நாட்டில் எழுந்துள்ள கொரோனாப் பெருந்தொற்றுப் பரவல் அச்சுறுத்தல் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஸ்திரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்தார்.
நாட்டில் எழுந்துள்ள கொரோனாப் பெருந்தொற்றுப் பரவல் அச்சுறுத்தலையடுத்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி மீளாய்வு செய்வதற்கான கலந்துரையாடல் நேற்று மாலை, துணைவேந்தர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் நல்லூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, பதிவாளர், அனைத்துப் பீடங்களினதும் பீடாதிபதிகள், சிரேஷ்ட மாணவ ஆலோசகர், மாணவர் நலச் சேவைகள் உதவிப் பதிவாளர் உட்படப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பரிசோதனைகளை நெறிப்படுத்தும் வகையிலும், பீடாதிபதிகளை ஒருங்கிணக்கும் வகையிலும், யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் சமுதாய மருத்துவத் துறையைச் சேர்ந்த மருத்துவர் எஸ். சுரேந்திரகுமாரன் செயற்படவுள்ளார் என்று துணைவேந்தர் மேலும் தெரிவித்தார். #யாழ்பல்கலை #கொரோனா #முன்னெச்சரிக்கை #சிறிசற்குணராஜா