Home இலங்கை வெறுப்புணர்வை ஏற்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகள், நாடாளுமன்றில் பிரவேசிப்பதை, தடை செய்யவேண்டும்.

வெறுப்புணர்வை ஏற்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகள், நாடாளுமன்றில் பிரவேசிப்பதை, தடை செய்யவேண்டும்.

by admin

முதல் பதிவேற்றம் – December 6, 2020 7:19 pm
சிங்களவர்களிற்கு எதிரான வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் உரைகளை நிகழ்த்தும தமிழ் அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்திற்கு வருவதை தடை செய்யவேண்டும் என சண்டே ஒப்சேவரிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.


“முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தவறிழைத்துவிட்டார் என நான் கருதுகின்றேன்,அவர் தமிழ் அரசியல்வாதிகள் குறித்து அனுதாபமுள்ளவராக இருந்துள்ளார்.

ஹிட்லர் தோற்கடிக்கப்பட்டவேளை நாஜி அரசியல் கட்சி முற்றாக முற்றாக அழிக்கப்பட்டது. போல்பொட் கொல்லப்பட்டதை தொடர்ந்து அவரது கெமரூஜ் கட்சி காணாமல்போய்விட்டது.


சதாம் ஹுசைன் கொல்லப்பட்டதை தொடர்ந்து அவரது பாத்கட்சி அழிக்கப்பட்டது.

ஹொஸ்னி முபாராக் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டதை தொடர்ந்து அவரது தேசிய ஜனநாயக கட்சி தடைசெய்யப்பட்டது.


அவ்வேளை ஜனாதிபதியாகயிருந்த மகிந்த ராஜபக்சவின் தவறு அது,அவர் தமிழ் அரசியல்வாதிகள் குறித்து அனுதாபம் கொண்டிருந்தார், அவர் அவர்களை மன்னித்தார். தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனை சாதகமாக பயன்படுத்துகின்றது,


கடந்தகாலங்களில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் விடுதலைப்புலிகளின் தலைவரின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்த பின்னரே நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்தார்கள்.

விடுதலைப்புலிகளின் பிடியிலிருந்தவர்கள் உட்பட எங்கள் படையினரை கொலை செய்த பண்டிதரின் வீட்டிற்கு சென்று சுமந்திரன் மாவீரர் தினத்தை அனுஸ்டிக்கின்றார், அவருக்கு புகழாரம் சூட்டுகின்றார், தனது பாதுகாப்பிற்கு அளிக்கபபட்ட விசேட அதிரடிப்படையினரை, தனது வீட்டின் வெளியே வைத்துக்கொண்டே எங்கள் பாதுகாப்பு படையினரின் கொலையாளிக்கு அஞ்சலி செலுத்தும் தைரியம் சுமந்திரனுக்கு உள்ளது. அதன் பின்னர் அவர் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு தனது நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குறித்து பேசுகின்றார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் பிரதேச ஒருமைப்பாட்டிற்காக சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர். இலங்கையில் சமஸ்டியை அறிமுகப்படுத்துவது குறித்து அவர்கள் வேறு நாட்டுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார்கள் என்றால் அது அவர்கள் மேற்கொண்ட சத்திய பிரமாணத்திற்கு முற்றிலும் விரோதமானது.” எனவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு குறித்த சண்டே ஒப்சேவரின் கேள்விக்கு ஆக்கிரோசமான பதிலை வழங்கியுள்ளார்.


இதேவேளை இஸ்லாம், மற்றும் முஸ்லீம் தரப்பு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சண்டே ஒப்சேவரின் கேளிவிகளுக்கு பதிலளித்த அமைச்சர் சரத் வீரசேகர,

மததீவிரவாதமே மிகவும் ஆபத்தானது எனவும், மததீவிரவாதிகள் சொர்க்கத்திற்கு சென்று 72 கன்னிப்பெண்களை அடைவதற்காக எதனையும் செய்வார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


மததீவிரவாதம் நாட்டிற்கு மிகவும் ஆபத்தானது என்பது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மூலம் புலனாகியுள்ளது. நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள் வீழ்ச்சியடைந்தமைக், புலனாய்வு சேவையில் ஏற்பட்ட பின்னடைவே முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார்.


