தமிழ்ச்சூழலில் உயர்கல்வித்துறையின் கற்பித்தல் முறைமைகளில் முனைப்புப் பெற்றுவரும் காலனிய நீக்க முன்னெடுப்புக்கள்: இலங்கை கிழக்குப்பல்கலைக்கழக நாடக அரங்கத்துறையின் கற்கையினை மையப்படுத்திய ஆய்வு
அறிமுகம்:
இப்பூகோளத்தில் மூன்றாம் உலக நாடுகள் எனச் சொல்லப்பட்டுவரும் மேற்குலகின் காலனித்துவ ஆட்சி அதிகாரத்திற்கு உள்ளாகியிருந்து பின்னர் அவ்வாட்சி அதிகாரத்தை சுயமாக மேற்கொள்ளுவதற்கான சுதந்திரத்தினைப் பெற்ற நாடுகள் மற்றும் தேசங்களில் இன்றைய சூழலில் முனைப்புப் பெற்று வரும் செல்நெறிகளுள் பிரதானமானதாக காலனிய நீக்கம் எனும் விடயம் இருந்து வருகின்றது.
குறிப்பாக இத்தகைய தேசங்களின் உயர்கல்வித்துறையில் காலனிய நீக்கத்திற்கான ஆய்வறிவு நடவடிக்கைகள் முக்கியம் பெற்று வருகின்றன. ஆபிரிக்காவிலும், இலத்தீன் அமெரிக்க ஆய்வறிவுத் துறையினரிடையேயும் காலனிய நீக்கம் பிரதான பேசு பொருளாக இருந்து வருகின்றது. உதாரணமாக கென்ய நாட்டின் கூகி வா தியாங்கோவின் படைப்பாக்கங்களும் ஆய்வறிவு அணுகுமுறைகளும் காலனிய நீக்கத்திற்கான கொள்கை விளக்கங்களையும் செயற்பாடுகளையும் முன்வைப்பனவாக அமைந்துள்ளதனைக் காண்கின்றோம்.
‘காலனித்துவம் வெறுமனே மக்களை தனது பிடிக்குள் வைத்திருக்கவில்லை. அது சுதேசியின் மூளையில் இருந்தவற்றை இல்லாமலாக்கி விட்டது. ஒரு வக்கிரமான தர்க்கத்தைப் பயன்படுத்தி அவர்களின் கடந்த காலத்தை திரிபுபடுத்தி சிதைத்து அழித்து விட்டது’ என ஃபனான் அவர்கள் காலனித்துவம் பற்றிக் குறிப்பிடும் அதேவேளை, ‘பல நூற்றாண்டு உறுப்பிய நீக்கம், அந்நியமாதல் போன்ற கொடுமைகளிலிருந்து விடுதலை பெறுவதற்கான சுயமுனைப்பு காலனிய நீக்கம்’ என கூகி வா தியாங்கோ வலியுறுத்துகின்றார்.
இப்பின்னணியில் நம்மிடையே செல்வாக்குப்பெற்றுள்ள கல்வி முறைமைகள் மிகப்பெரும்பாலும் காலனியச் சிந்தனைகளால் ஆட்கொள்ளப்பட்டவைகளாக இருப்பதன் காரணமாக அக்கல்வி முறைமைகளிலிருந்து நாம் எம்மை விடுவித்துக்கொண்டு நமக்கேயுரிய கல்வி முறைமைகளை உருவாக்க வேண்டியதன் தேவை இன்று பரவலாக உரையாடப்பட்டு வருகின்றது.
இத்தகைய உரையாடல்களுள் கட்டமைக்கப்பட்டுள்ள காலனிய நலன்பேணும் அமைப்பிற்குள் ‘அதிகாரத்தின் ஓட்டங்களை கூடியவரை மாற்றியமைத்தால் போதும்’ (உயிர்மை, ஜீன் 2019, இதழ் 190, பக் 22) எனும் கருத்து கவனத்திற்குரியதாகக் கொள்ளப்படுகின்றது. அதாவது பாரியளவிலான மாற்றத்தை வேண்டுதல் என்பதிலிருந்து சற்று விலகி காலனிய நீக்கம் எனும் தெளிவான பார்வையுடன் சிறுசிறு அளவில் மாற்றங்களுக்கான செயற்பாடுகளை மேற்கொள்ளுதல் இன்றியமையாதது எனவும் அதுவே இன்றைய கல்விச்சூழலில் நடைமுறைக்குச் சாத்தியமாக அமையக் கூடியது எனவும் உரையாடப்பட்டு வருகின்றது.
