யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள வெள்ள வாய்க்கால்களின் ஆக்கிரமிப்பு அல்லது தடைகளின் காரணமாகத்தான் நகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் நீர் தேங்கி நிற்கின்றது என்பதனில் உண்மை நிலமை என்ன என வினாவப்படுகின்றது.
யாழ்ப்பாண நகரின் மத்தியிலே கானப்படும் வாய்க்கால்களில் இரு இடங்கள் பிரபல 5 நட்சத்திர விடுதிகளின் நடுவே அகப்பட்டுள்ளன. அவ்வாறு அகப்பட்டிருந்தாலும் அதனூடாக நீர் ஓட்டம் எந்த வகையிலும் தடைப்படவில்லை என்பதனை பெரிய மழையின் பின்பும் மாநகர சபை உறுதிப் படுத்துகின்றது.
இதேநேரம் ஓர் நகைக் கடையின் அடுக்கு மாடி, கலியாண மண்டபத்துடன் கூடியதாக காணப்படுகின்றது. அவர்களும் ஓர் பிரதான வாய்க்காலின் மேல் தட்டு அமைத்து வாகனத் தரிப்பிடம் அமைத்துள்ளனர். இதனால் அதன் கீழ் துப்பரவுப் பணிக்கு மாநகர சபை ஊழியர்கள் பெரும் சிரமத்தின் மத்தியிலும், துயரத்தின் மத்தியிலுமே ஈடுபடுவது வழமையாகி விட்டது.
இவை அணைத்திற்கும் அப்பால் காங்கேசண்துறை வீதிக்கு மேற்குத் திசையில் நாவாந்துறைக்கு உட்பட்ட பகுதியின் நீர் ஓட்டத்திலே ஏற்படும் தடைக்கு சந்திரத்துச் சந்திக்கு மேற்கே 25 மீற்றர் பரப்பிற்குள் ஓர் அடுக்குமாடி கட்டிடம் கழிவு வாய்க்காலை முழுமையாக மூடியே அமைக்கப்பட்டுள்ளதோடு அப் பகுதியின் ஊடான நீர் ஓட்டம் முழுமையாகவே தடைப்பட்டுள்ளதோடு அந்த இடங்களில் இருந்த வாய்க்காலை காணவில்லை. அதேபோல் பொம்மை வெளியில் கடலிற்கு நீர் வெளியேறும் பகுதியின் ஒரு பகுதி ஆக்கிரமித்து அரசியல் குடியேற்றமும் இடம்பெற்றது.
அவ்வாறு இல்லை என மறுக்க முடியாத நிலமை ஏனெனில் தற்போது கொட்டடிச் சந்தியினையும் தொலைத் தொடர்பு நிலையத்தினையும் இணைக்கும் வீதியில் இதன் மிகுதி வாய்க்கால் பெரிய அளவில் உள்ளது. ஆனால் இந்தப் பெரிய மழைக்கும் அதனுள் ஒரு துளி நீரையும் காணவில்லை. இதேநேரம் நகரின் மத்தியில் 55 ற்கும் மேற்பட்ட குளங்கள் இருந்தன. அதில் 4அல்லது 5 குளங்களை காணவில்லை. தற்போது 44 குளங்கள் உள்ளன. ஆனால் எந்தக் குளமும் இருந்த அளவில் இல்லை. எல்லாமே மெலிந்து விட்டது. அதாவது நான்கு பக்கத்தாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டவை ஆட்சியாளர்களின் அணைவின் மூலம் 15 ஆண்டுகளிற்கு முன்பு தமக்கு இசைவானவர்களிற்கு வீடு அமைக்கவும் கடைகளாகவும் மாற்றப்பட்டது ஒரு புறம் எனில் ஆலயங்களும் தமது பணி மறந்து குளங்கள், ஏரிகள், கால்வாய்களை ஆக்கிரமித்துள்ளன.
