மகனுக்காக ஏங்கும் தாய்மாரின் கோரிக்கையை ஏற்று மரபணு பரிசோதனை (DNA) மேற்கொள்ள நடவடிக்கை மீண்டும் எதிர்வரும் நவம்பர் 24 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை காவல்துறைப் பிரதேசத்தில் சுனாமியில் காணாமல் போன மகனை 16 வருடங்களுக்கு பின்னர் மாறுவேடத்தில் சென்று கண்டுபிடித்த தாய் என்ற செய்தி தொடர்பாக எழுந்த பிரச்சினைக்காக கடந்த ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி முறைப்பாடு ஒன்றினை வளர்ப்பு தாயான நூறுல் இன்ஷான் என்பவர் மேற்கொண்டிருந்தார்.
இதற்கமைய இன்று(7) சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.எம் றிஸ்வி முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.சம்மாந்துறை காவல்துறையினருக்கு வழங்கிய அறிக்கையை அடிப்படையாக கொண்டு விசாரணையை நீதிவான் மேற்கொண்டிருந்ததுடன் கடந்த தவணையில் மரபணுப் பரிசோதனை மேற்கொள்வதற்கான நீதிமன்றத்தினால் அழைக்கப்பட்ட இவ்விரு தாய்மார்களின் முன்னாள் கணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு மன்றுக்கு வருகை தந்த இரு கணவர்கள் இரு தாய்மார்கள் பிரஸ்தாப மகன் உட்பட அனைவரிடமும் நீதிமன்றத்தில் வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில் இறுதியாக மரபணு பரிசோதனை மேற்கொள்வது தொடா்பில் இரு தரப்பினரிடமும் சம்மதம் பெறப்பட்டது.
இருந்தபோதிலும் மரபணுப் பரிசோதனை செலவினை ஈடு செய்யக்கூடிய பொருளாதார வசதி தம்மிடம் இல்லை என சிறுவனை வளர்த்ததாக கூறும் தாய் தெரிவித்ததை அடுத்து பின்னர் அதற்கான ஆலோசனையை இருதரப்பினரும் மேற்கொண்டு வருமாறு உத்தரவிட்ட நீதவான் இரு தரப்பினரும் வாதங்களையும் ஆராய்ந்த பின்னர் மரபணு பரிசோதனைக்கு தயாராக வருமாறு கூறியதுடன் குறித்த வழக்கு எதிர்வரும் நவம்பர் 24ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.
இதன் போது சிறுவனின் வளர்ப்பு தாய் என உரிமை கோரும் நூறுல் இன்ஷான் மற்றும் சுனாமியில் மகனை பறிகொடுத்ததாக தெரிவித்த அபுசாலி சித்தி ஹமாலியா ஆகியோர் முன்னிலையாகி தத்தமது நியாயங்களையும் இம்முறையும் முன்வைத்திருந்தனர்.
இது தவிர சுனாமியில் மகனை பறிகொடுத்ததாக தெரிவித்த அபுசாலி சித்தி ஹமாலியாவிற்கு சட்டத்தரணிகள் முன்னிலையாகி இலவசமாக வாதாடினர்.
சுனாமியில் மகனை பறிகொடுத்ததாக தெரிவித்த அபுசாலி சித்தி ஹமாலியா தனது மகனை றஸீன் முஹம்மட் அக்ரம் றிஸ்கான் எனவும் வளர்ப்பு தாய் என உரிமை கோரும் நூறுல் இன்ஷான் என்பவர் முகம்மட் சியான் என பெயரிடப்பட்டுள்ளது இவ்விரு தாய்மார்களின் முன்னாள் கணவர்கள் குறித்த சிறுவனை அன்பாக அரவணைத்து பேசிக்கொண்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. #மரபணுபரிசோதனை #DNA #சம்மாந்துறை #சுனாமி