பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நியாயதிக்கத்திற்குள் பொதுக்கூட்டங்களை கூட்டுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பருத்தித்துறை நீதிமன்ற நியாயதிக்கத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நவம்பர் 25ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரி பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் காவல்துறையினரால் விண்ணப்பங்கள் செய்யப்பட்ட நிலையில், அது தொடர்பிலான விசாரணைகள் நேற்றைய தினம் நடைபெற்றது.
அந்நிலையில் நேற்றைய தினம் நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து , இன்றைய தினத்திற்கு கட்டளைக்காக வழக்கு திகதியிடப்பட்டது.
அதன் பிரகாரம் இன்றைய தினம் வழக்கு திறந்த மன்றில் அழைக்கப்பட்டு , மன்றின் நியாயாதிக்க எல்லைக்குள் எந்தவிதமான பொதுக்கூட்டங்களையும் நடத்த முடியாது என அறிவித்து பொதுக்கூட்டம் கூடுவதற்கு மன்று தடைவிதித்தது. அதனை அடுத்து குறித்த வழக்கு தொடர்பிலான விரிவான விசாரணைக்காக எதிர்வரும் 4 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதேவேளை, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி ஆகிய 3 காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளால் முன்னதாக 3 விண்ணப்பங்கள் கடந்த வியாழக்கிழமை பருத்தித்துறை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு திங்கட்கிழமை அவற்றை மீளப் பெற்றிருந்தனர். அதன் பின்னர் நேற்றைய தினம் புதன்கிழமை மீள தடை விதிக்க கோரி விண்ணப்பம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #பருத்தித்துறை #தடை #நீதிமன்றம் #மாவீரர்நாள் #நினைவேந்தல்