹொட்டியாராச்சியின் ஆலோசனையில், குற்றத் தடுப்பு பிரிவு காவற்துறை சப் இன்பெஸ்டர் முகமட் சாஜன் கிருபா தலைமையிலான காவற்துறைக் குழுவினர் அங்கு சென்று அவரை கைது செய்ய முற்பட்ட போது, அவர் காவற்துறையினர் மீது வாளால் வெட்ட முற்பட்டுள்ளார்.
பின்னர் காவற்துறையினர் சுற்றிவளைத்து அவரையும் அவரது சாகாவான சாந்தன் ஆகிய இருவரை கைது செய்ததுடன் தனுவின் இடுப்பில் இருந்து கைக்குண்டு ஒன்று வாள் ஒன்றையும் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கைது செய்யப்பட்ட வாள் வெட்டுகுழுவின் தலைவரான தனு கடந்த 2018 ஆண்டு சிறு குற்றத் தடுப்பு பிரிவு காவற்துறையினர் இருவர் விசாரணைக்கு நாவற்கேணி பிரதேசத்துக்கு சென்ற போது அவர்களை துரத்தி தாக்குதல் மேற்கொண்டு தாக்கி காயப்படுத்தியது தொடர்பாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளதுடன் அவர் பிணையில் வெளி வந்துள்ளார்.
அதேவேளை அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் 9 வழக்குகள் உள்ளதுடன் சிறு குற்றப் பிரிவில் 4 முறைப்பாடுகள் தாக்குதல் செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ்பாணத்தில் உள்ள ஆவா வாள் குழு போன்று இவர்களும் இங்கு இயங்கி வருவதாகவும், இக் குழுவில் மேலும் பிரதான 4 பேர் தலைமறைவாகியுள்ளதுடன் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்தனர்.
இந்த வாள் வெட்டுகுழுவிற்கும் செங்கலடியிலுள்ள வாள் வெட்டு குழுவிற்கும் தொடர்புகள் இருக்கின்றதா என விசாரணை மேற் கொண்டுவருவதாகவும், கைது செய்யப்பட்ட இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதக காவற்துறையினர் தெரிவித்தனர்.