எந்தவித குற்றச்சாட்டுகளும் இன்றி காவற்துறையினர் தன்னை கைது செய்து தடுத்து வைத்திருந்தால் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதென தெரிவித்து, வைத்தியர் ஷாபியால் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணைகள், அடுத்த வருடம் மார்ச் முதலாம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த மனு, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான எல்.டி.பி.உபுல்தெனிய, பிரீதி பத்மன் சூரசேன ஆகியோர் முன்னிலையில், நேற்று (13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, பதில் மனுக்கல் தாக்கல் செய்யப்படாததன் காரணத்தாலேயே, இந்த வழக்கு விசாரணைகளை ஒத்திவைப்பதாக, நீதியரசர் குழாம் அறிவித்தது.
குறிப்பாக கருச்சிதைவுகளை செய்ததாக தன்மீது போலியான குற்றச்சாட்டுக்கள் சுமத்தபட்டிருந்தனவென வைத்தியர் ஷாபியின் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் பிரதிவாதிகளாக, குருணாகல் குற்றத்தடுப்பு பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் பரிசோதகர் புஷ்ப லால், குருணாகல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதி காவற்துறை மா அதிபர் கித்சிறி ஜயலத், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷாணி அபேசேகர, பாதுகாப்புச் செயலாளர், சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.