11 பேர் கொல்லப்பட்டதோடு, 100ற்கும் மேற்பட்டோர் காயமடைந்த மஹர சிறைச்சாலை மோதல் குறித்து அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட காணொளியின் நம்பகத்தன்மைத் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
கடந்த வார இறுதியில் சிறைச்சாலை நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட, குறித்த காட்சிகளை அரச ஊடகங்கள் உள்ளிட்ட முன்னணி தொலைக்காட்சி அலைவரிசைகள் எவ்வித கேள்வியும் இன்றி ஒளிபரப்பின.
டிசம்பர் 2ஆம் திகதி, அரசுக்குச் சொந்தமான இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனம், ”இந்த காட்சிகள் மஹர சிறையில் இரு குழுக்களுக்கிடையிலான மோதல் ஒரு கலவரமாக மாறியது என்பதைக் காட்டுகிறது.” என்ற வாசகத்துடன் சில காட்சிகளை ஒளிபரப்பியது.
இந்த காணொளிகள் அரசு அனுசரணையில் இயங்கும் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டமை குறித்து மனித உரிமை சட்டத்தரணிகளிடையே கடுமையான சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
உண்மையை புதைக்கும் நோக்கத்துடன் இந்த காணொளிகள் அரசின் அனுசரணையில் இயங்கும் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டதாக சட்டத்தரணி சேன பெரேரா மற்றும் சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.
மஹர சிறைச்சாலையில் நடந்த கொலையை எதிர்த்து வியாழக்கிழமை (டிசம்பர் 3) வெலிகட சிறைச்சாலைக்கு முன்னால் கைதிகளின் உரிமைகளை பாதுகாப்புக் குழு ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தை நீதவான் நீதிமன்றம் தடுத்து நிறுத்தியதை அடுத்து கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இரு சட்டத்தரணிகளும் இந்த சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.
ஒரு கொடூரமான குற்றம் நடந்த இடத்தின் காணொளி அரசின் உதவியுடன் வெளியிடப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என சட்டத்தரணி சேனக பெரேரா கூறியுள்ளார்.
“நியாயத்திற்கு எதிராக அவர்கள் செயற்படப்போகின்றார்கள் என்பது நமக்குத் தெளிவாகிறது, அல்லது இந்த காணொளி விளக்கக்காட்சியின் ஊடாக உண்மை சம்பவத்தை மறைக்க ஒரு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹர சிறைச்சாலையில் மோதல் குறித்த காணொளியின் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ளாது ஊடக ஓழுக்கத்தை மீறியமைத் தொடர்பில், கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு ஊடகங்களையும் கடுமையாக விமர்சித்துள்ளது.
“காணொளியை வழங்கியவர் யார்? ஆசிரியர் யார்? புகைப்படங்களை எடுத்தவர் யார்? எந்த விபரங்களையும் உறுதிப்படுத்தாமல் இந்த காணொளி வெளியிடப்பட்டுள்ளது” என சட்டத்தரணி சேனக பெரேரா வலியுறுத்தியுள்ளார்.
காணொளியை ஊடகங்களுக்கு வெளியிடுவதன் நியாயத்தன்மையை கேள்விக்குட்படுத்திய சட்டத்தரணி, அச்சலா செனவிரத்ன மேலும், காணொளியை பதிவு செய்த நபரும் இந்த மோதலுக்கு ஆதரவளித்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
“யாராவது சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிளை பதிவு செய்திருந்தால் அந்த நபர் மோதலின் போது மோதலுக்கு ஆதரவாளராக இருந்திருக்கமாட்டாரா? அல்லாவிடின் மோதலை அடக்குவதை விடுத்து அதனை இரசித்து பதிவு செய்யமுடியுமா? இதில் ஈடுபடுவதாகக் கூறப்படும் நபர்களைத் தேடுவதன் மூலம் அதைத் தடுக்க வேண்டாமா? இந்த காணொளி அன்று நடந்ததுதான் என்பதை உறுதிப்படுத்தியது யார்?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
காட்சிகளில் மோதல் இருந்தாலும், துப்பாக்கிச் சூடு நடந்த காட்சிகள் எதுவும் இல்லை என சட்டத்தரணி வலியுறுத்தியுள்ளார்.
மஹர சிறை மோதலில் இறந்த எந்த கைதியும் சுட்டுக் கொல்லப்படவில்லை என சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
“சிறைக் காவலர்களால் யாரும் கொல்லப்படவில்லை. அனைவரும் மோதலினாலேயே உயிரிழந்தனர். எனினும் சுட்டுக் கொல்லப்பட்டதாக குறிப்பிடுகின்றனர். எனினும் அது உண்மையில்லை என்பது பிரேத பரிசோதனைகள் உறுதிப்படுத்தியுள்ளன.” என அமைச்சர் கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நவம்பர் 29ஆம் திகதி மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 11 கைதிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 106 பேர் காயமடைந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலியானவர்களில் 9 பேருக்கு பின்னர் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
#மஹரசிறைச்சாலை #சேனபெரேரா #சட்டத்தரணி #அச்சலா செனவிரத்ன #மனிதஉரிமைசட்டத்தரணிகள்