ஒருபுறம் இந்தனை இடர்பாடுகளும் ஏற்பட மறுபுறம் சுற்றுமதில்கள் வீதிகளின் அருகே கானப்படும் நிலத்திற்கும் நீர் ஓட இடமின்றி சீமேந்து . மிக நெருக்கமாக அடுக்குமாடிக் கட்டிடங்கள் என்பன எழுப்பும் அதே நேரம் வீதி அமைப்புக்களின்போது வீதிப் புனரமைப்பிற்கே போதாத நிதியில் வடிகால் எவ்வாறு சீரமைப்பது என்ற கேள்வியுடன் கூடிய பணிகளே இடம்பெறுகின்றன.
நகரின் பல பகுதியிலும் நீர் தேங்குகின்றது. வடிகால் சரியில்லை மாநகர சபை தூங்குகின்றதா எனவும் கேள்வி எழுப்பப்படுகின்றது. அரசியல் நோக்கத்திற்காக சிலர் எழுப்பும் கேள்விகளும் இதில் உள்ளடக்கம் . ஏனெனில் இடம் கண்ட இடத்தில் மடம் கட்டியதுபோன்று மாநகர சபையில் மட்டும் பழி போடப்படுகின்றது. அவ்வாறானால் மாநகர சபையின் எல்லைக்கு வெளியே குடாநாட்டின் ஏனைய பகுதியில் நீர் தேங்காமல் அல்லவா இருந்திருக்க வேண்டும். அது தொடர்பில் வாய் திறக்க மாட்டார்கள்.
இவ்வாறெல்லாம் மாநகர சபையில் பழிச் சொல் சொல்லப்படுகின்றது. அவ்வாறானால் மாநகர சபை என்னதான் செய்கின்றது என அதன் மாநகர முதல்வர் இ.ஆனல்ட்டை தொடர்பு கொண்டு கேட்டபோது,
“எமது பொறியியல் வல்லுநர்களிடம் கோரினால், மாநகர சபையின் வாய்க்கால் இரு இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்னவோ உண்மைதான் ஆனாலும் அந்த நீர் தற்போது வேறு மார்க்கமாக திருப்ப படுகின்றது. இதேபோன்று பல இடங்களில் கிளை வாய்க்கால், பிரதான வாய்க்காளிற்கு மேலாக கட்டித்திற்கான பாதை, வாகனத் தரிப்பிடம் என்பவை அனுமதி இன்றி அரசியல் செல்வாக்கின் மூலம் முன்பு கட்டியதோடு அந்த அரசியல்வாதிகள் மூலமே திறப்பு விழாவும் நடாத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு இடம்பெற்றது எல்லாம் இந்த சபை உருவாக்கத்தின் பின்பு அல்ல. 2010ஆம் ஆண்டிற்கும் 2013ஆம் ஆண்டிற்கும் இடையில் நடாத்தி முடிக்கப்பட்டது. ஒரு தவறு இடம்பெறும்போது அதனை தடுப்பது சுலபம். அது விருட்சமாக மாறிவிட்ட பின்பு தடுப்பதில் பல சட்ட நெருக்கடிகள் உண்டு. அதேநேரம் வாய்க்காலை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கட்டிடத்திற்கு கடந்த ஆட்சியில் வதிவிடச் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறே குளங்கள், ஏரிகளை சூழ இருந்த நிலங்கள் தூர்வாரப்பட வேண்டியதே அதன் சீரமைப்பு அதற்கு மாறாக அந்த இடங்களை கட்சிக்காக நோட்டீஸ் ஒட்டியவர்களிற்கும், கட்சிப் பணியாற்றியவர்களிற்கும் வழங்கி குளத்தின் அரைவாசிப் பங்கு ஆக்கிரமித்தாள் மிகுதி இடத்தில் மட்டும் நீர் தேங்க அதன் கொள் அளவு போதாது.
