உலகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டு, பாடசாலைகள் திறக்கப்பட்ட பின்பும், 1.1 கோடி சிறுமிகளால் வகுப்புகளுக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்படும் என ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அந்த அமைப்பின் தலைவா் ஆட்ரே அஸூலே (audrey azoula), தலைநகர் கின்ஷாசாவில் இதுகுறித்து செய்தியாளா்களிடம் கருத்து தெரிவிக்கையில், கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக ஏராளமான நாடுகளில் பாடசாலைகள் தொடா்ந்து மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக அந்தப் பாடசாலைகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு, அவை நிரந்தரமாக மூட வேண்டிய நிலை ஏற்படும் சூழல் உள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டாலும் உலகம் முழுவதும் 1.1 கோடி சிறுமிகள் மீண்டும் பாடசாலைக்கு திரும்ப முடியாத நிலை ஏற்படும் என்று தாம் கணக்கிட்டு உள்ளதாகவும், அதனால் மீண்டும் பாடசாலைக்குச் செல்வது குறித்த விழிப்புணா்வு பிரசாரத்தை உலகம் முழுவதும் ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பெண்களுக்கு கல்வி அளிப்பதில் பாரபட்சம் காட்டப்படுவது மிகவும் வேதனைக்குரியது ஆகும் எனக் குறிப்பிட்ட யுனஸ்கோவின் தலைவர், அவா்களுக்கு கல்வி கிடைக்கச் செய்வதே யுனெஸ்கோவின் முதன்மை நோக்கமாகும் என வலியுறுத்தி உள்ளார்.