தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க சரியான சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்றாலும், அவற்றை மீறும் நிறுவனங்களுக்கு எதிராக சட்டத்தை அமல்படுத்தும் திறன் சுகாதார அதிகாரிகளுக்கு இல்லை என்பது தெரியவந்துள்ளது.
சர்வதேச ஆடைத் தொழிற்சாலையான பிராண்டிக்ஸில் பரவிய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு நாட்களில் 700ஐ கடந்துள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
“நாட்டில் வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகள் செல்லுபடியானவை. எனினும் அவை சட்டப்பூர்வமானவை அல்ல என்பதால் பிரச்சினைகள் காணப்படுகின்றன. நடைமுறைகளை மீறுவதற்கு எதிராக, குறிப்பாக தொழிற்சாலைகள், அரச நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் நிலையில் நாங்கள் தற்போது இல்லை.”
தொற்று நோயான கொரோனாவை கட்டுப்படுத்த மார்ச் மாதத்தில் தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான தனிமைப்படுத்தப்பட்ட சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும், இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன, இதுத் தொடர்பாக 1897ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் தொற்று நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்தின் ஊடாக இதனை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பு காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, முகமூடி அணிவது, கை கழுவுதல் மற்றும் கிருமி நீக்கம் செய்வது போன்ற வைரஸைக் கட்டுப்படுத்த வழங்கப்பட்ட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாவிட்டால் அவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யவும் வாய்ப்பு காணப்படுவதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
எந்தவொரு நபரும் தொற்று நோய் பரவாமல் தடுக்கும் வகையில் செயற்படாவிட்டால், அவருக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் காவல்துறை திணைக்களத்தினால் நேரடியாக வழக்குத் தொடர முடியுமென அவர் மேலும் கூறியுள்ளார். #நோய் #சட்டம் #சுகாதார #ஆடைத்தொழிற்சாலை #பிராண்டிக்ஸ் #உபுல்ரோஹன