அனுமதிப்பத்திரம் இன்றி கொழும்பில் இருந்து மன்னாருக்கு கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி மதுபான பொருட்கள் இன்று சனிக்கிழமை(12) மாலை மன்னார் காவற்துறையினர் கைப்பற்றியுள்ளதோடு, இரு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
மன்னார் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல்களுக்கு அமைவாக, மன்னார் உதவி காவற்துறை அத்தியட்சகர் கஸ்தூரி ஆராட்சியின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் காவல் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.கிருஸாந்தன் தலைமையில் மன்னார் காவல் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இணைந்து குறித்த மதுபான பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.
அனுமதிப் பத்திரம் இன்றி கொழும்பில் இருந்து மன்னார் முருங்கன் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மன்னார் சௌத்பார் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட போதே இன்று சனிக்கிழமை(12) மாலை மன்னார் தள்ளாடி சந்தியில் காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டது.
பார ஊர்தி ஒன்றினுள் முழுமையாக சுற்றி பியர் போத்தல்கள் அடுக்கி வைத்து சூட்சுமமான முறையில் அனுமதிப் பத்திரமின்றி 750 மில்லி லீட்டர் கொண்ட 660 மதுபான போத்தல்கள் கொண்டு சென்ற போதே மன்னார் தள்ளாடி சந்தியில் வைத்து காவற்துறையினர் கைப்பற்றியுள்ளதோடு. அனுராதபுரத்தை சேர்ந்த 29 மற்றும் 39 வயதுடைய இரு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.