கார்த்திகை தீபமேற்றிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யாழ்.பல்கலை கழக விஞ்ஞான பீட மாணவனிடம் வாக்கு மூலம் பெற்ற பின்னர் காவல்துறையினா் விடுவித்துள்ளனர்.
யாழ்.பல்கலை வளாகத்தினுள் உள்ள பரமேஸ்வரர் ஆலயம் முன்பாக கார்த்திகை தீபமேற்ற முற்பட்ட யாழ்.பல்கலை கழக விஞ்ஞான பீட மாணவன் தர்சிகன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள பரமேஸ்வரர் ஆலயத்தின் முன்பாக இராமநாதன் வீதியில் மாலை 6 மணிக்கு தீபங்களை ஏற்றுவதற்கு மாணவர்கள் சிட்டிகளுடன் தயாராகியிருந்தனர்.
அதனை அறிந்த காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் அந்த இடத்துக்கு வந்து தீபங்கள் ஏற்றுவதற்கு அனுமதியில்லை என்று தெரிவித்தனர்.
எனினும் மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் தீபங்களை ஏற்றுமாறு காவல்துறையினர் , மாணவர்களுக்கு அறிவுறுத்தினர். தமது அறிவுறுத்தலை மீறி தீபங்கள் ஏற்றினால் கைது செய்யப்படுவீர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதனால் மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டது. இந்நிலையில் நீண்ட இழுபறியின் பின்னர் இரவு 7.45 மணியளவில் காவல்துறையினரின் தடைகளை மீறி விளக்கேற்ற முற்பட்டபோது மாணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மாணவனை கோப்பாய் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்ற காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், யாழ்.மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன் மற்றும் சிரேஸ்ட்ட சட்டத்தரணி வி. திருக்குமரன் ஆகியோர் காவல்நிலையத்திற்கு சென்று , கார்த்திகை தீபமேற்றுவது இந்துக்களின் அடிப்படை உரிமை என காவல்துறையினருக்கு எடுத்து கூறியிருந்தனர்.
அதன் போது காவல்துறையினர், மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த முற்படுவதாக தமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்ததாகவும் , வாக்கு மூலம் பெறவே காவல் நிலையத்திற்கு மாணவனை அழைத்து வந்ததாகவும் கூறியுள்ளனர்.
அதன் பின்னர் , மாணவனிடம் வாக்கு மூலம் பெற்ற பின்னர் விடுவித்தனர். #யாழ்பல்கலை #மாணவன் #விடுதலை #கார்த்திகைதீபம் #வாக்குமூலம்