இதற்கேற்ப இலங்கை கிழக்குப்பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறையிலும், சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்திலும் நாடக அரங்கத்துறை சார்ந்த கற்றல் நடவடிக்கைகளில் மேற்படி காலனிய நீக்கத்திற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதாவது பட்டப்படிப்பைக் கற்கும் மாணவர்களுக்கு பாரம்பரிய அறிஞர்களும் கலைஞர்களும் உத்தியோகபூர்வமாக அழைக்கப்பட்டு கற்பிக்கப்படும் நிலைமைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
பாரம்பரியக் கலைஞர்களும் நவீன கல்வியும்:
காலனித்துவம் அறிமுகப்படுத்திய நவீன கல்வி ஏற்பாடுகளில் பாரம்பரிய அறிவு முறைமைகளுடன் வாழும் உள்ளூர் ஆளுமைகளிடம் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு வசதிகள் வழங்கப்படாத நிலைமையே இருந்து வருகின்றது.
அதிகாரக் கல்விப்பாய்ச்சலானது மேலிருந்து கீழ்நோக்கி பண்பாட்டு ஆக்கிரமிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் விதைக்கப்பட்டுள்ளமையும், எமது கல்வி முறைமை Banking of Education முறைமையாக உள்ளது. இந்தப்போதனா முறைமை மென்மேலும் அடிநிலை மக்களைத் தாழ்வு நிலைக்கு இட்டுச்செல்லவே வழிசமைக்கிறது. (சுருதி,ஆய்விதழ்,பக்83,2009) இதன்காரணமாகவே பாரம்பரியமான ஆளுமைகளான அண்ணாவிமார் மற்றும் கலைஞர்களால் பயிற்றுவிக்கப்படும் கூத்தினைப் ‘பாமரர் மத்தியில் ஆடப்படும் கூத்து'(சி.மௌனகுரு,x,2007) என மதிப்பிறக்கஞ் செய்து பாரம்பரியக் கலைஞர்களையும் ஆளுமைகளையும் பாமரர்களாகவும், படிப்பறிவற்றவர்களாகவும் காலனித்துவ அறிவு முத்திரை குத்தியுள்ளது. நவீன கல்வியானது மேற்குலக ஆய்வறிவு முறைமைகளை அடிப்படையாகக் கொண்டு பாரம்பரிய அறிவு முறைமைகளையும், பாரம்பரியமான அறிஞர்களையும் கலைஞர்களையும் நிராகரிக்கும் முறைமையினையே வலுப்படுத்தி வந்துள்ளது.
எனினும் பாரம்பரியமான ஆளுமைகளிடமிருந்து ஆய்வுக்கான தகவல்களையும் வளங்களையும் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்களையும் வசதிகளையும் நவீன ஆய்வு முறைமைகள் தாராளமாக வழங்கியுள்ளன.
இந்த வகையில் பாரம்பரியமான அறிஞர்கள் சிலரை காலனிய நோக்கில் இயங்கிய நவீன ஆய்வறிவாளர்கள் தமது ஆய்விற்கான வளங்களாகவும் தகவல் வழங்கிகளாகவும் பயன்படுத்தி உள்ளார்கள். உதாரணமாக ஈழத்தில் 1960 களில் பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்களால் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட கூத்துச்செம்மையாக்கம் எனும் நடவடிக்கைக்கு கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு வந்தாறுமூலையைச் சேர்ந்த செல்லையா அண்ணாவியார் அவர்கள் பயன்படுத்தப்பட்டமையினைக் காண முடியும்.
நவீன ஆய்வறிவில் ஆய்வாளர்களின் தேவைக்கேற்ப தகவல்களை வழங்கும் தகவல் வழங்கிகளாகவே பாரம்பரியமான ஆளுமைகள் பயன்படுத்தப்பட்டுள்ளார்கள். மாறாக அவர்களின் ஆளுமையினைப் பிரயோகங்களுக்குக் கொண்டு வரும் வகையில் அவர்களைக் கையாள முடியாத நிலைமையே உயர்கல்வி நிறுவனங்களில் வலுவாக இருந்து வருகின்றது.
