திருகோணமலையை சேர்ந்த 20 பேருக்கு சொந்தமான காணிகளுக்குள் பிரவேசிக்கக் கூடாது என தொல்பொருள் ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருகோணமலை திரியாய் பகுதியை சேர்ந்த 17 பேரும் தென்னைமரவாடி பகுதியை சேர்ந்த மூவரும் தனித்தனியாக தாக்கல் செய்திருந்த இரண்டு மனுக்கள் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
தமக்கு சொந்தமான காணிகள் தொல்பொருள் காணிகளாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை தடுக்கும் வகையில் தொல்பொருள் திணைக்கள ஆணையாளர் நாயகம், காணி ஆணையாளர் மற்றும் உதவி ஆணையாளர் ஆகியோருக்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரியும் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மனுதாரர்களின் காணிக்குள் பிரவேசித்து எந்தவித நடவடிக்கையினையும் மேற்கொள்ளக்கூடாது என பிரதிவாதிகளுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காணி உரிமையாளர்கள் தங்களது காணிக்குள் சுதந்திரமாக நடமாடுவதை தடுக்கக்கூடாது எனவும் பிரதிவாதிகளுக்கு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்றத்தின் தடை உத்தரவிற்கு பதிலளிக்கும் வகையில் மன்றில் முன்னிலையாகுமாறும் பிரதிவாதிகளான தொல்பொருள் ஆணையாளர் நாயகம், காணி ஆணையாளர் மற்றும் உதவி ஆணையாளர் ஆகியோருக்கு இன்று அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திரியாய், தென்னைமரவாடி பகுதிகளைச் சேர்ந்த காணி உரிமையாளர்கள் சார்பில் சட்டத்தரணி கேசவன் சயந்தன்,உதயகுமார் பிரஷாந்தினி ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.
இந்த வழக்கு விசாரணையை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும் நீதிமன்றத்திற்கு சென்றிருந்தார்.
இந்த மனு மீதான மேலதிக விசாரணை நவம்பர் மாதம் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது. #திருகோணமலை #பிரவேசிக்க #தொல்பொருள்திணைக்களம் #இடைக்காலதடை. #இளஞ்செழியன் #காணி உரிமையாளர்கள்