2019-10-17 அன்று யாழ்ப்பாணம் மக்களிற்கு கிட்டிய ஒரு அரும்பெரும் சொத்தான பலாலியில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தற்போதைய அரசினால் இரகசியமான முறையில் முழுமையாக மூடுவது கண்டும் அரசோடு ஒட்டி நிற்போர் வாய்மூடி மௌனிகளாக உள்ளனர் .
இலங்கையின் சர்வதேச விமான நிலையமாக யாழ்ப்பாணம் விமான நிலைய 2019-10-17 மீண்டும் புதுப் பொலிவுடன் ஆரம்பித்து வைக்கையில் 2015ஆம் ஆண்டு முதல் மேற்கொண்ட பெரும் முயற்சியின் அறுவடை ஒன்று அன்று பெறப்பட்ட மகழ்ச்சி நிச்சயம் யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களிற்கு மட்டுமல்ல வடக்கு மாகாண மக்கள் அனைவருக்கும் ஏற்பட்டது.
பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை 2014ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜா அப்போதைய இந்திய துணைத் தூதுவர் மகாலிங்கத்திடம் முதன் முதலாக கோரிக்கை விடுத்தார். குறித்த கோரிக்கை கவனத்தில் எடுக்கப்படும் என கூறிய அவர் அந்த கோரிக்கையினை உரிய முறையில் இந்திய அரசுவரை கொண்டு சென்றார். அதன் பின்பு இந்தியப் பிரதமர்வரை குறித்த விடயம் கூட்டமைப்பால் கொண்டு செல்லப்பட்டு ஓப்புதல் பெறப்பட்டது.
இதனையடுத்து 2015ஆம் ஆண்டு குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்த இந்திய அரசு இணக்கம் தெரிவித்து அதற்கான உத்தேச செலவு மதிப்பீட்டினையும் மேற்கொண்டபோதும் அப் பணிகள் யாவும் மிகவும் இரகசியமாகவே இடம்பெற்றன. இந்த நிலையில் இரு அரசு தொடர்பு பட்ட பணிகள் என்பதனால் நீண்டகாலம் இரகசியம் காக்க முடியவில்லை. அதனால் 2015இன் இறுதியில் விடயம் வெளிவந்தமையும் அப்போதைய மைத்திரி அரசும் ஆரம்பத்தில் பச்சைக்கொடியே காட்டியது. இருப்பினும் குறித்த விடயம் கொழும்பு அதிகாரிகள் மட்டத்திற்கு சென்ற சமயம் பெரும் முட்டுக்கட்டை போடப்பட்டது. தெற்கில் முட்டுக்கட்டை இட்டதன் நோக்கம் தெற்கின் பொருளாதாரம் நலிவடைந்து வடக்கு பொருளாதாரம் அபிவிருத்தி அடையும் என்ற எண்ணப்பாட்டிலாகும்.அதனையே தற்போதைய அரசு மாறி எண்ணுகின்றது. அதாவது தெற்கின் பொருளாதார வளர்ச்சி வேகத்தோடு போட்டியாக வடக்கின் பொருளாதாரமும் வளரக்கூடாது என எண்ணுகின்றது.
2015இன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிடம் மட்டுமன்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவிடமும் விமான நிலைய அபிவிருத்திக்கு கடும் அழுத்தம் கொடுத்தனர். இதற்கான முன்னெடுப்பு மாவை.சேனாதிராஜா மட்டுமன்றி எம்.ஏ.சுமந்திரனாலும் முன்கொண்டு செல்லப்பட்டது. இதனால் இந்திய அரசு பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய இலங்கை அரசு ஒப்புதல் வழங்கியது. இதனையடுத்து இந்தியா அதற்கான ஆயத்தப் பணிகளை முன்கொண்டு சென்றது. இவ்வாறு முன்னெடுத்த காலத்தில் யாழில் இருந்த இந்தியத் துணைத் தூதர் நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் பலாலி விமான நிலையத்தை 3 தடவைகள் சென்று பார்வையிட்டனர்.
இதனையடுத்து அபிவிருத்திக்கான பணியை முன்னெடுத்து இந்தியாவிற்கான விமான சேவையை ஆரம்பிக்க எண்ணி 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ம் திகதி சென்னை விமான நிலையப் பணிப்பாளர் தீபக் சாஸ்திரி தலமையில் ஓர் குழு பலாலி விமான நிலையம் வந்து ஆய்வில் ஈடுபட்டனர். இவ்வாறு ஆய்வில் ஈடுபட்ட சமயம் அப்போதைய வடக்கு மாகாண முதலமைச்சர் ஓர் கருத்தினை வெளியட்டார். அதாவது விமான நிலைய அபிவிருத்தி என்னும் பெயரில் அப் பகுதி மக்களின் நிலம் முழுமையாக இராணுவம் அபகரிக்கும் சாத்தியமே உள்ளது என்றார். இருப்பினும் அருகில் உள்ள குறுகிய நிலத்துடன் மட்டும் இந்தியாவிற்கான சேவையே ஆரம்பிக்க முடியும் என தீபக் சாஸ்திரி தலமையிலான குழு அறிக்கையிட்டது.
