வியட்நாமில் தாக்கிய சூறாவளியைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி பல வீடுகள் புதைந்ததில் 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதுடன் 40க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனத் தொிவிக்கப்பட்டுள்ளது
வியட்நாமில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் பல்வேறு மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.
இந்த பாதிப்புகளிலிருந்து மீள்வதற்குள் நேற்றையதினம் மத்திய வியட்நாமில் கடும் சூறாவளி புயல் தாக்கியதுடன் பலத்த மழையும் பெய்ததனால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
மலைப்பகுதியில் உள்ள டிரா வான் மற்றும் டிராங் லெங் ஆகிய கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகளினால் பல வீடுகள் புதைந்துள்ளன. இடிபாடுகளில் இருந்து 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் 40க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருவதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த புயல் காரணமாக 9 பேர் உயிாிழந்துள்ளனா் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.
மோலேவ் என்னும் சக்தி வாய்ந்த புயல் அந்த நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கலாபார்ஷன், மிமரோபா, விசயாஸ் ஆகிய பிராந்தியங்களில் மணிக்கு 130 கி.மீ. வேகத்திலிருந்து 160 கி.மீ. வேகம் வரை வீசிய சூறாவளியனால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது. #வியட்நாம் #பிலிப்பைன்ஸ் #இயற்கைஅனா்த்தம் #உயிாிழப்பு #சூறாவளி #நிலச்சரிவு