ரஷ்ய எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸே நவால்னி குற்றச்சாட்டு –
தனக்கு விஷம் கொடுக்கப்பட்டதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினே பொறுப்பு என தான் நம்புவதாக ரஷ்யாவின் முன்னணி எதிர்க்கட்சி தலைவரான அலெக்ஸே நவால்னி தெரிவித்துள்ளார்.
“இந்தச் செயலுக்குப் பின்னால் புட்டின் உள்ளார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். வேறு எந்த விளக்கமும் எனக்குத் தெரியவில்லை” என ஜெர்மனிய இதழான டெர் ஸ்பீகலுக்கு அளித்த ஒரு பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஓகஸ்ட் மாதம் 20ஆம் தேதி, சைபீரியாவில் இருந்து மொஸ்கோவுக்கு விமானத்தில் சென்றபோது திடீரென நவால்னி மயங்கி விழுந்தார். இதனால், ஓம்ஸ்க் நகரில் அந்த விமானம் தரையிறக்கப்பட்டது. இதையடுத்து, அவசரஊர்தி விமானத்தில் ஜெர்மனி அழைத்துச் செல்லப்பட்ட நவால்னிக்கு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. நச்சு வேதிப்பொருள் தாக்கத்துக்கு ஆளானதாக கண்டறியப்பட்ட அவர் சென்ற மாதம் கோமா நிலையிலிருந்து மீண்டதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த பேட்டி வெளிவந்துள்ளது.
நோவிசோக் எனப்படும் நரம்பு மண்டலத்தை தாக்கக்கூடிய ரசாயன தாக்குதலுக்கு தான் ஆளாக்கப்பட்டதாக நவால்னி குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த நிலையில், இவரது கூற்றானது பிரான்ஸ் மற்றும் ஸ்வீடனிலுள்ள ஆய்வகங்களில் நடத்தப்பட்ட பரிசோதனையின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த சம்பவத்துக்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என ரஷ்யாவின் ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது.
நவால்னியின் நேரடி குற்றச்சாட்டு குறித்து பதிலளித்துள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புதினின் செய்தித்தொடர்பாளர், நோவிசோக் நச்சு ரசாயன தாக்குதலுக்கு நவால்னி உட்படுத்தப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லையென்றும், இதுதொடர்பாக அவருடன் சேர்ந்து சிஐஏ அதிகாரிகள் விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜெர்மானிய நேரப்படி, வியாழக்கிழமையன்று வெளிவந்துள்ள நேர்காணலில், நோவிசோக் நச்சு ரசாயனத்தை பயன்படுத்துவதற்கான உத்தரவை ரஷ்யாவின் மூன்று உளவு அமைப்புகளின் தலைவர்கள் மட்டுமே பிறப்பிக்க முடியுமென்றும், அவர்கள் அனைவருமே புடினுக்கு கீழே பணிபுரிபவர்கள்தான் என்றும் நவால்னி தெரிவித்துள்ளார்.
“ஒருவேளை அந்த நச்சு ரசாயனத்தை குறிப்பிட்ட மூன்று அதிகாரிகள் மட்டுமின்றி மேலும் பலர் பயன்படுத்த அதிகாரம் கொண்டிருந்தால் அது உலகுக்கே ஒரு அச்சுறுத்தல்” என்று 44 வயதாகும் நவால்னி தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, டாம்ஸ்க் விமான நிலையத்தில் நவால்னி அருந்திய தேநீரில் விஷம் கலக்கப்பட்டிருந்ததாக அவரது ஆதரவாளர்கள் நம்பினர். பின்னர், நவால்னி முந்தைய இரவு தங்கியிருந்த விடுதியின் தண்ணீர் பாட்டில்களில் நச்சு ரசாயனத்தின் தடயங்கள் கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.