அரசாங்க அபிவிருத்தி திட்டங்களின்போது, முக்கியமான சுற்றுச்சூழல் விடயங்களை கருத்திற்கொள்ளப்படாமைய வலியுறுத்தி பொலன்னறுவையில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
மாதுருஓயா, வஸ்கமு, சேமாவதி, போன்ற சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை அழிக்கும் வகையில் மேற்கொள்ளப்படவுள்ள வீதி நிர்மாணப் பணியை உடனடியாக நிறுத்துமாறு பொலன்னறுவையில் போராட்டத்தை மேற்கொண்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சட்டவிரோத வியாபாரத்திற்கு வழியேற்படுத்தும் வகையில் பொலன்னறுவை – மண்ணம்பிட்டியாவிலிருந்து யக்குரே வரை வீதியினை அமைக்க அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பசுமை குடிமக்கள் சுற்றுச்சூழல் அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.
யக்குரேவிலிருந்து மகுல்தமன வரை இரண்டரை கிலோமீட்டர் வீதியை அமைப்பது போதுமானது எனவும், அங்கிருந்து பொலன்னறுவை வரை பயணிப்பதற்கான வீதி வசதி காணப்படுவதாகவும், பசுமை குடிமக்கள் சுற்றுச்சூழல் அமைப்பின் அமைப்பாளர் காஞ்சன வெவெல்பனாவ, வலியுறுத்தியுள்ளார்.
மணல் கடத்தல்காரர்களின் நலனுக்காக, புலத்திசிபுர காடுகளை அழிக்கும் நோக்கத்தில், மண்னம்பிட்டியவிலிருந்து யக்குரே வரை சுமார் 20 – 25 கிலோமீட்டர் வீதியை அமைப்பதற்கான பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி என்ற பெயரில் புலத்திசிபுர காடுகள் அழிக்கப்படுதல், மேற்கொள்ளப்படும் வீதி அமைப்புப் பணிகள் மற்றும் பிற அழிவுகளை நிறுத்துமாறு அவர் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பரவியிருக்கும் காணொளி காட்சிகள், பொலன்னறுவையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் குறித்த காணொளிகள் வெளியாகியுள்ளன.
பௌதீக திட்டமிடல்
2011 முதல் 2050 வரை செயற்படுத்தப்பட்டு வரும் தேசிய இயற்பியல் திட்டத்தின் கீழ் வரும் சுற்றுலா திட்டங்களை மேம்படுத்துவதற்கு தேவையான உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த வீதி அபிவிருத்தி செய்யப்படுமென, மாதுரு ஓயா வலது கரை அபிவிருத்தித் திட்டம் குறித்த ஆய்வறிக்கையில் இயற்கை ஆய்வு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.
சீன நிறுவனமான சிஎம்சி நிறுவனத்தின் இணைத் தலைவர், லூவோ ஜெங்சென் மற்றும் மகாவலி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சிற்கு இடையே இந்த திட்டத்திற்கான ஒப்பந்தம் கடந்த 2016 ஒக்டோபர் 19ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டதாக சூழல் ஆய்வு மத்திய நிலைய தேசிய இணைப்பாளர் ரவீந்திர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்திற்கான செலவு 475,000,000,000 அமெரிக்க டொலர்களாகும்.
யானை நடைபாதை
இந்த திட்டங்கள் அனைத்திற்கும் அடுத்த வருட வரவுசெலவுத் திட்டத்தில் இருந்து ஏற்கனவே 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த காடுகளுடன் யானை நடைபாதையை உருவாக்குமாறு அதிகாரிகளிடம் கோருவதாகவும் இயற்கை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“இந்த சுற்றுச்சூழல் அமைப்புகளில் வீதிகள் மற்றும் கால்வாய்கள் அமைத்தல் உள்ளிட்ட பிற நடவடிக்கைகள் யானைகளுக்கும் அவற்றின் பல்லுயிர் பெருக்கத்திற்கும் பெரும் தீங்கு விளைவிக்கின்றன. இது மக்களுக்கு அல்லது இலங்கையின் சுற்றுச்சூழலுக்கு நல்லதல்ல” என சுற்றுச்சூழல் ஆர்வலர் ரவீந்திர காரியவசம் தெரிவிக்கின்றார்.
ஜனாதிபதிக்கு ஒரு கடிதம்
ஹெல பொது சவிய அமைப்பின் தலைவர் புதுகல ஜினவன்ச தேரர் நேற்று முன்தினம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில், மணணம்பிட்டியாவிலிருந்து யக்குரே செல்லும் வீதி “சுபீட்சத்தின் நோக்கு” என்ற ஜனாதிபதியின் கொள்கைக்கு எதிரானது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த பின்னர், சிங்கராஜா வனத்தின் நடுவில் லங்கா கமவிலிருந்து தெனியாய வரை ஒரு வீதியை அமைத்திருப்பதால், பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு, புத்தளம் வனாதவில்லு பிரதேசத்தில் சுமார் 100 ஏக்கர் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி சிறிசேன
பொலன்னறுவை மண்ணம்பிட்டியிலிருந்து யக்குரே வரை ஒரு வீதியை அபிவிருத்தி செய்வதற்கான ஏற்பாடுகள் குறித்து ஜனாதிபதியிடம் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்த நிர்மாணப் பணிகள், பிராந்தியத்தில் துரித மகாவலி திட்டம் சி மற்றும் பி மண்டலங்களில் மக்கள் மீள்குடியேற்றத்தின் போது வனவிலங்குகள் வாழ தேசிய பூங்காக்கள் உருவாக்கப்படுமென எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
“முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுற்றுச்சூழல் அமைச்சராகவும், மகாவலி அபிவிருதித்தி அமைச்சராகவும் இருந்த காரணத்தினால், மண்ணம்பிட்டியில் இருந்து யக்குரே செவரை செல்லும் வீதியை நிர்மாணிக்கும் விடயத்தை கைவிட்டிருந்தார்.”
இந்த வீதியை நெடுஞ்சாலையாக அபிவிருத்தி செய்வதில் மோதல் மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“குறிப்பாக இந்த வீதியில் ஏராளமான யானை பாதைகள் இருப்பதால், யானைகள் எப்போதும் இந்த வீதியில் தங்கியிருக்க வாய்ப்புண்டு. மேலும் இது மிகவும் நீர் நிறைந்த பகுதியாகும்.”
னிதர்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் அனைத்து விலங்குகளின் உயிரையும் பாதுகாப்பதே என, ஒரு அரசாங்கத்தின் மிக முக்கிய நோக்கம் என்பதை ஜனாதிபதிக்கு நினைவுபடுத்துகின்றோம். இந்த அரசாங்கத்தின் வெற்றியில் தீவிரமாக செயல்பட்ட பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள் இப்போது ஜனாதிபதியின் அரசாங்கத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறது என ஜினவன்ச தேரர் ஜனாதிபதியிடம் மேலும் தெரிவித்துள்ளார்.
எனவே, பொலன்னறுவை மண்ணம்பிட்டி பிரதேசத்தில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ள வீதி குறித்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத நட்புரீதியான தீர்மானத்தை எடுக்குமாறு ஜினவன்ச தேரர் மேலும் கேட்டுள்ளார்.
#சுற்றுச்சூழல்அமைப்பு #மணல்கடத்தல்காரர்கள் #பொலன்னறுவை