Home உலகம் சட்டமும், நீதியும் வளைவதற்கல்ல – அனைவரையும் சமனாகப் பேணுவதற்கே…..

சட்டமும், நீதியும் வளைவதற்கல்ல – அனைவரையும் சமனாகப் பேணுவதற்கே…..

by admin

சிங்கப்பூர் தொழிலதிபரை பதவி விலகச் செய்த பணிப்பெண்: திருட்டு வழக்கில் நீதிக்காக போராடிய குடியேறி தொழிலாளி

பார்த்தி
படக்குறிப்பு,பார்த்தி லியானி (இடது) லியூ மன் லியோங் (வலது)

சிங்கப்பூரில் விதிமுறை மீறி வீட்டுப் பணிப்பெண்ணை வேறு வேலையில் ஈடுபடுத்திய செல்வந்த தொழிலதிபரின் குடும்பம் தொடர்ந்த திருட்டு வழக்கில், இந்தோனீசியாவைச் சேர்ந்த பார்த்தி லியானி என்ற பெண்ணை அந்நாட்டு உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இந்த வழக்கு அந்நாட்டில் வீட்டு வேலைக்கு செல்லும் குடியேறி தொழிலாளர்கள் நடத்தப்படும் விதம் தொடர்பான பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

இந்தோனீசியாவைச் சேர்ந்த வீட்டுப்பணிப்பெண்ணான பார்தி லியானி, மாதம் $600 (£ 345) வரை ஊதியம் பெற்றார். சிங்கப்பூரின் மிகப்பெரிய பணக்கார குடும்பத்தில் அவர் வேலை செய்தார். அந்நாட்டின் மிகப்பெரும் தொழில் நிறுவனங்களின் தலைர் யூ மன் லியோங்தான் அவரது முதலாளி.

ஒரு நாள் வீட்டில் உள்ள பொருட்களை திருடியதாக அவர் குற்றம்சாட்டப்பட்டார். லியோங்கின் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் தெரிவித்தனர். அந்த வழக்கு சிங்கப்பூரில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. ஆடம்பர பைகள், டிவிடி பிளேயர், ஆடைகள் போன்றவற்றை திருடியதாக பார்தி லியானி மீது குற்றம்சாட்டப்பட்டது.

ஆனால், இந்த மாத தொடக்கத்தில் மேல்முறையீட்டு வழக்கில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

கடைசியில் நான் விடுதலையானதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் செய்தியாளர்களிடம் பேசிய பார்த்தி லியானி தெரிவித்தார்.

“இந்த வழக்குக்காக நான்கு ஆண்டுகள் போராடினேன்” என்று அவர் கூறினார்.

கேள்விகளை எழுப்பிய வழக்கு

ஆனால், பார்த்தி லியானியன் இந்த வழக்கு, சிங்கப்பூரில் பணியாளர்கள் சமநிலையற்று நடத்தப்படுகிறார்களா, பணியிடங்களில் அவர் திருடியதாக சுமத்தப்பட்ட குற்றம் எதன் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டது போன்ற கேள்விகள் பரவலாக எழுப்பப்பட்டன.

2007ஆம் ஆண்டு முதல் பார்த்தி லியானி, தொழிலதிபர் லியூ மன் லியோங்கின் வீட்டில் பணியாற்றினார். அங்கே அவரது மகன் கார்ல் உள்ளிட்ட பல குடும்பத்தினரும் வசித்தனர்.

2016ஆம் ஆண்டு மார்ச் மாதம், கார் லியூ, தனது குடும்பத்துடன் வேறு வீட்டுக்கு குடிபெயர்ந்தார்.

அந்த புதிய வீட்டை சுத்தப்படுத்த பல தருணங்களில் பார்த்தி லியானி கட்டாயப்படுத்தப்பட்டதை விவரிக்கும் பல நிகழ்வுகளுக்கான ஆதாரங்கள் நீதிமன்ற விசாரணையின்போது தாக்கல் செய்யப்பட்டன.

சிங்கப்பூரில் ஒப்பந்தம் செய்யப்படும் பணியாளர்கள், வேறு பணியில் ஈடுபடுத்தப்படுவது சட்டப்படி குற்றம். இது குறித்து ஏற்கெனவே பார்த்தி லியானி புகார் கூறியிருந்தார்.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு பிறகு பார்த்தியை அழைத்து தங்களின் பொருட்கள் திருடுபோனதாக எழுந்த சந்தேகத்தின்பேரில் அவரை வேலையில் இருந்து நீக்குவதாக லியூவின் குடும்பம் தெரிவித்தது.

