ஏழு மாதங்களுக்கு முன்னரே ஊடகவியலாளர்கள் அறிக்கையிடுவதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளபோதிலும், சில இலத்திரனியல் ஊடகங்கள் கொரோனா தொற்றுநோயைப் பற்றி பொறுப்பற்ற முறையில் செய்திகளை வெளியிடுவது சிகிச்சை அல்லது தனிமைப்படுத்தலுக்கு பொதுமக்கள் முன்னிலையாவதை தடுக்கும் என அரசாங்கம் மீண்டும் எச்சரித்துள்ளது.
தொற்றுநோயின்போது ஊடகவியலாளர்களின் பங்கு குறித்து விமர்சிக்கப்பட்டதை அடுத்து, அரசாங்கத் தகவல் திணைக்கள அதிகாரி, சில ஊடகங்கள் தனிநபர்களின் அந்தரங்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் காட்சிகளை தொடர்ந்து ஒளிபரப்பி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரச தொலைக்காட்சியான ஐடிஎன் இரண்டாவது கொரோனா அலையின் முதல் தொற்றாளரின் குடும்ப உறுப்பினர்கள் தொடர்பில் வெறுக்கத்தக்க வகையில் வெளியிட்ட செய்தித் தொடர்பில், சமூக ஊடகங்களில் தொடர்ச்சியான எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருவதாக அரச தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றின் ஊடாக வலியுறுத்தியிருந்தது.
“இந்த விடயத்தில், நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பற்றிய செய்திகளை வெளியிடும்போது, தனிமைப்படுத்தல் அல்லது வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு அழைத்துச் செல்வது தொடர்பிலான விடயங்களை அறிக்கையிடும்போதும் அந்த நபர்களின் தனியுரிமைக்கு தீங்கு விளைவிக்கும் காட்சிகளை ஒளிபரப்புவதும், அவர்களின் வீடுகள் அல்லது சுற்றியுள்ள பிரதேசங்களை காண்பிப்பதும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது”
ஒக்டோபர் 11ஆம் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாலக கலுவெவ மேலும் கூறுகையில், சில சந்தர்ப்பங்களில், நோயாளிகளின் நண்பர்களும் சமூக விரோதிகளைகப்போல் சில ஊடகங்களால் அடையாளப்படுத்தப்படுவதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுபோன்ற காட்சிகளை ஒளிபரப்புவது பொதுமக்களின் சரியான விழிப்புணர்வுக்கு பங்களிப்பு வழங்காத அதேவேளையில், சில நபர்கள் தங்கள் அந்தரங்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் காட்சிகளை சமூகமயமாக்கும் அச்சம் காரணமாக சிகிச்சை அல்லது தனிமைப்படுத்தலை நாடுவதையும் தடுக்கும் என அரசாங்கம் கருதுகின்றது.
முன்னதாக அரசாங்கத்திற்கு எதிர்ப்பு
பிராண்டிக்ஸ் தொழிற்சாலையில் இரண்டாவது தொற்றுநோய் பரவல் காரணமாக நூற்றுக்கணக்கான கொரோனா நோயாளிகளும் அவர்களது உறவினர்களும் தவறிழைத்தவர்களைப் போல், அவமானகரமான துன்புறுத்தலுக்கு உள்ளாவதாக தொழிற்சங்கங்கள் கண்டனம் வெளியிட்டிருந்தன.
”ஊடகவியலாளர்கள் தமது பொறுப்புகளை மறந்து, நெருக்கமானவர்களை குற்றவாளிகளாக காட்டும் வகையில் அறிக்கையிடுவதால், ஆடைத் தொழிலாளர்கள் வைரஸின் கடத்துனர்களாக சித்தரிக்கப்படுகின்றார்கள்.” எனவே பிராண்டிக்ஸ் தொழிற்சாலை குறித்து சுயாதீன விசாரணைக்கு அழைப்பு விடுக்குமாறு, சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது சேவை தொழிலாளர் சங்கம் கொவிட்19 ஒழிப்பிற்கு பொறுப்பான இராணுவத் தளபதிக்கு ஒரு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
”அத்தகைய ஊழியர்கள் மீது சுமத்தப்படும் இந்த குற்றச்சாட்டுகள் காரணமாக, அவர்களின் தங்குமிடம், பேருந்துப்பயணம் மற்றும் தேவைகளுக்காக கடைகளுக்கு செல்லுவது கூட தடுக்கப்பட்டுள்ளதோடு, அவர்களிக் மனக்குமுறல்கள் சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.”
பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகளைப் போல் சித்தரித்து, தனியுரிமைக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஊடகங்கள் அறிக்கையிடுவதே, இந்த நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் முன்வரத் தயங்குவதற்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக இலங்கை இளம் பத்திரிகையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
“இந்த நேரத்தில், சில ஊடகங்கள் கொவிட்19 நோய்த்தொற்று குறித்து ஆடைத் தொழிலாளர்களுக்கு பாராபட்சம் காட்டும் வகையிலும், அவர்கள் மீது சமூக வெறுப்பைத் தூண்டும் வகையிலும் அறிக்கையிட்டுள்ளன. கடந்த சில நாட்களாக கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளையும், தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்களின் வீடுகளையும், பி.சி.ஆர் பரிசோதனையை எவ்வாறு செய்வது என்பதைக் காண்பிப்பதும், அவர்களின் முகங்களைக் காண்பிப்பதும் செய்திகளாக வெளியாவதை அவதானிக்க முடிகின்றது.”
இந்த எதிர்மறையான ஊடகத்தைப் பயன்படுத்துவதற்கு எதிராக பொதுமக்கள் அதிருப்தியையும், எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் கூறியுள்ளார், மேலும் இந்த முக்கியமான கட்டத்தில் பொதுமக்களுக்கு கல்வி தெளிவூட்டுவதில் “ஊடகங்களின் சிறப்பு சமூக பணிக்கு” இது ஒரு தடையாகும்.
கொரோனா தொற்றாளர் அல்லது பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுபவர்களின் தனியுரிமை மற்றும் சமூக கௌரவத்திற்கு தீங்கு விளைவிக்கும் காட்சிகளை படமாக்குவது அல்லது ஒளிபரப்புவதைத் தடுக்க ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து ஊடக நிறுவனங்களின் தலைவர்களையும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தனிநபர்களின் அந்தரங்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் காட்சிகளைத் தொடர்ந்து ஒளிபரப்புவதை அவதானித்த அவர், எந்த ஊடக நிறுவனம் அவ்வாறு செயற்படுகின்றது என்ற தகவலை வெளியிடவில்லை.
பிராண்டிக்ஸ் கொரோனா கொத்தனி வெடிப்பு ஆரம்பித்த நாள் முதல், ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான தொற்றாளர்கள் தொடர்பில் அறிக்கையிடும் ஊடகவியலாளர்கள் ஊடாக வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அறிக்கையிடுவதற்கான வழிகாட்டுதல்கள்
முன்னதாக ஏப்ரல் மாதத்தில், தொலைக்காட்சி அலைவரிசைகள் கொரோனா வைரஸ் மற்றும் தனிமைப்படுத்தல் தொடர்பிலான செய்திகளை வெளியிடத் ஆரம்பித்த நிலையில், நாட்டின் தலைமை சுகாதார அதிகாரி, கொரோனா தொடர்பில் அறிக்கையிடலின்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் உட்பட பல பரிந்துரைகளை அறிமுகப்படுத்தியிருந்தார்.
கொரோனா தொற்றாளர்கள், நோயாளிகள் மற்றும் உயிரிழப்புகளை மேற்கோள் காட்டுவதில் இனம் அல்லது மதத்தை ஒருபோதும் குறிப்பிட வேண்டாம் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க அறிக்கையின் ஊடாக உத்தரவிட்டிருந்தார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிமுகப்படுத்திய வழிகாட்டுதல்களின்படி, கொரோனா குறித்து அறிக்கையிட உண்மையான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை மாத்திரமே பயன்படுத்தப்பட வேண்டும் எனவும், மேலும் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை “நோயாளிகள்” எனக் குறிப்பிடுவதோடு, ஏனையவர்களை ”நோய் பரப்புபவர்கள்” குறிப்பிடக்கூடாது எனக் குறிப்பிட்டிருந்தார்.
நோய் ஆபத்துத் தொடர்பில் விஞ்ஞானப்பூர்வமான தகவல்களை மாத்திரம் பயன்படுத்துங்கள். தனிப்பட்ட நபர்கள் மற்றும் பல்வேறு மூலங்கள் மூலம் கிடைக்கும் தகவல்களை வெளியிடாதீர்கள்.
தனிமைப்படுத்தலுக்கு உள்ளான நபர்கள், நோயாளர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் தொடர்பிலான புகைப்படங்களை அவர்களது (குடும்பத்தினரின்) அனுமதியின்றி பயன்படுத்தாதீர்கள்.
உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகள் தொடர்பிலான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை தெளிவின்றி பயன்படுத்துவது நல்லது.
பொதுமக்களுக்கு வெறுப்பினை ஏற்படுத்தக்கூடிய செய்திகளை வெளியிட வேண்டாம். இவை எல்லாவற்றையும் விட, பொது மக்களுக்கு எதிர்காலம் குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தும் வண்ணம் செய்திகளை வெளியிட வேண்டும்.
கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஊடகங்கள் அளித்த ஆதரவுக்கு சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் நன்றி தெரிவித்தார். #பொறுப்பற்ற #அறிக்கையிடல் #தொற்றுநோய் #தடை #ஊடகவியலாளர்கள் #தனிமைப்படுத்தல் #கொரோனா