கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கை, மதங்களுக்கு இடையிலான சமத்துவமின்மையை ஏற்படுத்துவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதோடு, கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களை கட்டாயமாக தகனம் செய்வதற்கான அரசாங்கத்தின் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்த ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றிணைய வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நிச்சயமற்ற உயிர் இழப்புகள் ஏற்படுகின்ற இந்த தருணத்தில், ஒரு சமூகமாக முஸ்லிம்கள் பாரிய துன்பங்களை அனுபவிப்பதாக, விடுதலை இயக்கம் நேற்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10) சுகாதார அமைச்சர் மற்றும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பெரும்பான்மையான சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் பெண்களின் 2,000ற்கும் மேற்பட்ட கையெழுத்துக்களுடன் அனுப்பியுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தொற்றுநோய் நம் அனைவரையும் சமமாக பாதிக்காது. எனவே, தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் தற்போதுள்ள ஏற்றத்தாழ்வுகளை அதிகப்படுத்தியுள்ளன. அவர்கள் தங்கள் இனத்தின் அடிப்படையில் ஓரங்கட்டப்படுவார்கள் என்றும், தங்கள் இன உரிமைகளை கூட இழக்க நேரிடும் என்றும் அவர்கள் அஞ்சுகிறார்கள்.” என அந்த மனுவின் ஆரம்பத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.
தகனம் செய்வது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணான ஒரு நடைமுறை எனவும், தகனம் செய்வது இஸ்லாத்திற்கும், உயிரிழந்தவருக்கும் அவமானம் என்றும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி உள்ளிட்ட நாடாளுமன்றத்தில் உள்ள பெண் பிரதிநிதிகளுக்கு, விடுதலை இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
“இறந்த பிறகு ஆன்மாவும் உடலும் இணைக்கப்படுகின்றன என அவர்கள் நம்புகிறார்கள்.”
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் இறுதி சடங்குகள் குறித்த அரசாங்கத்தின் கொள்கையால் முஸ்லிம் சமூகம் அனுபவிக்கும் மன உளைச்சல் குறித்த மனுவில் சுட்டிக்காட்டுகிறது.
“வேறு நோயால் பாதிக்கப்பட்ட எங்கள் முஸ்லீம் சகோதர சகோதரிகள் மற்றும் வயோதிபர்கள் அச்சத்தில் இருப்பதை அறிந்துகொள்ள முடிந்தது. தமது இறுதி மத மற்றும் கலாச்சார சடங்குகளை செய்ய முடியாது என அவர்கள் அஞ்சுகிறார்கள்.”
பொருளாதார கஷ்டம்
முஸ்லீம் சமூகம் தங்களது இறந்த உடல்களை துணியால் சுற்றி புதைக்கும் ஒரு பாரம்பரியத்தை நடைமுறைப்படுத்துவதால் சவப்பெட்டிகளை கொள்வனவு நடைமுறை தம்மிடம் இல்லை எனவும், மக்கள் தொற்றுநோயை எதிர்கொண்டு பண நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நேரத்தில், ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து சவப்பெட்டிகளை கொள்வனவு செய்வதானது முஸ்லிம் குடும்பங்களுக் மேலும் சிரமத்தை ஏற்படுத்துமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதால், தங்கள் அன்புக்குரியவர்களுக்கு இறுதி மரியாதையை செலுத்த முடியாமல் போகும் அதேவேளை, முஸ்லீம் மத நம்பிக்கைகளுக்கு மாறாக, அவர்களுக்கு ஏற்படும் மன வேதனைத் தொடர்பிலும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கொரோனாவால் இறக்கும் முஸ்லிம்களின் இறுதிச் சடங்குகள் எவ்வாறு நடத்தப்படும் என்பது குறித்து தீர்மானிப்பதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் தீர்மானத்தை விரைவுபடுத்தவும், அரசியல் கட்சி குறித்த விடயங்களை கவனத்திற்கொள்ளாது “கட்டாய தகனம்” செய்வதன் அவசியத்தை கேள்விக்குட்படுத்தவும் முன்வரவேண்டுமென, நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களிடமும், 2,078 பேர் கையெழுத்திட்டுள்ள அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
“எங்கள் முஸ்லீம் சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் மீது சுமத்தப்பட்ட தேவையற்ற துன்பங்களையும் அச்சத்தையும் நீங்கள் முடிவுக்குக் கொண்டு வருவீர்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் உங்களுக்கு எழுதுகிறோம்.” என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. #முஸ்லிம்கள் #அடக்கம் #உரிமை #கடிதம் #கொரோனா #சமத்துவமின்மை