முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம் தாங்க முடியாத நிலையில் உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
இன்னிலையில் வாளுடன் நடமாடிய குழுவினை சேர்ந்த ஒருவரை தேராவில் கிராம மக்கள் மடக்கி பிடித்து புதுக்குடியிருப்பு காவற்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.
சனி,ஞாயிறு நாட்களில் வாள்வெட்டு குழுவின் தொல்லை தாங்கமுடியாத நிலை காணப்படுவதாகவும் இரவு நேரங்களில் கணவனை இழந்த பெண்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளும் வாள்வொட்டு குழு வீட்டிற்கு வரவா இல்லை உன் மகளை கடத்துவோம் அல்லது மகளுக்கு கை எடுப்போம் என மிரட்டல் விடுவதாகவும் இவ்வாறு கதைப்பவர்களின் ஒலி வடிவங்கள் பதிவு செய்யப்பட்டு காவற்துறையினருக்கு கொடுத்தும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராமமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று (15.11.20) காலை வாளுடன் வெட்ட சென்றவர்களை பிடித்த கிராம இளைஞர்கள் அதில் ஒருவரை பிடித்து வீட்டில் கட்டி வைத்து காவற்துறையிடம் ஒப்படைத்துள்ளார்கள்.
இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்படும் முரண்பாடுகள் காரணமாக, தேராவில் கிராமத்தினை சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு வாள்களுடன் நடமாடுவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.
வாளுடன் கைதுசெய்யப்பட்ட இளைஞனிடம் புதுக்குடியிருப்பு காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள். #அட்டகாசம் #வாள்வெட்டுக்குழு #முல்லைத்தீவு #தேராவில்