தற்போது அவர்களை எழுப்பி வீதியில் நிறுத்தவும் முடியாத நிலமையே உள்ளது. இவைகளுடன் யாழ்ப்பாணக் குடாநாடு ஆண்டிற்கு சராசரியாக ஆயிரத்து 200 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி கிடைக்கும் பிரதேசம் . ஐந்து நாட்களில் மட்டும் 624 மில்லி மீற்றர் மழை பொழிந்துள்ளது அதாவது அரைப் பங்கு மழை வீழ்ச்சி 5 நாள் இடைவெளியில் ஏற்பட்டது. இருப்பினும் ஒரு நாளில் அதனை வடிந்தோட வைத்தமையானதும் ஓர் இலகுவான பணி கிடையாது. அந்த நீர் ஓட்டத்தில் நெஞ்சளவு தண்ணீரில் இரு மணித்தியாளத்திற்கு ஒரு தடவை தொழிலாளர்கள் வாய்க்காளில் தேங்கும் கழிவுகளை அகற்றினர்.
அந்தப் பணியானது இலகுவில் கூறிவிட முடியாது.
இதேநேரம் மாநகர சபை எல்லைப் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் மட்டும்தான் அண்மை மழையில் நீர் தேங்கி நின்று ஏனைய இடத்தில் அவ்வாறான நிலமை காணப்படவில்லை எனில் அதுதான் மாநகர சபையின் தவறாக இருக்க முடியும்.” எனப் பதிலளித்த மாநகர முதல்வரிடம்
திட்டமிடப்படாத வடிகால் பணியின் காரணமாகவே வைத்தியசாலையின் இரு விடுதிகளிற்குள் நீர் புகுந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி முகநூல் வாயிலாக கருத்து பகிர்ந்துள்ளமை தொடர்பில் கேட்டபோது,
“இந்தக் கருத்து நகைப்பி்கிடமானது, ஏனெனில் அவர் ஓர் நிர்வாக அதிகாரி அரசியல் நோக்கம் கொண்ட பதிலை நிர்வாக ரீதியில் கூறக்கூடாது. அதாவது சைவத்தில் கூறுவார்கள் யமதர்மராயாவின் மந்திரியான சிப்திரகுப்தன் ஒவ்வொருவர் தொடர்பிலும் எழுதி வைக்கும் பிரம்மச் சுவடி அவரை தவிர வேறு யாருக்கும் புரியாது என. அதுபோன்றுதான் உள்ளது யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் அமைப்பு முறமை அந்த 13 ஏக்கர் நிலப் பரப்பு காணிக்குள் போனால் வெளியில் வர பாதை தெரியாத காட்டில் விட்ட நிலமை. அதனை அமைத்தவர்களிற்கே விளங்குமோ புரியாது.
இதேநேரம் 2010ற்கு பின்பு 10 வரையான கட்டிடம் அமைக்கப்பட்டு விட்டது எதற்குமே மாநகர சபையின் அனுமதியே கிடையாது என்பதல்ல எதற்கும் விண்ணப்பிப்பதே கிடையாது. அங்கே நெருப்பு பெட்டி போன்று அருகருகே அமைத்து ஒரு கட்டிடத்தின் நீர் மறு கட்டிடத்திற்குள் செல்லும் நிலமையும் நீர் ஓடுவதற்கு பாதையின்றி சகல திசையும் கட்டிடம் அமைக்கப்பட்டு விட்டது.
இவை அனைத்தும் அவர்கள் நிர்வாகம் அதற்கும் அப்பால் வைத்தியசாலையின் மதில் ஓரம் எமது பிரதான வாய்க்கால. உள்ளது. அந்த நீரை கொண்டு வந்து வாய்க்காலில் விழ வைப்பது ஒரு சாதாரணமான பணி வேண்டுமானால் நோயாளர்களின் நலன் கருதி அதனையும் நாமே செய்து வழங்கவும் தயாராகவே உள்ளோம்.” என்றார்.