உதாரணத்திற்கு “நாங்கள் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் மே 19 2009 இல் வெற்றிபெற்றோம். அவ்வேளை மூன்று புலனாய்வு படைப்பிரிவுகளே காணப்பட்டன அதன் பின்னர் அதனை நாங்கள் ஏழாக மாற்றினோம். இதன்மூலம் புலனாய்வு பிரிவின் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்ந்துகொள்ள முடியும்,அந்த புலனாய்வு கட்டமைப்பு நல்லாட்சி அரசாங்கத்தினால் அழிக்கப்பட்டது. முன்னர் நாங்கள் ஐந்து நட்சத்திர விடுதிகள், தேவாலயங்கள் சாதாரண விடுதிகள், ஏன் வீதியோரங்களில் கூடபுலனாய்வு பிரிவினரை பணியில் அமர்த்தினோம். ஏதாவது நடந்தால் எங்களிற்கு உடனடியாக தகவல் கிடைத்தது. நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இந்த வலையமைப்பு அழிக்கப்பட்டது. தற்போது அதனை நாங்கள் வலுப்படுத்தியுள்ளோம் அது சிறப்பாக செயற்படுகின்றது. மததீவிரவாதமே மிகவும் ஆபத்தானது. மததீவிரவாதிகள் சொர்க்கத்திற்கு சென்று 72 கன்னிப்பெண்களை அடைவதற்காக எதனையும் செய்வார்கள்.”

இதேவேளை “காத்தான் குடிப் பகுதிகளில் நாங்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம், எஙகள் புலனாய்வாளர்களை பணியில் அமர்த்தியுள்ளதுடன் பாதுகாப்பு படையினருக்கும் அறிவித்துள்ளோம். அதன் மூலம் ரோந்தினை அதிகரித்துள்ளதுடன் எங்களுக்கு தகவல்வழங்குபவர்களை அங்கு நிறுத்தியுள்ளோம், அவர்கள் எங்களிற்கு அவசியமான தகவல்களை வழங்குவார்கள். காத்தான்குடி மாத்திரமல்ல ஏனைய சில பகுதிகளுக்கும் நாங்கள் முக்கியத்துவத்தை வழங்கியுள்ளோம். அவர்கள் கடந்த காலத்தில் என்ன செய்திருக்கவேண்டுமென்றால் தகவல் கிடைத்ததும் அதனை ஆராய்ந்து புலனாய்வு பிரிவினருக்கு வழங்கியிருக்கவேண்டும். இந்த வலையமைப்பு கடந்த அரசாங்கத்தில் குழப்பப்பட்டுவிட்டது. நாங்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளோம் தகவல்களை பெறுகின்றோம்.” எனக் குறிப்பிட்டள்ளார்.


தொடர்ந்து தனது ஜெனீவா பயணம் குறித்து கருத்து வெளியிட்ட அமைச்சர் சரத் வீரசேகர , “நாங்கள் யுத்த குற்றங்களில் ஈடுபட்டுள்ளோம் என நல்லாட்சி அரசாங்கம் ஏற்றுக்கொண்டதாலேயே நான் ஜெனீவா சென்றேன். போர்க்குற்றம் குறித்த ஆறு தலைசிறந்த நிபுணர்கள் இலங்கை போர்க்குற்றம் எதிலும் ஈடுபடவில்லை என மிகதெளிவான அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளனர். ஆனால அப்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்களசமரவீர ஜெனீவா சென்று நாங்கள் யுத்த குற்றங்களில் ஈடுபட்டோம் என தெரிவித்துடன் எங்களிற்கு எதிரான மனித உரிமை பேரவை தீர்மானத்திற்கு இணை அனுசரனை வழங்கினார். அதன் காரணமாக ஐக்கியநாடுகள் மனித உரிமை வாக்கெடுப்பின்றி அதனை நிறைவேற்றியது. மனித உரிமை பேரவையின் அனைத்து நாடுகளும் எங்களிற்கு ஆதரவளிக்கப்போவதில்லை என்பதை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். இதன் பின்னரே நான் ஜெனீவா சென்று எனக்கு வழங்கப்பட்ட குறுகிய நேரத்திற்குள் மற்றைய பக்கத்தினை சமர்ப்பித்தேன். என்னால் முடிந்ததை நான் செய்துள்ளேன்,இந்த விவகாரத்தை அரசாங்கம் மிகவும் அவதானமாக கையாளும் என நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.”

எனவும் சண்டே ஒப்சேவரிற்கு அமைச்சர் சரத் வீரசேகர வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

#sarathweerasekara #தமிழ்தேசியகூட்டமைப்பு #ஜெனீவா #காத்தான்குடி #மங்களசமரவீர #விடுதலைப்புலிகள் #மாவீரர்தினம் #சுமந்திரன் #பண்டிதர்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More