பத்தண்ணா என்று அழைக்கப்படும் இளைய பத்மநாதன் அவர்கள் ஈழத்து தமிழ் நாடக அரங்கில் மட்டுமல்லாது தமிழகத்திலும் பின்னர் புலம்பெயர் தேசங்களிலும் தமிழ் நாடக அரங்கின் கிளைகளைப் பரந்து விரியச் செய்தவர். நாடக ஆற்றுகையாளராக மட்டுமல்லாது நாடக அரங்க ஆய்வாளராகவும் முக்கியத்துவம் பெற்றவர்.
நவீன அரங்கின் தளத்திலிருந்து பாரம்பரிய அரங்குகளிலும், புராதான தமிழ் நாடக அரங்க மரபுகள், அதன் அரங்குப் போக்குகள் எனத் தமிழ் நிலை நோக்கிலிருந்து உலக அரங்கை நோக்கும், இயங்கும் முன்னோடிகளில் முக்கியமானவர்.
உலகின் பல பாகங்களிலும் வாழும்; காலனியம் அள்ளிச் சிதறடித்த தமிழர் சமூகங்களது அரங்க மரபுகள் பற்றிய அறிதலும் அதுசார் தேடலும் கொண்ட ஆளுமை.
ஈழத்து அரங்கில் ‘கந்தன் கருணை’ நாடகத்துடன் முக்கியமாக அடையாளம் காணப்படுபவர். காத்தவராயன் கூத்து வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘கந்தன் கருணை’ நாடகம் சாதி எதிர்ப்புப் போராட்ட எதிர்ப்பு அரங்காக ஆற்றுகை செய்யப்பட்டது. நேரடி மோதல்களை எதிர்கொண்டு ஆற்றுகை செய்யப்பட்ட ‘கந்தன் கருணை’ நாடகம் ஈழத்து அரசியல் அரங்க வரலாற்றில் தனித்துவம் பெற்றதாகவும் அதேவேளை விரிவான ஆய்வைக் கோரி நிற்பதாகவும் இருந்து வருகின்றது.
எழுதப்படாத ஈழத்து நவீன நாடக வரலாறு பல திரிபுகளுக்கும், புனைவுகளுக்கும் வாய்ப்பளித்திருப்பதை ஈழத்து நவீன நாடக நூல்கள் குறிப்பாக பாடசாலை நாடக அரங்கியல் பாடத்திட்டம், பரீட்சை வினாத்தாள்கள் புலப்படுத்தி நிற்பதைத் தெளிவாகக் காணமுடியும்.
இத்தகைய பின்னணியில் இளைய பத்மநாதன் அவர்களது ஈழத்து நவீன அரங்கு பற்றிய எழுத்துக்கள் கவனத்திற்குரியவை ஆகின்றன. ‘கந்தன் கருணை’ பற்றியும் கூட நடிகர் ஒன்றியம் கொழும்பில் அரங்கேற்றியதே செம்மையானதென்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அம்பலத்தாடிகள் அடிபாடுகளுக்கு மத்தியில் ஆற்றுகை செய்திருந்த பின்புலம் கவனிக்கப்படாததாக அல்லது கவனத்திற் கொள்ளப்படாததாகவே இருக்கின்றது.
புராதன தமிழ் அரங்க ஆய்வில் கவனத்தைக் குவித்திருக்கும் இளைய பத்மநாதன் அவர்கள் தனது நாடக அனுபவங்கள், சிந்தனைகள் பற்றிக் குறிப்புக்களையாவது எழுதுவது ஈழத்து நவீன நாடக அரங்க வரலாற்றை கணிசமானளவுக்கு உண்மைத் தன்மையுடன் உருவாக்குவதற்கு வாய்ப்பை வழங்குவதாக இருக்கும்.
இளைய பத்மநாதன் அவர்கள் ஈழத்தில் மட்டுமல்லாது தமிழகத்திலும் நவீன அரங்கில் தடம் பதித்தவராகவும், தலைமுறை உருவாக்கம் செய்தவராகவும் காணப்படுகின்றார். முனைவர் மங்கை அரசு, முனைவர் கோ.பழனி போன்றவர்கள் இந்த விடயம் சார்ந்து எழுதுவது பொருத்தமாக இருக்கும்.
