Home இலக்கியம் மட்டக்களப்பு கத்தோலிக்கக் கூத்து மரபின் முதுசம்; அண்ணாவியார் சீ.அலக்சாண்டர் – து.கௌரீஸ்வரன்.

மட்டக்களப்பு கத்தோலிக்கக் கூத்து மரபின் முதுசம்; அண்ணாவியார் சீ.அலக்சாண்டர் – து.கௌரீஸ்வரன்.

by admin



மட்டக்களப்பின் கூத்தரங்கில் இன்று சுறுசுறுப்புடன் செயலாற்றிக் கொண்டிருக்கும் அண்ணாவிமார்களுள் ஒருவரான தன்னாமுனையைச் சேர்ந்த சீனித்தம்பி அலக்சாண்டர் அவர்கள் கடந்த ஒக்டோபர் முதலாந் திகதி தனது எழுபதாவது அகவைக்குள் காலடி எடுத்து வைத்துள்ளார்.
மட்டக்களப்பு தன்னாமுனை எனும் ஊரில் 1951.10.01 ஆந் திகதி கத்தோலிக்கக் கூத்துப் பாரம்பரியத்தைக் கொண்ட குடும்பத்தில் அலக்சாண்டர் பிறந்துள்ளார். இவருடைய தந்தையான யாக்கமுத்து சீனித்தம்பி அவர்களும், மூத்த சகோதரனான சீ.அந்தோனி அவர்களும் புகழ்பெற்ற அண்ணாவிமாராக விளங்கியுள்ளனர். தந்தையைக் குருவாகக் கொண்டு தனது எட்டாவது வயதிலேயே அலக்ஸ்சாண்டர் மத்தளம் பயில ஆரம்பித்துள்ளார். தன்னாமுனையில் 1969 ஆம் ஆண்டு ஆடப்பட்ட கத்தோலிக்கக் கூத்தான ‘ஞானபுத்திரன்’ வடமோடிக் கூத்தில் தோழி பாத்திரமேற்று முதன் முதலாக ஆடியுள்ளார். இதனைத் தொடர்ந்து 1971 ஆம் ஆண்டு ‘ஞானசவுந்தரி’ என்னும் கத்தோலிக்க வடமோடிக்கூத்தில் ஞானசவுந்தரியாக ஆடியுள்ளார், 1972 இல் ‘கிறிஸ்துவின் அவதாரம்’ எனும் வடமோடிக்கூத்தில் ஏவாள், சத்திரகாரி எனும் பாத்திரங்களையேற்றும், 1976 இல் ‘எஸ்தாக்கியார்’ வடமோடிக்கூத்தில் குறத்தியாகவும், 1979 இல் ‘வள்ளியம்மை’ வடமோடிக் கூத்தில் வள்ளியாகவும் இவர் ஆடியுள்ளார். ஏறத்தாழ தனது முப்பதாவது அகவை வரை புகழ்பெற்ற பெண்பாத்திரங்களையேற்று ஆடிய இவர் ஒரு அண்ணாவியாருக்கான அடிப்படைத்தகுதியான பெண்கூத்துப் பயிற்சியைப் பெற்றுள்ளார்.
மட்டக்களப்பு கத்தோலிக்க கூத்துப்பாரம்பரியத்தின் முதுசம்
மட்டக்களப்பு கத்தோலிக்கக் கூத்துப்பாரம்பரியத்தில் வளர்ந்த ஓர் அண்ணாவியாராக இவர் காணப்படுகின்றார். இலங்கைத் தமிழர்களிடையே பயிலப்பட்டுவரும் கத்தோலிக்கக் கூத்து மரபுகளுள் மட்டக்களப்பு கத்தோலிக்கக் கூத்துக்கள் தனித்துவம் மிக்கவையாக உள்ளன. அதாவது மட்டக்களப்பிலே கத்தோலிக்கக் கூத்துக்கள்; மிகப்பெரும்பாலும் வடமோடிக் கூத்தின் கட்டமைப்பில் ஆடப்பட்டு வருகின்றன. இத்துடன் புதிய கத்தோலிக்கக் கூத்துப்பனுவல்களும் மட்டக்களப்பில் வாழ்ந்த புலவர்களால் ஆக்கப்பட்டு அவையும் ஆடப்பட்டுள்ளன.
இந்த வகையில் மட்டுநகர் கோட்டைமுனை சோனகர் தெருவில் வாழ்ந்த வேலுப்பிள்ளை கந்தையா அண்ணாவியார் (அருச்சுனன் கந்தையா) பல கத்தோலிக்கக் கூத்துப்பனுவல்களை ஆக்கியுள்ளார். பின்னாட்களில் இவருடைய சிஸ்யனான மட்டுநகர் முனைத்தெருவைச் சேர்ந்த செபஸ்டியான் இராசதுரை அவர்கள் இக்கத்தோலிக்கக் கூத்துப்பனுவல்களின் ஏட்டண்ணாவியாராகச் செயலாற்றி மட்டக்களப்பில் கத்தோலிக்க கூத்துக்கள் முன்னெடுக்கப்படுவதில் காத்திரமான பங்கு வகித்திருந்தமையும் இங்கு நினைவு கூரத்தக்கது.