ஈழத்தில் பல தசாப்தங்களாக மல்லிகை எனும் சிறு சஞ்சிகையினை வெளியிட்ட ஆளுமை திரு டொமினிக் ஜீவா அவர்கள் தனது சுயசரிதத்தில் குறிப்பிடும் கருத்து இங்கு பொருத்தமுடையதாக உள்ளது. ‘இன்றுவரை எனக்கொரு ஆதங்கம் கலந்த ஆச்சரியம் இந்த மண்ணில் உள்ள எந்தப்பல்கலைக்கழகமுமே என்னை அழைத்து, எனது இலக்கிய அனுபவங்களைப்பற்றியோ, சஞ்சிகை வெளியீடு சம்பந்தமாகவோ, எழுத்து விவகாரங்கள் பற்றியோ தமது மாணவர்களுடன் கருத்துப்பரிமாறல் செய்ய இதுவரை அழைப்பு விடுத்ததில்லை அது சம்பந்தமாக ஆரம்ப முயற்சிகளைக்கூடச் செய்ததுமில்லை, தொடர்பு கொண்டதுமில்லை. இத்தனைக்கும் இந்தப்பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் அவர்களது மாணவப்பருவ காலங்களிலிருந்தே என்னுடைய நண்பர்கள், இலக்கியக் கூட்டாளிகள், எமது போராட்ட இணைப்பில் வளர்ந்தவர்கள், மல்லிகையில் தொடர்ந்து எழுதி வந்தவர்கள். இதுதான் என்னவென்று எனக்கு இதுவரை விளங்கவில்லை. பெரிய ஆச்சரியம்.'(டொமினிக் ஜீவா,xiii,2001, எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்)
கூத்து மீளுருவாக்கம் எனும் பங்குகொள் ஆய்வுச்செயற்பாடும் காலனிய நீக்கத்திற்கான முன்னெடுப்புக்களும்:
ஈழத்தில் 2002,2003 ஆம் வருடங்களில் மட்டக்களப்பு சீலாமுனைக் கிராமத்தில் கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறை விரிவுரையாளர் கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட கூத்து மீளுருவாக்கத்திற்கான பங்குகொள் ஆய்வுச் செயற்பாட்டினூடாக காலனிய நோக்கிலிருந்து விலகி கூத்தரங்கின் பல்பரிமாணங்களையும் அறிந்து கொள்ள வேண்டியதன் அவசியம் உரையாடலுக்குக் கொண்டுவரப்பட்டது. உதாரணமாக கூத்து என்பது ஒரு சமுதாய ஆற்றுகைக்கலையாகும் என்பதும், கூத்தரங்கின் அழகியல் பல்பரிமாணங்கள் கொண்டது என்பதும், கூத்தரங்கின் ஆளுமைகளின் முக்கியத்துவம் பற்றியும், பாரம்பரியக் கலைகள் இன்றைய காலத்தில் பெறும் முக்கியத்துவங்கள் பற்றியும் பல்வேறு புதிய சிந்தனைகள் இக்கூத்து மீளுருவாக்கத்திற்கான பங்குகொள் ஆய்வினூடாக மேற்கிழம்பியது.
கூத்தைச் சமுதாய நிறுவனமாகவும் அதன் அம்சங்களான பங்குபற்றல் தன்மை, செயல்மையம் நினைவாற்றல் முதன்மைப்படுத்தப்பட்ட அரங்கச் செயற்பாடாகவும் (ஜெயசங்கர்.சி,பக் 27,2011,மதுரை) இனங்காட்டிய இவ்வாய்வு பாரம்பரியக்கலைஞர்களை காலனிய நோக்கிலிருந்து வேறுபடுத்தியும் காட்டியது. அதாவது ‘பல்கலைக்கழக ஆய்வாளர்தம் ஆய்விற்கு தகவல்வழங்கிகளாகவும், கூத்தைச்செம்மைப்படுத்தும், நவீனமயப்படுத்தும், மீட்டெடுக்கும் அறிஞர்தம் கலைப்பணிக்கு சம்பளத்திற்கு மத்தளம் அடிப்பவர்களாகவும், ஆட்டங்கள் பாட்டுக்களைப் பயிற்றுவிப்பவர்களாகவும், நிதி வழங்கல் நிறுவன உதவியில் இயங்கும் கலை நிறுவனங்களில் ஊழியத்திற்காக வாங்கப்பட்டவர்களாகவும் உள்ள பாரம்பரியக் கூத்துக்கலைஞர் தங்களுக்காக தாங்களே சமூதாயமாக இயங்கிவந்த பாரம்பரியத்தன்மையை மீட்டுக்கொள்ளவும், சமகாலத்திற்குரிய வகையில் பாரம்பரியமாக கட்டமைக்கப்பட்டு வந்த விழுமியங்களை உரையாடலுக்குக் கொண்டு வந்து (உதாரணம்: சாதி பெண் ஏற்றத்தாழ்வுகள்) அவர்களது சூழலில் அவர்களாலேயே முன்னெடுக்கப்படும் வகையிலான கலைச்செயற்பாட்டு எத்தனந்தான் கூத்து மீளுருவாக்கமாகும்.(ஜெயசங்கர்.சி,பக் 27,2011,மதுரை) என எடுத்துக்காட்டியது.