தமிழகக் கூத்துக்கள் பற்றிய பத்தண்ணாவின் அறிவும் அனுபவமும் விசாலமானது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆடப்பட்டு வருகின்ற கூத்துக்களதும், கூத்தர்களதும் பரிச்சயம் அவரது தேடலின் வீரியத்தைப் புலப்படுத்துவதாக இருக்கின்றது.
ஈழ-தமிழக கூத்துகள் பற்றிய எனது முனைவர் பட்டத்திற்கான ஒப்பீட்டாய்விற்காக பத்தண்ணாவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் செய்த பயணங்களும், பார்த்த கூத்துக்களும், கூத்தர்களுடனான உரையாடல்களும், எங்களுக்குள் நாங்கள் நடத்திக்கொண்ட உரையாடல்களும் விரிவாக எழுதப்பட வேண்டியவை. தமிழகக் கூத்துக்கள் பற்றிய பத்தண்ணாவின் நுட்பமான பார்வைகள் ஒப்பீடுகள் மிகப்பெரும் கற்றலாகும்.
நவீன அரங்கு, பாரம்பரிய அரங்கு என பத்தண்ணாவின் ஆழமானதும் நெடியதுமான பயணம் மற்றும் மேற்கு ஐரோப்பிய, அமெரிக்க மையவாதம் கடந்த உலக அரங்குகள், உலகத்தமிழர் அரங்குகள் பற்றிய பார்வை அவரது புலமைத்துவ படைப்பாக்க ஆற்றலையும் ஆளுமையையும் வெளிப்படுத்துவதாக இருக்கிறது.
‘அரங்கத் திறம்: சிலப்பதிகாரம்’ எனும் அவரது ஆய்வு நூல் மற்றும் புராதன அரங்குகள் பற்றிய அவரது இணையத்தள எழுத்துக்கள் பத்தண்ணாவின் ஆய்வுத் திறத்தை வெளிப்படுத்துவதாகவும், தமிழர் அரங்குகள் சமகாலத்தை வலுவாக எதிர்கொள்வதாகவும் உலகம் அறியப்பட்டதாகவும் இருக்கவும், இயங்கவும் வேண்டுமென்ற வேட்கையை அவரது அரங்கப் பயணம் முன்னிறுத்துகிறது.
புலம்பெயர் நாடுகளிலும் ஈழக்கூத்து உருவாக்கம் பற்றிய பத்தண்ணாவின் முன்னெடுப்புகள் குறிப்பிடத்தக்கனவாகவும், உரையாடலுக்கு உரியவையுமாகும். பத்தண்ணாவின் நாடக அரங்கப் பயணம் சவால்கள் நிறைந்தது. பத்தண்ணாவின் ஈடுபாடும், ஓர்மமும் மட்டுமே அவரது சாதனைப் பயணத்தின் அடிப்படையாக இருக்கிறது.
பத்தண்ணாவின் அறிவும் திறமுமே அவரது மூலதனம். எந்தக் கல்விப் புலங்களது, தொழிற் தலங்களது பின்புலமோ, ஆதரவோ அற்ற, தன்னை நம்பிய தனிமனிதப் பயணம்.
நாடகக்காரரின் அடிப்படைக் குணாம்சமான குழுவாக இயங்குதல் என்னும் கலை வல்லபம் வாய்க்கப்பெற்ற பத்தண்ணா அவர்கள் அரங்கக் கலைஞராகவும், அறிஞராகவும், அரங்கியல் முகாமைத்துவப் பண்பும் கொண்டதொரு ஆளுமை. அவர் வாழ்ந்த, வாழ்ந்து வருகின்ற இடங்களில் எல்லாம் ஓயா இயங்குதிறன் கொண்ட அரங்கில்வல்ல ஆளுமையாகத் திகழ்ந்து வருகின்றார்.
இளம் அரங்கக் கலைஞர்களுக்கு, குறிப்பாக கல்வி மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் இளையோருக்கும், ஆசிரியர்களுக்கும் பத்தண்ணா மிகப்பெரிய பாடம்.