ஆனால் பார்த்தி, “ஏன் இப்படி செய்கிறீர்கள் என தெரியும். ஏனென்றால் உங்களுடைய கழிவறையை நான் சுத்தப்படுத்த மறுத்தேன்” என்று கார்ல் லியூவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பாரத்தி
படக்குறிப்பு,வேலை செய்யாத பொருளாக கருதி பார்த்தி உடைமையில் வைத்துக் கொண்ட டிவிடி பிளேயர்

வேலையை விட்டு நிறுத்திய குடும்பம்

இதையடுத்து அவரது உடைமைகளை அட்டை பெட்டிகளில் அடுக்க இரண்டு மணி நேரம் அவகாசம் வழங்கிய லியூவின் குடும்பத்தினர், அவற்றை இந்தோனீசியாவுக்கு அனுப்பி வைப்பதாக கூறினர். அதே நாள் பார்த்தி, தாயகத்துக்கு விமானத்தில் புறப்பட்டார்.

உடைமைகளை அடுக்கும்போது, கார்ல் லியூவின் வீட்டை விதி மீறி சுத்தப்படுத்தக் கூறியது பற்றி சிங்கப்பூர் அதிகாரிகளிடம் புகார் தெரிவிப்பேன் என்று பார்த்தி கூறியிருக்கிறார்.

இந்த நிலையில், பார்த்தி புறப்பட்ட பிறகு அவரது உடைமைகளை சோதனையிட முடிவெடுத்த லியூவின் குடும்பம், அதில் தங்களுக்கு சொந்தமான பொருட்கள் இருப்பதாக கூறி அக்டோபர் 30ஆம் தேதி காவல்துறையிடம் புகார் அளித்தது.

தாயகத்துக்கு வந்த ஐந்து வாரங்கள் கழித்து மீண்டும் சிங்கப்பூருக்கு வேலை தேடிச் சென்ற பார்த்தி, விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார்.

குற்றவியல் நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டதால் வேறு எங்கும் வேலையில் சேர முடியாத நிலையில், குடியேறிகளின் தங்குமிடத்தில் வசித்த அவர், உணவு, நிதி தேவைக்காக அங்குள்ளவர்களை சார்ந்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

உடைமைகளில் என்ன இருந்தன?

பார்த்தி லியானி, லியூ குடும்பத்துக்கு சொந்தமான 115 பொருட்களை திருடியதாக குற்றம்சாட்டப்பட்டார். அதில், ஆடம்பர துணிமணிகள், கைப்பைகள், டிவிடி பிளேயர், ஜெரால் ஜென்டா ரக கைக்கடிகாரம் போன்றவை இருந்தன. அவற்றின் மதிப்பு S$34,000 என்று கூறப்பட்டது.

விசாரணையின்போது, காவல்துறை காண்பித்த பொருட்களில் பல தன்னுடையது என்றும் பல பொருட்கள் தேவையில்லை என தூக்கி வீசப்பட்டிருந்த பொருட்கள் என்றும் அவற்றை தான் தமது உடைமைகள் அடங்கிய பெட்டிகளில் வைக்கவில்லை என்றும் பார்த்தி கூறினார்.

2019இல் மாவட்ட நீதிபதி விசாரித்த இந்த வழக்கில் பார்த்திக்கு இரண்டு ஆண்டுகள் மற்றும் இரண்டு மாதங்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அந்த தீர்ப்பை எதிர்த்து பார்த்தி மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கு மேலும் சில மாதங்கள் நீடித்தன. கடைசியில், சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது.

அந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற நீதிபதி சான் செங் ஒன், வீட்டுப்பணிப்பெண் பார்த்தி மீது பொறுப்பற்ற நோக்குடன் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கை காவல்துறை, அரசு வழக்கறிஞர், மாவட்ட நீதிபதி கையாண்ட விதம் சரியல்ல என்று கூறினார்.

