Home இந்தியா ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது – உடன் விடுதலை செய்க.

ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது – உடன் விடுதலை செய்க.

by admin

ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாகக் கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா உள்ளிட்ட தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991, மே 21 இல் தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சுமார் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இவர்களின் கருணை மனு மீது முடிவு எடுப்பதில் 11 ஆண்டுகளாக தாமதம் செய்ததாகக் கூறி, பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் தண்டனையை 2014 இல் உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. 2018, செப்டம்பர் 9 இல் தமிழக அமைச்சரவை கூடி, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது.

தன்னை விடுதலை செய்ய நீதிமன்றமே முடிவு எடுக்க வேண்டும் எனக் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்திருந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், ஹேமந்த் குப்தா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் முன்பு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. தற்போதைய நிலையில் எங்கள் அதிகார வரம்பை செயல்படுத்த நாங்கள் விரும்பவில்லை. ஆனால், அரசால் அனுப்பப்பட்ட பரிந்துரை இரு ஆண்டுகளாக நிலுவையில் இருப்பது மகிழ்ச்சிக்குரியதாக இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

சிறையில் உள்ள பேரறிவாளன், தற்போது ஒரு மாத பரோலில் வந்து ஜோலாா்பேட்டை உள்ள வீட்டில் பெற்றோருடன் தங்கி உள்ளார். அவரது வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில் #ReleasePerarivalan என்ற ஹாஷ்டாக்கைப் பயன்படுத்தி ட்விட்டரில் தமிழ்த்திரையுலகினர் பேரறிவாளனின் விடுதலைக்காகக் குரல் கொடுத்துள்ளார்கள்.

நடிகர் விஜய் சேதுபதி

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து பேரறிவாளன் அண்ணாவை ஆளுநர் அவர்கள் விடுதலை செய்ய வேண்டும் என வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். அற்புதம்மாள் அவர்களின் 29 வருடப் போராட்டம் இது. ஒரு குற்றமற்றவருக்கு விடுதலை கொடுங்கள் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். தயவுசெய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பை மதித்து பேரறிவாளன் அண்ணாவை சீக்கிரம் விடுதலை செய்ய வேண்டும்.

நடிகர் விஜய் அன்றனி

நிரபராதியான சகோதரர் பேரறிவாளன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறிய பிறகும் தாமதிப்பது நீதியல்ல.

இயக்குநர் அமீர்

ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது. இந்தத் தத்துவத்தின்படி உருவாக்கப்பட்டதுதான் இந்திய தண்டனைச் சட்டம். உச்ச நீதிமன்றம் சொன்ன பிறகும் தமிழக சட்டமன்றம் உறுதியளித்த பிறகும் வழக்கைப் பதிவு செய்த காவல்துறை அதிகாரி இந்த வழக்கில் பேரறிவாளனுக்குத் தொடர்பில்லை என்று சொன்ன பிறகும் கூட 25 ஆண்டுகளுக்கு மேலாக நிரபராதி பேரறிவாளன் சிறையில் வாழ்ந்து கொண்டிருப்பது கொடுமையான விஷயம்.

நடிகர் ஆர்யா

நீதி, நியாயம், சட்டம், தர்மம் அத்தனையும் தாண்டி கால் நூற்றாண்டு கடந்தும் கண்ணீரோடு போராடும் ஒரு தாயின் தவிப்பைப் பாருங்கள். சிறை தண்டனையில் அல்லாடுவது பேரறிவாளன் மட்டும் அல்ல, தாய் அற்புதம் அம்மாளும்தான்.

இயக்குநர் சமுத்திரக்கனி

அறிவின் அப்பாவின் உடல் நலன் விசாரித்தேன். மிகவும் கவலை அளிக்கிறது. மாண்புமிகு முதல்வரே, மேதகு ஆளுநரைச் சந்தித்து அறிவு விடுதலை கோப்பில் உடனே கையெழுத்து பெற்றிடுக.

நடிகர் பிரகாஷ் ராஜ்

Image

தீர்ப்புக்குப் பின்னும் மறுவிசாரணைக்கான சட்டங்கள் நம் நாட்டில் இருக்குமானால், இந்த அதிகாரியின் வாக்குமூலத்தையடுத்து பேரறிவாளன் சட்டப்படி குற்றமற்றவராக விடுதலையாகி இருப்பார். ஆனால் அவருடைய விடுதலைக்காக நடைமுறையில் இருக்கும் சட்டங்களையே நம்பவேண்டியிருக்கிறது. ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது. பேரறிவாளனை விடுதலை செய்யுங்கள்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

ஒரு குற்றமும் செய்யாதவருக்கு 30 ஆண்டுகள் சிறை. தனது மகனைத் திரும்பப் பெற ஒரு தாயின் 30 வருடப் போராட்டம். இவர்களுக்குத் தமிழக முதல்வர், ஆளுநர் நீதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம். தயவுசெய்து இனியாவது தாயும் மகனும் ஒரு சுதந்திரமான வாழ்க்கையை வாழ விடுங்கள்.

நடிகர் பார்த்திபன்

அற்புதம் அம்மாள் நீதித்துறையின் பொற்பாதம் பிடிக்காதக் குறையாக கடந்த வருடங்களில் அவர் நடந்த தூரமும்,துயரமும் அளவிட முடியாதது. விடுதலையில் நியாயமும் தர்மமும் இருப்பதால்,அது உடனடியாக நிகழ வேண்டி போராடும் நல்லிதயங்களில் நானும் ஒருவன்.

ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம், நடிகை ரோகிணி, இயக்குநர்கள் பா. இரஞ்சித், சிம்புதேவன், நவீன் உள்ளிட்ட பலரும் பேரறிவாளனின் விடுதலைக்காக ட்விட்டரில் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்கள்.

#அற்புதம்மாள் #பேரறிவாளன்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More