நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் ராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டின் மீதான விவாதத்தின் போது கஜேந்திரகுமார் ஆற்றிய உரை அருமையானது. அந்த உரைக்கு சிங்கள பிரதிநிதிகள் மத்தியிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர்களுடைய குறுக்கீட்டால் கஜனின் நேரம் சுருங்கிய போது சிறீதரன் தமது கட்சியின் நேரத்தை அவருக்கு வழங்குவதாக அறிவித்தார்.
இது விடயத்தில் சிங்களத் தரப்பு கட்சி வேறுபாடுகளை கடந்து ஓர் இனமாக திரண்டு நின்ற பொழுது தமிழ் தரப்பும் அவ்வாறு ஓர் இனமாக திரண்டு நின்றது. பின்னர் நடந்த வாக்கெடுப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதிர்த்து வாக்களித்தது. டெலோ இயக்கம் எதிர்த்து வாக்களித்தது. ஏனைய கூட்டமைப்புப் பிரதிநிதிகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. விமர்சனங்களோடும் இந்த ஒற்றுமை பரவலாகப் பாராட்டப்படுகிறது. கஜேந்திரகுமார் ஒரு இனத்தின் குரலாக அந்த இடத்தில் நின்றார். அதை ஆதரித்து ஏனைய தமிழ்ப் பிரதிநிதிகளும் அவருடன் நின்றார்கள் என்பது இங்கே முக்கியம். தமிழ் பிரதிநிதிகள் இவ்வாறு அபூர்வமாக ஒன்றுபட்டு நின்றது பரவலாக பாராட்டப்படுகிறது.
உண்மைதான். குறைந்த பட்சம் இது போன்ற ஐக்கியங்களையாவது கட்டியெழுப்ப வேண்டும் என்று கடந்த்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு வகைப்பட்ட தரப்பினரும் முயற்சித்தார்கள். ஆனால் அப்படி ஒரு ஐக்கியத்தை கட்டியெழுப்ப முடியவில்லை . குறைந்தபட்சம் மாற்று அணி என்று அழைக்கப்பட்ட கஜேந்திரகுமார் – விக்னேஸ்வரன் ஆகிய இரண்டு அணிகளுக்கும் இடையிலாவது ஐக்கியம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்காக நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் பல்வேறு தரப்புக்கள் உழைத்தன. ஆனால் அப்படி எந்த ஐக்கியத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. முடிவில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழ் வாக்குகள் சிதறிப் போயின.
ஆனால் கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன் அதாவது கடந்த ஆண்டின் இறுதியில் நடந்த அரசுத் தலைவருக்கான தேர்தலின் போது தமிழ் மக்கள் கட்சிகளைக் கடந்து ஓரினமாக திரண்டிருந்தார்கள். ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வரக்கூடாது என்று தமிழ் மக்கள் ஓரினமாகத் திரண்டு வாக்களித்தார்கள். அந்த இனத் திரட்சியை கூட்டமைப்பு சஜித் பிரேமதாசவை நோக்கி மடை மாற்றியது. எனினும் அது ஓரு திரட்சி. தமிழ் மக்கள் இனரீதியாக ஒன்று திரளக்கூடியவர்கள் என்பதனை வெளிக்காட்டிய ஒரு வாக்களிப்பு அது. ஆனால் எழு மாதங்களின் பின் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்க் கட்சிகள் தமிழ் மக்களை சிதறடித்தன. அந்தத் தோல்வியின் விளைவாக மறுபடியும் மாவை சேனாதிராஜா கட்சிகளுக்கிடையே ஒரு தற்காலிகக் கூட்டை உருவாக்கியிருக்கிறார். இக்கட்டுரை எழுதப்படும் இந்நாள் வரையிலும் அந்தக் கூட்டு உடையவில்லை.
ஆனால் அது ஒரு அற்புதமான கூட்டு என்றும் கொள்கை அடிப்படையிலானது என்றும் ஏற்றுக் கொள்ள இக்கட்டுரை தயாரில்லை. அது ஒரு சமயோசிதக் கூட்டு; தோல்வியிலிருந்து பெற்ற படிப்பினைகளின் அடிப்படையில் ஏற்பட்டது. அது ஒரு கொள்கை கூட்டாக இன்னமும் உருவாகவில்லை. ஆனால் தேர்தல் மைய கட்சிகளுக்கிடையிலான கூட்டு எனப்படுவது அதிகபட்சம் அப்படித்தான் இருக்க முடியும்.