வருகைதரு கலைஞர்களாக பாரம்பரிய அண்ணாவிமார்கள்:
மேற்படி கூத்துமீளுருவாக்கம் எனும் பங்குபற்றல் ஆய்வுச்செயற்பாடு பாரம்பரியக் கூத்தரங்கின் கற்றல் அணுகுமுறையில் காலனிய நீக்கத்துடனான நடவடிக்கைகளுக்கு வழியேற்படுத்தியதைத் தொடர்ந்து. இலங்கை கிழக்குப்பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறையில் நாடகம் மற்றும் நுண்கலைகளைக் கற்கும் மாணவர்கள் பாரம்பரிய அண்ணாவிமார்களின் வழிப்படுத்தலில் கூத்தினைப் பயின்று அதில் தேர்ச்சி பெறுவதற்கான கலைத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதன் காரணமாக பாரம்பரியக் கலைஞர்கள் குறிப்பாக அண்ணாவிமார்கள் பல்கலைக்கழகம் வந்து மாணவர்களுக்கு கூத்துக்களைக் கற்பிக்கும் வசதிகள் செய்யப்பட்டன. 2010 ஆம் ஆண்டிலிருந்து இந்த நடைமுறை மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. சமகாலத்திற்குப் பொருந்தக்கூடிய பாரம்பரியக் கூத்துக்களும், காலத்தேவை கருதி புதிதாக ஆக்கப்பட்டவை எனப்பல கூத்துக்களும் பல்கலைக்கழகத்தில் கடந்த ஒரு தசாப்த காலத்தில் ஆடப்பட்டு வந்துள்ளன.
இதேபோல் கிழக்குப்பல்கலைக்கழகத்தின் ஓரங்கமாகவுள்ள சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கைகள் நிறுவகத்திலும் நடன நாடகத் துறையில் நாடகத்தில் சிறப்புக்கற்கையினைத் தொடரும் மாணவர்களும் பாரம்பரியக்கலைஞர்களின் பயிற்றுவிப்பில் கூத்துக்களைப் பயின்று அரங்கேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இச்செயற்பாட்டிலும் பாரம்பரியக் கலைஞர்கள் குறிப்பாக அண்ணாவிமார் வளவாளர்களாக பல்கலைக்கழகம் சென்று கற்பிக்கும் வாய்ப்பு வசதிகள் உருவாக்கப்பட்டிருந்தன. இதன் தொடர்ச்சியாக 2016 இன் பின்னர் கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்கள் பணிப்பாளராக குறித்த அழகியற்கற்கைகள் நிறுவகத்தில் பணியாற்றிய காலத்தில் பல்கலைக்கழகத்தின்; செய்முறைக் கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக வரும் பாரம்பரியக்கலைஞர்கள் வருகைதரு கலைஞர் எனும் உத்தியோகபூர்வ அழைப்பினூடாக உள்ளெடுக்கப்படும் நிலைமை உருவாக்கப்பட்டு தற்போது நாடகத்துறையில் பாரம்பரியக் கலைகளைப் பயிற்றுவிக்க வரும் பாரம்பரியக் கலைஞர்கள் வருகைதரு கலைஞர்கள் எனும் அங்கீகாரத்துடன் அழைக்கப்பட்டு அவர்களது செயல்முறைக் கற்பித்தல் சேவைகள் பெறப்பட்டு வருகின்றன.
முடிவுரை:
இவ்வாறாக ஈழத்தில் கிழக்குப்பல்கலைக்கழகத்தின் நாடக அரங்கக் கற்கையில் பாரம்பரியக்கலைஞர்கள் வருகைதரு கலைஞர்களாக வரவழைக்கப்பட்டு அவர்களூடாக மாணவர்கள் பாரம்பரியக்கலைகளைப்பயின்று அவற்றில் தேர்ச்சி பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தற்காலத்தில் மூன்றாம் உலகநாடுகளில் முனைப்புப்பெற்றுவரும் காலனிய நீக்கத்திற்கான செயற்பாடுகளின் ஒரு வெளிப்பாடாகவே அமைந்துள்ளது எனலாம்.
ஆதாரங்கள்
01.ஆபிரிக்காவில் நீகாலனியம்: புதிய உலக ஓழுங்குக்கான ஒரு தொடர் தேடல் – கட்டுரை
சாபெல்லோ ஜே. என்டிலோவு கற்செனி, மாஃபெஜி ஆய்வு நிறுவனம், தென்ஆபிரிக்கப் பல்கலைக்கழகம், தமிழில் மொழி பெயர்ப்பு: சா.திருவேணிசங்கமம்
2. கூத்து மீளுருவாக்கம் ஈழக்கூத்தின் புதிய பரிமாணம், சி.ஜெயசங்கர், கருத்து = பட்டறை, மதுரை
3. எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம், டொமினிக் ஜீவா,xiii,2001
4. சுருதி, ஆய்விதழ், சுவாமி விபுலானந்தர் அழகியற்கற்கைகள் நிறுவகம்,2009
5. உயிர்மை, ஜீன் 2019, இதழ் 190
6. நாடகம் அரங்கியல் – பழையதும் புதியதும், மௌனகுரு.சி,2007 #கற்பித்தல்முறைமை #உயர்கல்வித்துறை #கௌரீஸ்வரன் #காலனித்துவ