இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளுக்கு எதிராக காத்திரமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இலங்கை கடற்றொழிலாளர்களினால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் முடிவுகட்டப்படும் என்று தெரிவித்தார்.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் பிரதமாின் அழைப்பின் அடிப்படையில் வடக்கு கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (25.09.2020) அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டும் செயற்பாடு தொடர்பாக இன்று இடம்பெறவுள்ள இலங்கை – இந்திய பிரதமர்களுக்கிடையிலான காணொளி மூலமான கலந்துரையாடலில் பேசப்படவுள்ள நிலையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
இதன்போது கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை செவிமடுத்த பிரதமர், அண்மைக்காலமாக கடற்படையினரின் கொரோனா அச்சத்தினை சாதகமாக பயன்படுத்தி இந்திய மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்துள்ளது என்ற அதிகாரிகளின் கருத்தை சுட்டிக் காட்டினார்.
மேலும் இந்தியப் பிரதமருடனான இன்றைய சந்திப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளதுடன் குறித்த செயற்பாடுகள் தொடருமாயின் அவர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்ததுடன் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடற்படை தளபதிக்கும் அறிவுறுத்தியுள்ளாா்.
அதேபோன்று இலங்கை கடற்றொழிலாளர்களின் சட்ட விரோத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பதற்கான நடவடிக்கைகள் கடற்றொழில் அமைச்சினால் மேற்கொள்ளபடும் எனவும் தெரிவித்ததுடன் வடக்கு கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அனைத்திற்கும் விரைவில் நிரந்தர தீர்வு கிடைக்கும் எனவும் தெரிவித்தாா் என கடற்றொழில் அமைச்சின் ஊடகப் பிரிவு தொிவித்துள்ளது #வடக்கு #கடற்றொழிலாளர்கள் #நிரந்தரதீர்வு #இந்தியமீனவர்கள் #சட்டவிரோத #மகிந்த