11 பேர் கொல்லப்பட்டு மற்றும் 100ற்கும் மேற்பட்டோர் காயமடைந்த மஹர சிறை படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகளை அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் என விமர்சிக்கப்பட்டுள்ளனர்.
சட்டமா அதிபர் திணைக்களம் இந்த விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.
பிரேத பரிசோதனைகள் நிறைவடைந்துள்ள நிலையில், நான்கு பேரின் உயிரிழப்பு துப்பாக்கிச் சூடு காரணமாக இடம்பெற்ற என்பது மீண்டும் நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சடலங்களை அரசாங்கத்தின் செலவில் தகனம் செய்ய வெலிசர நீதவான் நீதிமன்றம் புத்திக ஸ்ரீ ராகல உத்தரவிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் அரச சார்பற்ற நிறுவனங்களின் நலனுக்காக செயற்படுவதாக அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளதாக, மனித உரிமை சட்டத்தரணி சேனக பெரேரா தெரிவித்துள்ளார்.
குற்றத்திற்கு எதிராகப் பேசுபவர்களை தடுக்கும் ஒரு முயற்சியாகவே இது அமைந்துள்ளதாக, கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவரான சட்டத்தரணி சேனக பெரேரா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அரச சார்பற்ற நிறுவனங்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என இராணுவத் தளபதி அறிவித்து சில நாட்களுக்குப் பின்னர், சட்டமா அதிபரின் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி கவலை வெளியிட்டுள்ளார்.
“பாரம்பரிய எதிரிகள் மட்டுமல்ல, போதைப்பொருள் விற்பனையாளர்கள், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இலங்கை எதிர்கொள்ளும் பாதுகாப்பு சவால்கள்” என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டிருந்தார்.
மஹர சிறைச்சாலை தாக்குதலில் பலியானவர்களுக்காக சட்டத்தரணிகளான சேனக பெரேரா, கே.எஸ்.ரத்னவேல், பாலித பண்டாரநாயக்க, அச்சலா செனவிரத்ன, ஷுலா அதிகாரி, தம்பையா ஜே ரத்னராஜா, நமல் ராஜபக்ச மற்றும் லுத்திப் சைனுல் ஆகியோர் முன்னிலையாகினர்.
குறித்த சட்டத்தரணிகளை பாதிக்கப்பட்டவர்கள் சார்பில், முன்னிலையாவதற்கு யார் அதிகாரமளித்தது என சட்டமா அதிபரை பிரதிநிதித்துவப்படுத்திய, அரச சட்டத்தரணி நிஷாரா ஜெயரத்ன நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமக்காக முன்னிலையாகுமாறு சட்டத்தரணிகளிடம் கேட்டுக்கொண்டதாக, அந்த சந்தர்ப்பத்தில் நீதிமன்றத்தில் இருந்த, மஹர தாக்குதலில் பாதிக்கப்பட்ட நான்கு பேர் தெரிவித்ததாக சேனக பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த மோதல் குறித்து விசாரணை செய்யும் ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழு வெலிசர நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் (16) உயிரிழந்த 11 கைதிகளில் நான்கு பேரின் பிரேத பரிசோதனை அறிக்கைகள் அடங்கிய இரகசிய அறிக்கையை சமர்ப்பித்தது.
குறித்த அறிக்கைக்கு அமைய, பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட கைதிகள் 4 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 பேர் உயிரிழந்த மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலை துப்பாக்கிச் சூட்டால் இடம்பெற்றது என குற்றப் புலனாய்வு பிரிவின் அறிக்கைகளை மேற்கோள்காட்டி சட்டமா அதிபர் திணைக்களம் முதன் முறையாக நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்திருந்தது.
இறந்த கைதிகளின் உரிமைகளுக்காக நீதிமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தொடர்ந்து போராடி வரும், கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவர் சட்டத்தரணி சேனக பெரேரா, கொல்லப்பட்ட கைதிகளின் உடல்களை பிரேத பரிசோதனை மேற்கொள்ளாமல் இருக்க எடுக்கப்படும் முயற்சியைக் தடுக்கக் கோரி வெலிசர நீதவான் நீதிமன்றத்தில் டிசம்பர் 4ஆம் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, உயிரிழந்த கைதிகள் சார்பிலும், சட்டமா அதிபர் திணைக்களம் சார்பிலும் சமர்ப்பிப்புகள் முன்வைக்கப்பட்டன.
மேலும் குற்றவியல் விசாரணைகளுக்கு அவசியம் ஏற்படும் என்பதால் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நான்கு கைதிகளின் உடல்களை அடக்கம் செய்யுமாறு கைதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி நீதிமன்றத்தை கோரியுள்ளனர்.
எனினும், சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன இதற்கு ஆட்சேபனை தெரிவித்திருந்தார்.
வைரஸால் பாதிக்கப்பட்ட சடலங்களை அடக்கம் செய்வது சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமெனின், அதற்குத் தேவையான மாதிரிகள் ஏற்கனவே பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக, ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, கைதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிக்கு நீதிபதி அறிவித்தார்.
இதற்கமைய, மேலதிக குற்றவியல் விசாரணைகளுக்காக சடலங்களை மேலும் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்பதால் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நான்கு உடல்களையும் அரசாங்கத்தின் செலவில் தகனம் செய்ய வேண்டு நீதவான் புத்திக ஸ்ரீ ராகல உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு மீண்டும் 18ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. #மஹர #சிறைச்சாலை #படுகொலை #சட்டத்தரணிகளுக்கு #சட்டமாஅதிபர் #NGO #உயிரிழப்பு