கொள்கை கூட்டுக்கள் அபூர்வமானவை ; அற்புதமானவை ; அரசியல் கூர்ப்புக்கு அவசியமானவை. தமிழ்த் தரப்பில் அவ்வாறு கொள்கை கூட்டுக்கள் ஏற்பட்ட சந்தர்ப்பங்கள் மிகக் குறைவு. திம்பு பேச்சுவார்த்தைகளின் போது நான்கு இயக்கங்கள் இணைந்து ஐக்கியமாக நின்றன. அது ஒரு தேவை கருதிய கூட்டு. அப்படித்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பும். அதுவும் ஒரு தேவை கருதிய கூட்டு. கடந்த 10 ஆண்டுகளாக தமிழ் அரசியல் சீரழிந்தமைக்கு அக்கூட்டும் பொறுப்பு. அதனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் வாக்குகள் சிதறின. தோல்விக்குப் பின் மறுபடியும் ஒரு கூட்டு அதுவும் தேவை கருதியதே.
இப்பொழுது கஜேந்திரகுமாருக்கு ஆதரவாக கூட்டமைப்பினர் நின்றார்கள் என்பதும் கூட்டமைப்பு தனது நேரத்தை கஜேந்திரகுமாருக்கு கொடுத்தமை என்பதும் கொள்கை அடிப்படையிலானது என்று கருதி மயங்க தேவையில்லை. ஆனால் அந்த இடத்தில் அந்த நேரத்தில் இனரீதியாக தமிழ்ப் பிரதிநிதிகள் ஒன்று பட்டார்கள் என்பது உண்மை.அந்த நேரத்தில் அதுவே சரி. எனவே இனிமேலும் ஐக்கியம் என்று வரும்பொழுது கொள்கை தூய்மையான அளவுகோல்களை வைத்துக் கொண்டு ஐக்கியத்தை தேட முடியாது. தேடவும் கூடாது. மாறாக விவகாரங்களை மையமாகக் கொண்டு ஐக்கியத்தை கட்டி எழுப்பலாம். இப்போதைக்குச் சாத்தியமானது விவகார மைய ஐக்கியம்தான். முடியுமானால் அந்த விவகார மையக் கூட்டினை ஒரு கொள்கைக் கூட்டாக மாற்றுவதற்கு முயற்சிக்கலாம். திலீபன் நினைவு நாளை முன்னிட்டு ஏற்பட்ட கூட்டும் அப்படித்தான். விவகார மையக் கூட்டுத்தான். எனவே தமிழ்த் தரப்பு முதலில் விவகார மையக் கூட்டுக்ககளையாவது ஏற்படுத்த வேண்டும்.
தென்னிலங்கையில் தனிச் சிங்கள வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் ராஜபக்ச அரசாங்கம் அசுர பலத்துடன் காணப்படும் ஒரு சூழலில் தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஐக்கியம்தான் ஒரு புனிதமான உன்னதமான கொள்கையாக இருக்க முடியும். அதாவது மக்களை ஆகக்கூடிய பெரிய திரள் ஆக்குவது. அவ்வாறு தமிழ் மக்களைத் திரள் ஆக்கும் எல்லாத் தலைவர்களும் போற்றப்பட வேண்டியவர்களே. எனவே கஜேந்திரகுமாரின் உரைக்கு சிங்கள பிரதிநிதிகள் ஓர் இனமாக திரண்டு எதிர்ப்பு காட்டிய பொழுது தமிழ் பிரதிநிதிகளும் அவ்வாறு ஓர் இனமாகத் திரண்டமை அபூர்வமானது; போற்றப்பட வேண்டியது.
கஜனின் உரை பரவலாகக் கவனத்தை ஈர்த்துள்ளது.கடந்த பத்தாண்டுகளில் நாடாளுமன்றத்தில் அதுபோன்ற உரைகளைக் கேட்க முடியவில்லை. விக்னேஸ்வரனின் உரைகளும் கவனிப்புக்குரியவை. அண்மையில் சுமந்திரனும் சாணக்கியனும் கவனிக்கத்தக்க உரைகளையாற்றினார்கள். ஆனால் பிரச்சினை என்னவென்றால் இந்த உரைகளோடு மட்டும் தமிழ்த் தரப்பு நின்றுவிட முடியாது என்பதே. உரையாற்றினோம் எதிர்பைக் காட்டினோம் என்று திருப்திப்படுவதோடு நின்று விட முடியாது. 2009இற்குப் பின்னரான தமிழ் அரசியலை உரைகளோடு சுருங்கிவிட முடியாது.
