எங்களது தலைமுறையின்
சிறுபராயம்
அருந்தலானது
மூன்றாம் பிறையைப் போல்
விளக்குகளும் விட்டில்களும்
வண்ணத்துப் பூச்சிகளும்
மகிழ்தலும்
கோழிகளைத் துரத்தி விளையாடுதலும்
குஞ்சுகளை அழைத்தலும்
பூமரங்களுக்குள் சிட்டுக்குருவிகளை
சிறைப்படுத்தல்களும் வருடல்களும்
கைவிரிக்கப் பறந்து போகும்
அதனழகில் சிலிர்த்தலும்
ஆடுபுலி புல்லுக்கட்டு
கதைகளும்
இதுவே
ஆமிபுலி மல்லுக்கட்டாக
மாறுமென்று
யார் நினைத்தார்?!
சொப்பனத்தில் கண்டாரென்றும்
கதைகளுண்டு
சட்டவிரோதியாய்
சந்தேக நபராய்
குற்றவாளியாய்
சிறைப்படுத்தப் பட்டவராய்
தலைமறைவானவராய்
போராளியாய் கெரில்லாவாய்
காட்டிக் கொடுப்பவராய்
தியாகியாய் துரோகியாய்
முண்டமாய்
மாற்றுத் திறனாளியாய்
காணாமல் ஆக்கப்பட்டவராய்
கணவரைப் பிள்ளையை
இழந்தவராய்
விரிந்து விரிந்து போகும்
அடையாளப் படுத்தல்கள்
கொன்றது தின்றது போக
“போதாக் குறைக்குப்
பொந்தரும் வந்தார்”
தொற்றாளராக்கி
தனிமையில் முடக்கிட
மூக்குவாய் மூடிபோட்டு
இரண்டு முழத்து
இடைவெளியில்
இருமலுக்கும் தும்மலுக்கும்
கரந்துறைய
மருந்தும் இல்லாது
மாற்று மருந்தும்
ஆகாது என
அறிக்கையிடும் நவ மருத்துவம்
ஜ.நா.சொல்லிடும்
“புதிய இயல்பு வாழ்க்கை”
யார் கண்டார்
இயல்பற்றது இவ்வாச்சரிய
வாழ்வென்பது?!
மனிதரைச் சிறைப்படுத்த
கிடைத்த பெரும் வாய்ப்பில்
முதலிட்டார்
‘கோப்பரேற்’ தேவர்கள்
முழுதும் அவர் கையில்
முனைவோமோ?!
உள்ளதை உள்ளவாறறிய
முனைவோமோ?!
சி.ஜெயசங்கர்