இத்தகைய கத்தோலிக்கக் கூத்துக்கள் பெரும்பாலானவற்றில் பாத்திமேற்று ஆடியவராகவும், அவற்றினைப் பயிற்றுவித்தவராகவும் நிறைந்த அனுபவங்களுடன் நம்மத்தியில் வாழ்ந்துவரும் முதுசமாக அண்ணாவியார் சீ.அலக்சாண்டர் திகழுகின்றார்.
கத்தோலிக்கக் கூத்துப்பாரம்பரியத்துடன் சைவசமயப் பண்பாட்டுச் செல்வாக்குள்ள வடமோடிக் கூத்து மரபிலும் அனுபவங்களும் ஆற்றல்களும் நிறைந்தவராக இவர் காணப்படுகின்றமை விசேடமானது.
நாற்பதாவது வயதின் பின்னரேயே ஒரு முழுமையான அண்ணாவியாராக இவர் தனது ஆற்றல்களை வெளிப்படுத்தியுள்ளார். முதன்முதலாக 1993 ஆம் ஆண்டு ஆடப்பட்ட ஞானசவுந்தரி வடமோடிக் கூத்தினை இவர் பயிற்றுவித்து தன்னாமுனையில் அரங்கேற்றினார். அதன் பின்னர் 1995 இல் ஞானபுத்திரன் கூத்தினைப் பயிற்றுவித்துள்ளார் நாட்டு நிலைமைகள் காரணமாக அப்போது இக்கூத்து அரங்கேறவில்லை. இதன்பின்னர் மயிலம்பாவெளியில் பயின்று அரங்கேற்றப்பட்ட ‘தசகிரீவன் தவநிலை’, ‘வள்ளியம்மை நாடகம்’, ‘சுபத்திரை கல்யாணம்’ முதலிய வடமோடிக் கூத்துக்களின் உதவி அண்ணாவியாராகவும் செயற்பட்டுள்ளார். 2017 ஆம் ஆண்டு தன்னாமுனையில் பயின்று அரங்கேற்றப்பட்ட ‘ஞானபுத்திரன்’ வடமோடிக் கூத்தின் அண்ணாவியாராகவும், குருக்கள்மடத்தில் பயின்று அரங்கேற்றப்பட்ட ‘குருக்கேத்திரன் போர்’ வடமோடிக் கூத்தின் உதவி அண்ணாவியாராகவும் செயற்பட்டுள்ளார்.
பல்கலைக்கழகத்தின் வருகைதரு கலைஞராக…
கிழக்குப்பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் நாடகத்துறையில் முன்னெடுக்கப்படும் கூத்துமீளுருவாக்க செயல்முறைக் கற்கையில் பகுதிநேர வளவாளர்களுள் ஒருவராக அண்ணாவியார் சீ.அலக்சாண்டர் அவர்கள் பங்குபற்றி வருகின்றார். இந்தப்பங்குபற்றுகையினூடாக 2017 ஆம் வருடம் ‘ஆளுமையான ஒளவையாள்’ எனும் வடமோடிக் கூத்தும், 2020 இல் ‘மஞ்சள் அழகி’ எனும் வடமோடிக் கூத்தும் இவரால் நாடகத்துறையின் இறுதியாண்டில் கற்கும் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டுள்ளன.
நாடகத்துறையில் இறுதி வருடத்தில் கற்கும் மாணவர்கள் அண்ணாவிமார் மற்றும் கூத்தில் துறைபோர்ந்த ஆளுமைகளுடன் இணைந்து பங்குபற்றி சமகாலச் சூழலுக்குப் பொருந்தக்கூடிய கூத்துக்களை மீளுருவாக்கஞ் செய்து முன்னெடுக்கும் இக்கற்கையில் அண்ணாவியார் அலக்சாண்டரின் பங்குபற்றுகையில் உருவான ‘ஆளுமையான ஒளவையாள்’ எனும் வடமோடிக்கூத்து குறிப்பிடத்தக்கது.
