உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பாடும் நிலா பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாா்
புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஓகஸ்ட் 5-ம் திகதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்பட்ட சில நாட்களில் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததனால் அவரை அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி தொடா்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
பின்னர் படிப்படியாக உடல்நிலை தேறி வந்த நிலையில், நேற்று அவர் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.
.
இந்நிலையில், இன்று பிற்பகல் 1.04 மணிக்கு அவா் காலமானதாக இயக்குனர் வெங்கட் பிரபு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம், கடந்த 1946-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் நெல்லூரில் பிறந்தார். பாடகர், இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் எஸ்.பி.பி. நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது #கின்னஸ் #பாடகர் #எஸ்பிபாலசுப்ரமணியம் #காலமானாா் #கொரோனா #பாடும்நிலா