இலங்கை பிரதான செய்திகள்

புலஸ்தினி உயிருடன் இருப்பதாக தகவல் வழங்கியவருக்கு அச்சுறுத்தல்

சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் சம்பந்தப்பட்டவர் என கூறப்படும்  சாரா என்ற  புலஸ்தினி உயிருடன் இருப்பதாகவும் தான் அவரை கண்டதாக   தகவல் வழங்கிய நபருக்கு இனந்தெரியாதவர்கள் அச்சுறுத்தல் விடுப்பதாக கல்முனை நீதிமன்ற நீதிவானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் 16 பேரின் உடற் பாகங்களையும் குடும்ப உறுப்பினர்களின் மரபணு பரிசோதனை அறிக்கைகளை கொண்டு பகுப்பாய்வு செய்ததில் சந்தேகத்திற்கிடமாக தேடப்படும்  சாரா எனப்படும் புலஸ்தினி மகேந்திரன் என்பவரின் மரபணுபரிசோதனை அறிக்கை(DNA) பொருந்தவில்லை என மன்றில்  தெரிவிக்கப்பட்டதை  அடுத்து அவர் தப்பி சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய  மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு விசாரணையை தொடர்ந்து தற்கொலை குண்டுத்தாக்குதல் இடம்பெற்று சில தினங்களுக்கு பின்னர் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் எல்லைக்குட்பட்ட புறநகர் பகுதி ஒன்றில் சாரா என்றழைக்கப்படும் புலஸ்தினி என்பவரை கண்டதாக 43 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பாதுகாப்பு தரப்பினரிடம் தகவல் ஒன்றினை வழங்கி இருந்தார்.

இவ்வாறு தகவல் வழங்கிய குறித்த நபருக்கு தற்போது இனந்தெரியாதோரினால் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக சட்டத்தரணி ஒருவர் ஊடாக  ஒக்டோபர் மாதம்  திங்கட்கிழமை (5)  அன்று கல்முனை நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் தனக்கு நிகழ்ந்த அச்சுறுத்தல் விடயமாக நீதிவானுக்கு மூடிய அறையில் வாக்குமூலம் ஒன்றினை வழங்கி இருந்தார்.

இதற்கமைய குறித்த விடயத்தை  விசாரணை செய்த நீதிவான் மேலதிக நடவடிக்கை ஒன்றை எடுப்பதற்காக  எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.

இதே வேளை சஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 12  சந்தேக நபர்களை  மீண்டும் ஒக்டோபர்  மாதம் 19 ஆம்   ஆம் திகதி வரை  விளக்கமறியலில்  வைக்குமாறு  கல்முனை நீதிமன்று உத்தரவிட்டது.

குறித்த வழக்கு  திங்கட்கிழமை(05)   அன்று அம்பாறை மாவட்டம்  கல்முனை நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் இரு வேறு சந்தர்ப்பங்களில்  விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்ட போது  வீடியோ கன்பிரன்ஸ்(காணொளி) ஊடாக  சந்தேக நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து குறித்த 12 சந்தேக நபர்களையும் மீண்டும் எதிர்வரும் ஒக்டோபர்  மாதம் 19  ஆம் திகதி வரை விளக்கமறியலில்   வைக்குமாறு உத்தரவிட்டார்.

 குறித்த விசாரணையின் போது மேலதிக அறிக்கைகள் பொலிஸாரினால்   தாக்கல் செய்யப்பட்டு  மீண்டும் சந்தேகநபர்கள்   விசாரணைக்காக மீண்டும்  விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.மேலும் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதி ஒன்றில் வைத்து கடந்த வருடம்  மேற்குறித்த  12 சந்தேக நபர்களும்   கைதாகி இருந்தமை  குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம்   உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவரான சஹ்ரான் ஹாசீம் தலைமையில் பல்வேறு இடங்களில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்ததோடு அதனை தொடர்ந்து ஏப்ரல் 26 அன்று அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு தாக்குதல் சம்பவத்தின் பின்னர் குறித்த அமைப்புடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நாட்டின் நாலாபுறமும் பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. #புலஸ்தினி #அச்சுறுத்தல் #சாரா #சாய்ந்தமருது #மரபணுபரிசோதனை #சஹ்ரான்

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.