காவற்துறை காவலில் இருந்த சந்தேகநபர் கொலை செய்யப்பட்டமை குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள கைதிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் நாட்டின் முன்னணி அமைப்பொன்று, இதுத் தொடர்பில் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென மனித உரிமைகள் ஆணைக் குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளது.
திட்டமிட்டு குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவின் தலைவரும், போதைப்பொருள் வியாபாரியுமான மாகந்துரே மதுஷ் என அழைக்கப்படும் சமரசிங்க ஆராச்சிலாகே மதுஷ் லக்சித கொலை தொடர்பாக எதிர்காலத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்படுமென கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது.
ஒரு சந்தேகநபருக்கு எதிராக எவ்வாறான குற்றச்சாட்டுகள் காணப்பட்டாலும், அவர் ஒரு பிரஜையாக நியாயமற்ற முறையில் நடத்தப்படக்கூடாது என குழுவின் தலைவரான சட்டத்தரணி, சேனக பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
அனைத்து குடிமக்களினதும் உயிர்களையும் பாதுகாப்பதாக சர்வதேச சமூகத்திற்கு உறுதி அளிக்கப்பட்டுள்ள ஒரு நாட்டில் காவற்துறைப் பாதுகாப்பில் இருந்த ஒரு சந்தேகநபரின் மரணம் அவதானம் செலுத்த வேண்டிய விடயமாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ள மனித உரிமைகள் சட்டத்தரணி, மாகந்துரே மதுஷின் உயிரிழப்பு நடந்த விதம் குறித்து காவற்துறையினர் அளித்த விளக்கம் கடும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
காவற்துறை காவலில் உள்ள ஒரு சந்தேகநபர் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு கோரும்போது, அது வரவழைக்கப்பட்ட நபர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவில்லையா என சட்டத்தரணி கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள், மகந்துரே மதுஷ் மூலம் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குழுவை வரவழைத்து அவர்களிடமிருந்து ஏராளமான ஹெரோயினை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கையை திட்டமிட்டிருந்ததாக சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
இதுபோன்ற சூழ்நிலையில் விபத்தை ஏற்படுத்துவதற்காகவே, மாகந்துரே மதுஷை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக மனித உரிமைகள் சட்டத்தரணி சேனக பெரேரா கூறியுள்ளார்.
உயிரிழந்தவர் ஒன்றரை வருடங்களாக காவற்துறைப் பாதுகாப்பில் இருந்தவர், கொழும்பு குற்றப் பிரிவைச் சேர்ந்த உதவி காவற்துறை அத்தியட்சகர் நெவில் டி சில்வா தலைமையிலான பொலிஸ் குழு வசமிருந்து தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து, தனது சகாக்களை அவர் அழைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட மாகந்துரே மதுஷின் பெயரை ஊடகங்கள் பயன்படுத்துவதையும் கேள்விக்குள்ளாக்கிய சட்டத்தரணி சேனக பெரேரா, அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், அவர் கைது செய்யப்பட்டதிலிருந்து ஒன்றரை வருடங்களுக்க மேலாக நீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை குற்றம் சாட்டப்பட்டவர் சந்தேகநபர் என சுட்டிக்காட்டியுள்ள சேனக பெரேரா, இதுபோன்ற கொலைகளால், கண்டுபிடிக்கப்பட வேண்டிய பல குற்றங்கள் அடையாளம் காணப்படாமலே போவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஏராளமான அரசியல்வாதிகளின் பெயர்கள் வெளிவருவதைத் தடுக்க மதுஷ் கொல்லப்பட்டாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
மாளிகாவத்தையில் பாதாள உலக கும்பல் உறுப்பினர்கள் குழுவுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் போதைப்பொருள் வியாபாரி மாகந்துரே மதுஷ் கொல்லப்பட்டதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மாலிகாவத்தை வீட்டுத் திட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ள 22 கிலோ போதைப்பொருளை கண்டுபிடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையின் போது ஒக்டோபர் 20ஆம் திகதி காலையில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
மாலிகாவத்தை அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள அப்பிள் வத்தை பிரதேசத்தில், மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயினை கண்டறிவதற்காக கொழும்பு குற்றப் பிரிவு அதிகாரிகள் அவருடன் சென்றபோது, மாகந்துரே மதுஷ் ஒரு போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிப் பிரயோகத்தின்போது, கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் இதன்போது காயமடைந்துள்ளனர்.
துபாயில் கைது செய்யப்பட்ட மாகந்துரே மதுஷ், 2019 மே 5ஆம் திகதி நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு, இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு கட்டுநாயக்கவில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
தன்னை இலங்கைக்கு நாடு கடத்த வேண்டாம் என மாகந்துரே மதுஷ், துபாய் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்த போதிலும் அது மறுக்கப்பட்டிருந்தது.
ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தடுப்புக் காவலில் இருந்த மாகந்துரே மதுஷ் ஒக்டோபர் 16ஆம் திகதி கொழும்பு குற்ற பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார். ஒப்படைக்கப்பட்டார்.
அவரிடமிருந்து கிடைத்த தகவலுக்கு அமைய, கொடிகாவத்தை பகுதியில் சமீபத்தில் 100 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறெனினும், மாகந்துரே மதுஷின் படுகொலை முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.