இதேநேரம் குடாநாட்டில் நீண்ட காலம் பணியாற்றிய ஓய்வு பெற்ற பொறியியலாளர் ஒருவரைத் தொடர்பு கொண்டு இது தொடர்பில் கேட்டபோது ,
நீர், குப்பை, சுகாதார ஏற்பாடு என்றால் மக்களிற்கு உள்ளூராட்சி மன்றங்களே பொறுப்பு எனத் தெரியும் ஆனால் நகரின் மத்தியில் பலாலி வீதி, ஸ்ரான்லி வீதி, காங்கேசன்துறை வீதிகளில் நீர் வடிந்து ஓடவில்லை என்றால் அதற்கு முதல் பதில் அளிக்க வேண்டியவர்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் வீதியின் இரு மருங்கும் இருந்த வாய்க்காலை அழித்தே வீதி அகட்டப்பட்டது. அதன் பின்பு வாய்க்காலை அமைக்காது வீதி அபிவிருத்தி அதிகார சபை தலை மறைவாகினர் அப்போது எவருமே கேட்கவில்லையே . இதுதான் இன்றைய நகரின் மத்தியில் அதிக இடத்தில் வெள்ள நீர் தேங்கி நிற்பதற்கு காரணம். இதனை யாரும் கூறுவதில்லை என்றார்.
பல்கலைக் கழகத்திற்கு அருகில் உள்ள பெண்கள் விடுதிக் கட்டிடம் உள்ள இடம் 1980ஆம் ஆண்டுவரை குளம். அந்த குளத்தை மூடி அடுக்கு மாடிக் கட்டிடத்தை கட்டிப்போட்டு அதை கட்டிய அதே அறிவாளிகளே இன்று கூறுகின்றனர் மாநகர சபை சரியாக வடிகாலமைப்பு செய்யவில்லை என்று.
இவை அனைத்திற்கும் மத்தியில் யாழ் நகர் முழுமையாக தேடியபோது வீதி அபிவிருத்தி அதிகார சபை உண்மையில் அழிவிருத்தியாகவே செயல்பட்டுள்ளமை பட்ட வெளிச்சமாக தெரிகின்றது. அதாவது பலாலி வீதியில் இருந்த வாய்க்காலை மூடி வீதி அமைத்துள்ளது, அதேபோன்று பல்கலைக் கழகம் முதல் பரமேஸ்வராச் சந்தியின் ஊடாக வீதியின் இரு பக்கமும் வாய்க்காலை அமைத்து வந்து எந்தவொரு பொறுப்பற்றதனமாக பழம்றோட், மணல்தறை வீதிகள் ஊடாக அந்த வெள்ள நீரை பாயவிட்டு அதற்கு அப்பால் வாய்க்காலே அமைக்காது தலைமறைவாகியுள்ளமை, ஒஸ்மாணியாக் கல்லூரி முன்பாக சிறிது தூரம் உள்ள வாய்க்கால் மிகுதி இடத்தில் வாய்க்காலே அமைக்கப்படாமை என 6 இடங்களில் இவ்வாறு பொறுப்பற்ற பணி ஆற்றியுள்ளது வீதி அபிவிருத்தி அதிகார சபை.
இதனையாருமே கேட்கவோ அல்லது பேசாமல் இருப்பதன் மூலம் யாருக்கு லாபமோ அவர்களே மாநகர சபை மீது பழியை போடுகின்றனர் என்பது தொடர்பிலும் சிந்திக்க வேண்டியே உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
1 comment
நகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் நீர் தேங்கி நிற்கின்றது. இதை மாற்றி அமைக்க மாநகர சபையும், வீ தி அபிவிருத்தி அதிகார சபையும் மற்றும் சம்பந்தப்பட்டவர்களும் சேர்ந்து ஒரு திட்டத்தைத் உருவாக்கி தேவையான வளங்களைப் பெற்று வரும் காலத்தில் நீர் தடையின்றி ஓட்ட திட்ட அட்டவணையை அமுல்படுத்தி வைக்க வேண்டும்.