மேலும், லியூ குடும்பத்தினர் சட்டவிரோதமாக கார் லியூவின் வீட்டை சுத்தப்படுத்த அனுப்பியதாக காவல்துறையில் பார்த்தி புகார் தெரிவிக்கும் முன்பாகவே, அவருக்கு எதிராக முந்திக்கொண்டு லியூவின் குடும்பம் காவல்துறையில் புகாரை பதிவு செய்திருக்க காரணம் உள்ளது என நிரூபணமாகியிருப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

பார்த்தி வீட்டில் களவுபோனதாக கூறப்பட்ட பொருட்கள், ஏற்கெனவே சேதம் அடைந்திருந்தன என்றும் அவர் திருடியதாக கூறப்பட்ட கைக்கடிகாரத்தில் கூட திருகல் கம்பி இல்லை என்றும், இரண்டு ஐபோன்கள் வேலை செய்யாத நிலையில் இருந்ததாகவும் நீதிபதி கண்டறிந்தார். பயனற்ற நிலையில் வேலை செய்யாத அந்த பொருட்களை ஒருவர் திருடினார் என கூறுவது அசாதாரணமாக உள்ளது என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

வழக்கு விசாரணையின்போது டிவிடி பிளேயர் எப்படி உங்களுடைய பைக்குள் வந்தது என கேட்டபோது, அதை லியூ குடும்பத்தினர்தான் வேலை செய்யவில்லை என தூக்கி வீசினார்கள் என்று பார்த்தி கூறியிருக்கிறார்.

அந்த டிவிடி பிளேயர் வேலை செய்யவில்லை என்பதை பிறகு அறிந்து கொண்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார். இந்த செயல்பாடு, குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு எதிராக நீதிக்கு புறம்பான வகையில் விசாரணை நடத்தப்பட காரணமாகியிருப்பதாக நீதிபதி சான் கூறினார்.

இந்த வழக்கில் தொழிலதிபர் லியூவின் மகன் கார்ல் லியூவை சாட்சியாக சேர்த்ததை சுட்டிக்காட்டிய நீதிபதி, அவரது நம்பகத்தன்மை கேள்விக்குரியதாகிறது என்று தெரிவித்தார்.

மற்றொரு ஆதாரமாக லியூவின் இளைய மகன் லண்டனில் இருந்து தான் வாங்கி வந்த பிங்க் நிற கத்தி சிங்கப்பூருக்கு 2002இல் கொண்டு வரப்பட்டதாக தெரிவித்திருந்தார். ஆனால், வழக்கு விசாரணையின்போது, அந்த கத்தியின் நவீன வடிவமைப்பை வைத்து, 2002ஆம் ஆண்டுக்கு முன்னர் பிரிட்டனில் அது தயாரிக்கப்படவில்லை என்பது நிரூபணமானது. இதனால் அவரது சாட்சியமும் செல்லுபடியாகவில்லை.

வழக்கறிஞர் பால்சாந்தியுடன் பார்த்தி
படக்குறிப்பு,வழக்கறிஞர் பால்சாந்தியுடன் பார்த்தி

பார்த்தியின் உடைமைகளில் சில ஆடம்பர பெண்களின் உடைமைகள் இருந்தது பற்றி கூறிய லியூவின் இளைய மகன், அவை தன்னுடையவை என்று கூறினார். ஆனால், ஒரு பெண்ணின் உடைமை எப்படி உங்களுடையதாகும் என நீதிபதி வினவியபோது, எனக்கு எதிர் பாலினத்தவரின் உடைமைகள் பிடிக்கும் என்று அவர் பதிலளித்தது, நம்ப முடியாத வகையில் உள்ளது என்று நீதிபதி சான் தெரிவித்தார்.

இந்த வழக்கில் புகார் அளிக்கப்பட்ட பிறகும், சம்பவ இடத்தில் பார்த்தியின் உடைமைகளை சரிபார்க்க காவல்துறையினர் ஐந்து வாரங்களுக்கு பிறகே சென்ற நடவடிக்கை குறித்தும் நீதிபதி சான் கேள்வி எழுப்பினார்.

மேலும், வழக்கு விசாரணையின்போது பார்த்திக்கு விதிகளின்படி இந்தோனீசிய மொழி பெயர்ப்பாளரை வழங்காமல் மலாய் மொழி பேசும் நபரை ஏற்பாடு செய்ததும் தவறான நடவடிக்கை என்று நீதிபதி சான் தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்தார்.

“இந்த விவகாரத்தில் காவல்துறை நடந்து கொண்ட விதம் மிகவும் கவலை தருகிறது” என்று சிங்கப்பூர் மேலாண் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியர் இயூஜீன் டான் பிபிசியிடம் தெரிவித்தார்.

