இலங்கையை நோக்கி நகரும் நிவர் சூறாவளி
நிவர் என்ற சூறாவளி இலங்கையை நோக்கி நகர்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று காலை 10.30 மணியளவில் இந்த சூறாவளி காங்கேசந்துறை கடற் பிரதேசத்தில் இருந்து 325 கி.மீ தூரத்தில் கடற் பிரதேசத்தில் நிலை கொண்டிருந்ததாகவும், நேற்று மாலை 5.30 மணியளவில் இது காங்கேசந்துறையில் இருந்து 263 கி.மீ தூரத்திலும், இன்று காலை 5.30 மணியளவில் 168 கி.மீ. தூரத்திலும் நிலைகொள்ளக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தக் காற்று எதிர்வரும் 24 மணித்தியால காலப்பகுதியில் சூறாவளியாக உருவெடுக்கும் என்றும் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் வாழும் மக்கள் ஏற்படக்கூடிய நிலைமை தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் வளிமண்டலவியல் தலைமை அதிகாரி ஜனக பண்டார தெரிவித்துள்ளார்.
இந்த பிரதேசங்களில் கடும் காற்றை எதிர்பார்க்க முடியும். 48 – 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். வடக்கு, வட மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டதிலும் கடும் காற்றுடன் மழையும்; பெய்யக்கூடும்.
புத்தளத்தில் இருந்து மன்னார் காங்கேசந்துறை திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற் பிராந்தியத்தில் கடற்றொழிலாளர்கள் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். தற்பொழுது இந்த கடற் பிரதேசத்தில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்போர் உடனடியாக கரைக்கு அல்லது பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளத்தில் இருந்து கொழும்பு உடாக மாத்தறை வரையான கடற் பகுதியில் மீன்பிடி மற்றும் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவது ஆபத்தானது என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 24 மணித்தியால காலப்பகுதியில் வடக்கு மாகாண மக்கள் மிக அவதானத்துடன் செய்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. 100 மி;.மீ ற்கும் மேற்பட்ட மழை வீழ்ச்சி இந்த பகுதியில் பதிவாகக் கூடும். நிவர் சூறாவளியின் தாக்கம் நாளை மறுதினம் வரையில் இடம்பெறக்கூடும்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
நிவர் புயலும், இலங்கை நிலவரமும்
வங்காள விரிகுடாவில் நிலைக்கொண்டுள்ள நிவர் புயல் தற்போது, யாழ்ப்பாணம் – காங்கேசன்துறையிலிருந்து 220 கிலோமீற்றர் தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து 300 கிலோமீற்றர் தொலைவிலும் உள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் நிவர் புயல் மேலும் தீவிரமடைந்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிரதேசங்களுக்கு இடையில், காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் பிரதேசங்களை அண்மித்து ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் குறிப்பிடுகின்றதுநிவர் புயல் சுமார் 120 முதல் 130 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த புயல் காரணமாக இலங்கையின் வடக்கு, கிழக்கு, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 80 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசும் என திணைக்களம் தெரிவிக்கின்றது.நாட்டில் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடனான மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதுடன், சில பகுதிகளில் 75 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
புத்தளம் முதல் மன்னார், காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஊடான பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம், மணிக்கு 80 கிலோமீற்றர் முதல் 100 கிலோமீற்றர் வரை வடமேற்கு முதல் தென்மேற்கு வரையான திசையிலிருந்து வீசும் என திணைக்களம் தெரிவிக்கின்றது,குறித்த கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுகின்றமையினால், கடற்றொழிலாளர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
#நிவர்புயல் #சூறாவளி #இலங்கை #வளிமண்டலவியல் திணைக்களம்