இந்த நிலையில் மீண்டும் நெருக்கடி ஏற்பட்டது. அதாவது பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்து யாழில் இருந்து நேரடி சேவைகளை மேற்கொண்டால் கட்டுநாயக்கா விமான நிலையத்தின் வருமானத்தில் வீழ்ச்சியடைவதோடு அதனை அண்டித் தொழில் புரியும் தெற்கின் வருமானத்திலும் வீழ்ச்சி ஏற்படும் என காரணம் காட்டி பணிக்கு தடை விதிக்கப்பட்டதோடு இந்தியா இதற்கான பணியை மேற்கொள்வதனால் முழுமையாக தமது வருமானம் இழக்கும் எனவும் தெரிவித்தனர். இதனால் குறித்த பணியில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டது. 2017ஆம் ஆண்டும் நிறைவடைந்து 2018ஆம் ஆண்டிலும் பணி முன்னெடுக்கும் சாத்தியம் அற்றே கானப்பட்டது. இதனால் இலங்கை சிவில் விமான சேவை அதிகாரிகளை திருப்திப்படுத்த வேண்டிய தேவை பிரதமர் தலமையிலான அரசிற்கு ஏற்பட்டது. ஏனெனில் பிரதமருக்கு ஆட்சியை தொடர கூட்டமைப்பு தேவைப்பட்டது. கூட்டமைப்போ பலாலி விமான நிலையம் வந்தே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. இதனால் பிரதமர் பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்ற வாக்குறுதி வழங்கியதோடு பணியை தொடர அனுமதிக்குமாறு சிவில் விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளை கோரினார்.
இதனையடுத்து சிவில் விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் இணக்கம் தெரிவித்தாலும் இந்திய அரசின் நிதியில் முன்னெடுத்தால் தமது பிடி தளர்வடையும் எனக் கருதினர். இதனால் வேறு வழியின்றி முதல் கட்டமாக இலங்கை அரசின் பணத்திலேயே குறித்த விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரம் உயர்த்தும் பணியை ( அதாவது தற்போது இடம்பெற்றவை ) மேற்கொள்வது எனவும் இரண்டாம் கட்டமாக இடம்பெறும் பாரிய அபிவிருத்திக்கு இந்திய அரசின் உதவியை பெறவும் பிரமர் இணக்கம் தெரிவித்து அதற்கான ஆணையை வழங்கினார். அந்தளவிற்கு கூட்டமைப்பு ரணில் அரசிற்கு தேவைப்பட்டது.
இலங்கையின் 5வது சர்வதேச விமான நிலையம் என்ற பெயரை யாழ்ப்பாணம் விமான நிலையம் பெற்றுக் கொண்டது. இதனையடுத்து 2019ம் ஆண்டு யூலை மாதம் முதல் 2.26 பில்லியன் ரூபா செலவில் முதற்கட்ட அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 2019-10-17 முதல் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக திறந்து வைக்கப்பட்ட சமயம் உலகில் கொரோனா தாக்கம் பரவ ஆரம்பித்தபோது இலங்கையிலும் பரவியது இதனால் கடந்ந மார்ச் மாதம் சர்வதேச விமான நிலையங்கள் பூட்டப்படும்போது கட்டுநாயக்காவுடன் பலாலியும் மூடப்பட்டது.
ஆனால் கட்டுநாயக்கா மெல்ல மெல்ல வழமைக்கு திரும்புகின்றது. யாழ்ப்பாண விமான நிலையமோ மெல்ல மெல்ல முழுமையாகவே கைவிடப்படுகின்றது. யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்காக நியமனம் செய்யப்பட்ட அனைத்துப் பணியாளர்களும் கடந்த 17 ஆம் திகதியுடன் முழுமையாக மத்தள விமான நிலையத்துடன் இணைக்கப்பட்டு விட்டனர். இங்கிருந்து பல உபகரணங்களும் கட்டுநாயக்காவிற்கும் மத்தளவிற்கும் நகர்த்தப்படுகின்றது. இதன் மூலம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு நிரந்தர மூடு விழா வைக்கப்படுகின்றது.
இதனை மேலும் உறுதி செய்வதுபோல் கொரோனாவிற்காக மட்டுமே மூடியிருப்பின் பலாலி விமான நிலையத்தின் 2ம் கட்ட அபிவிருத்திக்காக இந்திய அரசு 300 கோடீ ரூபாவை வழங்க தயாரகவே உள்ளது. விமான சேவை இடம் பெறாத காலத்தில் பணியை இலகுவாக ஆரம்பிக்க முடயும் ஆனால் இலங்கை அதிகாரிகளோ இப் பணியை மேற்கொள்ள பின் அடிப்பதன் மூலம் விமான நிலையத்தை நிரந்தரமாக மூட இடம்பெறும் சதி நிரூபணம் ஆகன்றது.
இந்த நேரத்தில்கூட தமிழ் மக்களின் வாக்கில் தேர்வாகி அரசிற்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாய்மூடி மௌனிகளாக இருக்கின்றனர். ஏனெனில் விமான நிலையத்தை கூட்டமைப்பு முயற்சித்து பெற்றதற்காகவா என்றே என்னத் தோன்றுகின்றது.
#யாழ்சர்வதேசவிமானநிலையம் #பலாலிவிமானநிலை