வலி. கிழக்கு பிரதேச சபைக்கு எதிராக அச்செழுவைச் சேர்ந்த மக்கள் என அடையாளப்படுத்தி 28 பேர் அடங்கிய குழுவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வலி.கிழக்கு பிரதேச சபையின் புத்தூர் தலைமை அலுவலகத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
“வலி.கிழக்கு பிரதேச சபையே சாதிய அடக்குமுறையினாலும் அரசியல் பழிவாங்கல்களினாலும் எமது கிராமத்தின் அபிவிருத்தியைத் தடுக்காதே” அச்செழு வாழ்மக்கள் என்று குறிப்பிட்ட பதாகையை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் எந்த நின்றனர்.
“கட்சி அரசியலைக் காரணம்காட்டி மக்கள் அபிவிருத்திக்கு உலை வைக்காதே, வாக்களித்து பிரதேச சபைக்கு அனுப்பியது அபிவிருத்திக்காகவே, தடுப்பதற்கு இல்லை” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய அட்டைகளையும் அவர்கள் கையில் ஏந்தியிருந்தனர்.
வலி.கிழக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உள்பட்ட அச்செழு அம்மன் கோவில் வீதியில் பிரதேச சபையின் தீர்மானமின்றி சட்டத்திற்கு புறம்பாக அடிக்கல் நட்டப்பட்டு காட்சிப் பதாகையும் அமைக்கப்பட்டிருந்தமை குறித்த காட்சிப் பதாகையினை தவிசாளர் அகற்றி இருந்தார். இதனால் மத்திய அரசுக்கும் உள்ளூராட்சி அதிகார அலகுக்கும் இடையில் பிணக்கு ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த விளம்பரப்பதாகை அகற்றப்பட்டமை தொடர்பில் தவிசாளர் நிரோஷ் பொது உடமைக்கு சேதம் விளைவித்தார் எனக் குற்றம்சாட்டி கடந்த திங்கட்கிழமை முதல் கைது செய்வதற்கு அச்சுவேலி காவல்துறையினர் தீவிரமாக முயன்றனர்.
எனினும் தவிசாளர் சார்பில் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்த எதிர்பார்க்கை பிணை விண்ணப்பத்தை அனுமதித்த நீதிமன்று நேற்று பிணை வழங்கியது.
இந்த நிலையில் இன்று அச்செழு வாழ் மக்கள் எனக் குறிப்பிட்டு 28 பேர் அடங்கிய குழுவினர் வலி.கிழக்கு பிரதேச சபைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் #வலிகிழக்குபிரதேசசபை #அச்செழு #போராட்டம் #விளம்பரப்பதாகை