பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் முற்படுத்தப்பட்ட இருவரை வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் காயத்திரி சைலவன் உத்தரவிட்டார்.
கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் விநியோகத்தில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை ஈடுபட்ட இருவரை வழிமறித்த நெல்லியடி பகுதிக்குப் பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகர், அனுமதிப்பத்திரத்தை காண்பிக்குமாறு கேட்டுள்ளார்.
அதன்போது அவர்கள் இருவரும் பொதுச் சுகாதார பரிசோதருடன் முரண்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொதுச் சுகாதார பரிசோதகரால் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
முறைப்பாடு தொடர்பில் குடிதண்ணீர் விநியோகத்தில் ஈடுபட்ட இருவரையும் நேற்று புதன்கிழமை விசாரணைக்கு அழைத்த காவற்துறையினர், அவர்களைக் கைது செய்துள்ளனர்.
பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் அவர்கள் இருவரும் இன்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
சந்தேக நபர்களில் ஒருவர் தகாத வார்த்தைகளால் ஏசியதாகவும் மற்றைய சந்தேக நபர் தன்னை தாக்க வந்ததாகவும் பொது சுகாதாரப் பரிசோதகர் மன்றுரைத்தார்.
வழக்கை ஆராய்ந்த சந்தேக நபர்கள் இருவரையும் வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான்,
அன்றுவரை வழக்கை ஒத்திவைத்தார்