“இந்த வழக்கை மாவட்ட நீதிபதி அனுமானத்தின் அடிப்டையில் விசாரித்திருப்பது போல தோன்றுகிறது என்றும் சாட்சியங்களை அரசு வழக்கறிஞரும் காவல்துறையினரும் சரியாக உறுதிப்படுத்த தவறியதாக தோன்றுகிறது” என்றும் பேராசிரியர் இயூஜீன் கூறினார்.

குடியேறி தொழிலாளர்கள் சிங்கப்பூரில் நடத்தப்படும் நிலை, இந்த வழக்கு மூலம் தேசிய கவனத்தை ஈர்த்தது.

ஏழைகளையும் சக்தியற்றவர்களையும் செல்வந்தர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்றாற் போல பயன்படுத்தி, தங்களுக்கென விதிகளை வகுத்து பணக்கார சமூகம் செயல்படுவதாக பலரும் கருத இந்த வழக்கு வாய்ப்பாக அமைந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பு பொதுவெளிக்கு வந்த பிறகு, சிங்கப்பூரின் பல்வேறு மதிப்புமிகு நிறுவனங்களின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக லியூ மன் லியோங் அறிவித்தார்.

இது தொடர்பான அவரது அறிக்கையில், “சிங்கப்பூர் உயர் நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறேன். நீதித்துறை மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறேன். ஆனால், தவறு நடப்பதாக சந்தேகம் எழும்போது அதுபற்றி காவல்துறையிடம் புகார் அளிப்பது எனது சமூக கடமை என உண்மையாக நான் நம்பினேன்” என்று கூறியுள்ளார்.

இதேசமயம், இந்த விவகாரத்தில் அவரது மகன் கார்ல் லியூ இதுவரை எந்த அறிக்கையையும் வெளியிடாமல் மெளனம் காத்து வருகிறார்.

உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த சிங்கப்பூர் சட்டம் மற்றும் உள்துறை விவகாரங்கள் அமைச்சர் கே. சண்முகம், “குற்றச்சாட்டுகளின் தொடர்களை விசாரிப்பதில் எங்கோ தவறு நடந்திருக்கிறது என்பது புரிகிறது” என்று தெரிவித்தார்.

இந்தோனீசியாவை சேர்ந்த பார்த்தி, சிங்கப்பூரில் தங்கியிருந்து வழக்கை எதிர்கொள்ள அரசு சாரா அமைப்பான “ஹோம்” உதவியது.

பார்த்திக்காக இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் அனில் பால்சந்தி, கட்டணம் வசூலிப்பதாக இருந்தால், பார்த்தி S$150,000 வரை செலுத்தியிருக்க வேண்டும் என்று மதிப்பிடுகிறார்.

சிங்கப்பூரில் சட்ட சிக்கல்களை எதிர்கொள்ளும் குடியேறி தொழிலாளர்களுக்கு சட்ட உதவிகள் கிடைக்கும்.

ஆனால், தங்கள் குடும்பத்தின் ஒரே வருவாய் ஈட்டும் நபராக வெளிநாட்டில் வேலைக்கு வரும் தொழிலாளர்கள், பெரும்பாலும் நீதிமன்றம்வரை சென்று வழக்காட முடியாதவர்களாக இருக்கிறார்கள். அப்படியே தொடர்ந்தாலும், அவர்களால் மாதக்கணக்கில் அல்லது வருடக்கணக்கில் வருவாயின்றி வழக்காட முடியாது என்று ஹோம் என்ற அரசு சாரா அமைப்பு கூறுகிறது.

மறுபுறம், சட்டப்போராட்டத்தில் வெற்றி பெற்ற பார்த்தி, “இனி நான் எனது தாயகத்துக்கு திரும்புவேன்” என்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.

“எனது முன்னாள் முதலாளியை மன்னித்து விட்டேன். இனி வேறு எந்த தொழிலாளர்களுக்கும் இதுபோல செய்யாதீர்கள் என்பதுதான் நான் அவர்களுக்கு விடுக்கும் ஒரே செய்தி” என்று பார்த்தி தெரிவித்தார்.

  • ஈவெட் டான்
  • பிபிசி நியூஸ், சிங்கப்பூர் 23 செப்டெம்பர் 2020

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More