இந்த உரைகளால் ஒரு பொதுச் சுடரை ஏற்றி வைக்க முடியவில்லை என்பதைத்தான் நடந்து முடிந்த இரண்டு நினைவு கூர்தல்களும் நிரூபித்திருக்கின்றன. நினைவு கூர்வதற்கான பொதுவான கூட்டு உரிமையைக் கேட்டு தமிழ் கட்சிகள் போராட வேண்டியிருக்கிறது. இந்த உரைகள் மட்டும் போராடப் போதுமானவை அல்ல. நாடாளுமன்றத்துக்கு வெளியே கூர்மையான விதங்களில் அதேசமயம் தனிமைப்படுத்தல் சட்டங்களையும் கவனத்தில் எடுத்து மக்கள் மயப்பட்ட எதிர்ப்பை காட்ட வேண்டியிருக்கிறது. முகநூலில் கிடைக்கும் கைதட்டல்களை வைத்துக்கொண்டு அடுத்த கட்ட அரசியலை மதிப்பீடு செய்ய முடியாது. தமிழ் மக்களின் அரசியல் இதுபோன்ற வீராவேசமான உரைகளை எப்பொழுதோ கடந்து வந்துவிட்டது. ஓர் இனப் படுகொலைக்குப் பின் இப்போது கேட்கும் போது கஜனின் உரை காயத்துக்கு வலி நிவாரணி போலத் தெரியலாம். ஆனால் காயம் இந்த மருந்தினால் ஆறக்கூடியது அல்ல. அது ஒரு கூட்டுக் காயம்; கூட்டு மனவடு. அதற்கு எதிராக கூட்டாக போராடினால்தான் நீதி கிடைக்கும்.
எனவே இப்பொழுது தமிழ் மக்களுக்குத் தேவையாக இருப்பது திரட்சி. திரட்சிதான் பலம். எவ்வளவுக்கு எவ்வளவு தமிழ் மக்கள் திரள் ஆகின்றார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு பயமும் குறையும். பயம் தெளிந்தால்தான் தமிழ் மக்கள் வீட்டுக்கு வெளியே சுட்டிகளை ஏற்றுவார்கள். பயம் தெளிந்தால்தான் தமிழ் மக்கள் கோவில் மணிகளை ஒலிக்கச் செய்வார்கள். பயம் தெளிந்தால்தான் தமிழ் மக்கள் திரளாக வீட்டுக்கு வெளியே வருவார்கள் .டெல்லியில் வேளாண் மசோதாவை எதிர்த்து விவசாயிகள் அணிவகுத்து நிற்கிறார்களே? அப்படி. எனவே துணிச்சலான முன்னுதாரணங்களைத் தமிழ்ப் பிரதிநிதிகள் செய்து காட்ட வேண்டும். தமிழ் மக்கள் மத்தியில் உள்ள அச்சத்தை அகற்றி அவர்களைத் திரளாக்கும் துணிச்சலான முன்னுதாரணங்களைச் செய்து காட்ட வேண்டும்.
நடந்து முடிந்த இரண்டு நினைவு கூர்தல்களின்போது எந்த ஒரு மக்கள் பிரதிநிதியும் அவ்வாறான கூர்மையான துணிச்சலான முன்னுதாரணங்களைக் காட்டியிருக்கவில்லை. அவ்வாறு கூர்மையான விதத்தில் இனத்தின் ஆன்மாவை;இனத்தின் கோபத்தை இனத்தின் கூட்டுணர்வை வெளிப்படுத்தும் பிரதிநிதிக்குப்பின் தமிழ் மக்கள் இனமாகத் திரள்வார்கள். கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன் அரசுத் தலைவருக்கான தேர்தலின் போது தமிழ் மக்கள் அப்படித்தான் யாரும் தலைமை தாங்காமலே ஓரினமாகத் திரண்டு நின்றார்கள். எனவே ஓர் இனமாக திரளக் கூடிய மக்களுக்கு தலைமை தாங்க யார் தயார்? என்பதே இப்போதுள்ள கேள்வி . #கஜேந்திரகுமார்பொன்னம்பலம் #நிலாந்தன்