சங்ககாலத்தில் வாழ்ந்த தமிழர் வரலாற்றின் முதல் பெண் புலவரும் பாடினியுமான ஆளுமைமிக்க ஒளவையாளை வடமோடிக் கூத்தில் வெளிப்படுத்தும் பனுவலாக்கத்திலும் அதன் ஆற்றுகையிலும் அண்ணாவியார் மிகவும் திறம்படச் செயலாற்றியிருந்தார். குறிப்பாக இளம் பெண் ஆளுமையான ஒளவையாளை வடமோடிக் கூத்தில் வெளிக்கொண்டு வருவதற்கான தாளக்கட்டு, ஆட்டக்கோலங்கள், பாடல் மெட்டுக்கள் என்பவற்றினை வடிவமைப்பதில் அண்ணாவியார் அலக்சாண்டர் முக்கியமான பங்களிப்பை வழங்கியிருந்தார்.
சிறுவர் கூத்தரங்கில்…
இலங்கைத்தமிழர்களின் பாரம்பரிய கூத்துப்பண்பாட்டில் சிறுவர்களுக்கான கூத்தரங்கு எனும் எண்ணக்கருவாக்கமும் அதன் முன்னெடுப்புக்களும் கூத்து மீளுருவாக்கத்திற்கான பங்குகொள் ஆராய்ச்சி செயற்பாட்டாளரான கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்களால் முன்மொழியப்பட்டு அச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கூத்துக்களை எழுதும் பாரம்பரியமான புலவர்களுடனும், அண்ணாவிமார்களுடனும் பங்குபற்றி சிறுவர்களுக்கான கூத்துக்கள் ஆக்கப்பட்டு அவை சிறுவர்களிடையே பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடக்கமாக ஆக்க இலக்கியப் படைப்பாளர் வி.கௌரிபாலன் அவர்களின் இணைப்பாக்கத்தில் குருக்கள்மடம் எனும் ஊரில் எருவிலைச்சேர்ந்த வீர இராசமாணிக்கம் அண்ணாவியாரால் எழுதிப்பயிற்றுவிக்கப்பட்ட ‘நந்திப்போர்’ எனும் சிறுவர்களுக்கான வடமோடிக்கூத்து அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் தொடர்ச்சியாக சீலாமுனையைச் சேர்ந்த ஏட்டண்ணாவியாரான செ.சிவநாயகம் அவர்களால் ஆக்கப்பட்ட ‘மழைப்பழம்’, ‘வனராணி’ எனும் சிறுவர்களுக்கான வடமோடிக் கூத்துக்கள் கவனிப்பிற்குரியன. இதில் ‘வனராணி’ எனும் சிறுவர் கூத்து அண்ணாவியார் சீ.அலக்சாண்டர் அவர்களால் 2018 ஆம் ஆண்டு களுவாஞ்சிக்குடியில் பயிற்றுவிக்கப்பட்டது. அப்போது கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறையில் சிறப்புக்கற்கையினைத் தொடர்ந்த வே.லோகுஜன் எனும் மாணவனின் ஆய்வுச் செயற்பாடாக நுண்கலைத்துறை முதுநிலை விரிவுரையாளரான சு.சந்திரகுமார் அவர்களின் மேற்பார்வையில் அண்ணாவியார் சீ.அலக்சாண்டர் இக்கூத்தை களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த சிறுவர்களுக்குப் பயிற்றுவித்து அரங்கேற்றியிருந்தார். 2019 இல்; திருப்பெருந்துறையிலும் இக்கூத்து அண்ணாவியார் சீ.அலக்சாண்டர் அவர்களால் பயிற்றுவிக்கப்பட்டிருந்தது.
தவக்காலப் பாடல் பாடுதல்
கத்தோலிக்க சமயத்தவர் மத்தியில் பின்பற்றப்படும் இயேசு பிரானுடைய பாடுகளை வெளிப்படுத்தும் தவக்காலப் பாடல் பாடுவதில் அண்ணாவியார் சீ.அலக்சாண்டர் தேர்ந்த கலைஞாகத் திகழ்கின்றார். அத்தோடு மிக்கேல்மாலை எனும் சமய அனுட்டானங்களினூடாக தண்ணி ஓதுதல், நூல் போடுதல், வளவு காவல் பண்ணுதல் முதலிய விடயங்களை மேற்கொள்ளும் திறனுள்ளவராகவும், சிறுவர்களுக்கு ஏற்படும் உபாதையான குடலேத்தம் பார்த்து அதனைச் சீர்ப்படுத்தும் உள்ளூர் கை வைத்திய முறைமைகள் தெரிந்தவராகவும் அண்ணாவியார் சீ.அலக்சாண்டர் அவர்கள் நம்மத்தியில் இயங்கி வருகின்றார்.
இவ்வாறு பாரம்பரியமான அறிவு முறைமைகளின் முதுசங்களுள் ஒருவராக வாழ்ந்து வரும் அண்ணாவியார் சீ.அலக்சாண்டர் அவர்களை வாழ்த்துவோம். அவருடைய அறிவனுபவங்களை புதிய தலைமுறைகள் பெற்றுக்கொள்வதற்கேற்ப ஆக்கபூர்வமான காரியங்களை முன்னெடுப்போம்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More