பிரான்ஸின் பாரிஸில் இடம்பெற்ற வன்முறையில் இலங்கை பூர்விகத்தைக் கொண்ட தமிழர்கள் ஐவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஐவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக பாரிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸின் தலைநகரான பாரிசிற்கு அருகிலுள்ள Noisy-le-Sec நகரில் இன்று சனிக்கிழமை (03.10.20) காலை இடம்பெற்ற வன்முறை காரணமாக, கொல்லப்பட்ட மற்றும் படுகாயமடைந்த அனைவரும் யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயைச் சேர்ந்தவர்கள் எனவும், கொல்லப்பட்டவர்களில் கைக்குழந்தை ஒன்று, நான்கு வயதுக் குழந்தை ஒன்று, 14 வயதுடைய சிறுவர்கள் இருவர், 18 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Noisy-le-Sec, (Seine-Saint-Denis) நகரின் rue Emmanuel Arago வீதியில் ஒன்றாக வாழ்ந்து வந்த இரு குடும்பங்களுக்கு இடையில் இடம்பெற்ற முரண்பாடுகளின் விளைவாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளன.
சம்பவ இடத்தில் பாரிஸ் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு உள்ளனர். சம்பவ இடத்தில் இருந்து சடலங்களை எடுத்துச் செல்லும் வாகனம் சடலங்களை வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்றுள்ளதுடன், படுகாயம் அடைந்தவர்களை நோயாளா் காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடைபெற்றவுடன், கொலை நடைபெற்ற இடத்திலிருந்து, படுகாயமடைந்த நிலையில் தப்பிச் சென்ற சிறுவர் ஒருவர் இந்த வீதியில் உள்ள மதுச்சாலை ஒன்றுக்கு சென்று உதவிக்குழுவை அழைக்கும் படி கோரியுள்ளார்.
தனது மாமா என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொலை செய்துவிட்டார் என மதுபானச்சாலையின் நிர்வாகியிடம் அந்தச் சிறுவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சம்பவ இடத்துக்கு சில நிமிட இடைவெளியில் சென்ற காவல்துறையினர், சம்பவ இடத்தை அடைந்து விசாரணைகளை ஆரம்பித்தனர்.
மரணமடைந்தவர்களில் சிறுவர்களும் உள்ளனர் என காவல்துறையினர் உறுதிப்படுத்தினர். “சம்பவ இடம் மிகவும் பயங்கரமாக இருந்தது. எங்களில் பலர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். கத்தி ஒன்றும் பெரிய சுத்தியல் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது” என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடத்திய நபர் சம்பவ இடத்தில் நினைவிழந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும், இவர்கள் அனைவரும் இலங்கையர்கள் எனவும் பிரெஞ்சு காவல்துறையினர் தெரிவித்தனர். விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் கொலைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.