வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஸை, காவல்துறையினர் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரும் எதிர்பார்க்கை பிணை விண்ணப்பத்தை நாளைமறுதினம் புதன்கிழமை பரிசீலனைக்கு ஒத்திவைத்த மல்லாகம் நீதிமன்றம், அந்த அறிவித்தலை அச்சுவேலிக் காவல்துறையினருக்கு அனுப்ப உத்தரவிட்டது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அச்செழு அம்மன் கோவில் வீதியை சீரமைக்கும் பணியை ஆரம்பித்து
திட்ட பெயர்ப்பலகை நடப்பட்டது.
அது வலி. கிழக்கு பிரதேச சபையின் அனுமதி பெறப்படாது நடப்பட்டது என தவிசாளர் தியாராஜா நிரோஷ், அதனை அகற்றுவதற்குப் பணித்திருந்தார்.
“பெருந்தெருக்கள் அமைச்சினால் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 100 லட்சம் கிலோ மீற்றர்
வீதிகளை சீரமைக்கும் திட்டத்தில் அதனை நடைமுறைப்படுத்தும் வீதி அபிவிருத்தி அதிகார சபை, எந்தவொரு வீதியிலும் திட்டத்தின் பெயர்ப்பலகையை நடுவதற்கு அதிகாரம் உண்டு என்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்தச் சுற்றறிக்கையை கவனத்தில் கொள்ளாது வலி.கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர், அச்செழு அம்மன் ஆலய வீதியில் நடப்பட்ட பெயர்ப்பலகையை அகற்றி அரச சொத்தைச் சேதப்படுத்தியுள்ளார்” என அச்சுவேலி காவல்நிலையத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் முறைப்பாடு வழங்கப்பட்டது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் முறைப்பாட்டின் அடிப்படையில் பிரதேச சபைத் தவிசாளர், தியாகராஜா நிரோஷிடம் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை
வாக்குமூலம் அச்சுவேலி காவல்துறையினர் பெற்றிருந்தனர்.
அதில் அவர் பெயர்ப்பலகையை அகற்றியதற்கான தனது விளக்கத்தை வழங்கியிருந்தார். அத்துடன், அகற்றிய பெயர்ப்பலகையையும் அவர் காவல்துறையினருக்குக் காண்பித்திருந்தார்.
இந்த நிலையிலேயே அரச சொத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் இன்று திங்கட்கிழமை அச்சுவேலி காவல்துறையினரால் கைது செய்ய சபையின் தலைமையகத்துக்குச் சென்றிருந்தனர்.
இன்று காலை முதல் மாலை வரை அவர் சபைக்கு சமூகமளிக்காததால் காவல்துறையினர் திரும்பிச் சென்றனர்.
இந்த நிலையில் வலி. கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர், தியாகராஜா நிரோஷை அச்சுவேலிப்க் காவல்துறையினர் கைது செய்யவதைத் தடுக்கும் விண்ணப்பம் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் அவரது சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்டது.
தவிசாளர் கைது செய்யப்படுவது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று குறிப்பிட்டு சட்டத்தரணிகள்
விஸ்வலிங்கம் திருக்குமரன், விஸ்வலிங்கம் மணிவண்ணன், சுபாஸ்கரன் உள்ளிட்டோர் மன்றில் சமர்ப்பணம் செய்தனர்.
அதனை ஆராய்ந்த பின் விண்ணப்பத்தை நாளை மறுதினம் பரிசீலனைக்கு எடுக்க திகதியிட்ட மல்லாகம் நீதிமன்றம்,
அன்றைய தினம் அச்சுவேலிகாவல்துறையினரை மன்றில் முன்னிலையாக அறிவித்தல் அனுப்ப உத்தரவிட்டது.
“கடந்த சில நாள்களுக்கு முன்பாக யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்
அங்கஜன் இராமநாதன் தலைமையிலானவர்கள் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான ஊரெழு
அம்மன் கோவில் வீதியை சீரமைக்கவுள்ளதாக அடிக்கல்லினை நட்டு வைத்தனர்.
இவ் வீதியை சீரமைக்க முகவராக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயரில் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் உள்ளிட்டவர்களின் ஒளிப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டு திட்டப்பெயர்ப்பலகை நடப்பட்டது.
குறித்த பெயர்ப்பலகையை நட அனுமதி பெறப்படாததால் அதனை அகற்றுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குக் கடிதம் (தொலைநகல் வாயிலாகவும்) அனுப்பப்பட்டது.
ஒருகடமை நாள் சென்ற பின்னரும் அவர்கள் அகற்றாத நிலையில் பிரதேச சபை ஒன்றிற்குச் சொந்தமான வீதியை மத்திய
அரசு நிறுவனமாக இருந்தால் என்ன எந்த நிறுவனமாக இருந்தால் என்ன எக் காரணம் கொண்டும் பிரதேச சபையின்
அனுமதி பெறப்படாமல் சீரமைக்க முடியாது. அதனால் அதனை அகற்றப் பணித்தேன்” என்று தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்திருந்தார். #வலிகாமம் #தவிசாளர் #கைது #தடை #பெயர்ப்பலகை