Home இலங்கை சிறையில் எழுத்தாளரான அரசியல் கைதி

சிறையில் எழுத்தாளரான அரசியல் கைதி

by admin

அரசியல் கைதியாக கடந்த 12 வருடங்களுக்கு மேலாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் மொறட்டுவ பல்கலைகழகத்தின் பொறியியல் பட்டதாரியான பொறியியலாளர் சிவ. ஆரூரன் . B.Sc.Eng.Hons (Moratuwa) சிறைக்குள் இருந்து நாவல்களை எழுதி வருகின்றார். 


சாகித்திய விருது பெற்ற நாவல் , ஆங்கில நாவல் உட்பட நாவல்களை எழுதியுள்ளார். தற்போது துரியோதனன் துயரம் எனும் நாவலை எழுதி முடித்துள்ளார். 


ஆரூரன் , வடமராட்சியை சேர்ந்த ஆ. சிவலிங்கம் தம்பதியினருக்கு  மகனான 1980ஆம் ஆண்டு தை மாதம் 05ஆம் திகதி பிறந்தார். 


சிறுவயதிலையே நல்ல குணங்களுடனும் , சகோதரர்கள் மேல் அன்பும் பாசமும் கொண்டவர். ஆன்மீகத்தின் மீதும் பற்றுக்கொண்டவர். சிறுவயதில் கல்வியிலும் சிறந்து விளங்கினார். அப்போதே அவரது பேரனார் , அவரது தந்தையிடம் எதிர்காலத்தில் இவனொரு சிறந்த மேதையாக வருவான் என கூறியுள்ளார். 


தனது கல்வியினை ஹாட்லிக் கல்லூரியில் கற்றார். உயர்தர பரீட்சை நேரம் மலேரியா காய்ச்சலால் பீடிக்கபட்டு இருந்ததால், உயர்தர பரீட்சையில் முதற் தரம் சிறந்த சித்தியை பெற தவறியமையால் , பல்கலைக்கழக வாய்ப்பை தவறவிட்டார். 
பல்கலைகழக வாய்ப்பை பெற்றுக்கொள்ள விடாமுயற்சியுடன் , படித்து இரண்டாம் தரம் உயர்தர பரீட்சைக்கு தோற்றி மொறட்டுவ பல்கலைகழகத்தில் பொறியியல் பீடத்திற்கு தெரிவானார். 
மொறட்டுவ பல்கலைகழகத்தில் பொறியியல் சிறப்புமானி பட்டத்தினை பெற்றுக்கொண்டார். அதன் பின்னர் வன்னியில் TRRO எனும் நிறுவனத்தில் பொறியியலாளராக சம்பளத்திற்கு பணியாற்றினார். 


பின்னர் மேல் படிப்பை தொடரும் முகமாக M.Sc கற்கையை தொடர்ந்தார். M.Sc கற்கையை தொடர்வதற்காக மொறட்டுவ , சொய்சாபுரம் பகுதியில் தங்கியிருந்த போது , 2008ஆம் ஆண்டு பங்குனி மாதம் 24ஆம் திகதி சந்தேகத்தின் அடிப்படையில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 


வன்னியில் TRRO வில் பணியாற்றியமையால் தான் சந்தேகத்தில் இவரை கைது செய்திருக்கலாம் என அவரது பெற்றோர்கள் கருதுகின்றனர். M.Sc முடித்து அவுஸ்ரேலியா சென்று P.Hd , கற்று மேல் படிப்புகளை முடித்து கலாநிதி கற்கையை முடித்து கலாநிதியாக வருவார் என பெற்றோர் எதிர்பார்த்து இருக்க பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு 12  வருடங்களாக சிறையில் தன் வாழ்வை கழிக்கின்றார். 


இவரது தந்தை சிறையில் உள்ள தனது மகனை பார்க்க சென்ற போது ” இந்த நரகத்திற்குள் இருந்து என்னால் இப்போது மீள முடியாது என தோன்றுகின்றது.இந்த நரகத்தை நான் சொர்க்கமாக மாற்ற போகிறேன் ” என கூறினார்.

தந்தையாருக்கு எதுவும் புரியாமல் மகனின் கண்களை உற்று பார்த்துக்கொண்டு இருந்தாராம். அப்போது தான் தற்போது வாசிப்பு மீது நாட்டம் கொண்டுள்ளேன். சிறையில் புத்தகங்களை வாசிக்க தொடங்கியுள்ளேன் எனவும் தந்தையிடம் கூறினார். 


வெளியில் இருக்கும் போது கல்வி மீது அதிக நாட்டம் இருந்த போதிலும் , சிறுகதைகள், நாவல்கள் வாசிப்பதில் அவ்வளவாக அவருக்கு நாட்டம் இருந்ததில்லை. எழுத்தாளர்கள் தொடர்பிலும் பெரியவில் அவருக்கு தெரிந்திருக்கவில்லை. சிறையில் வாசிப்பு பழக்கத்தை வளர்த்துக் கொண்டமையால் எழுத்தாளர்கள் பற்றி அறிந்து கொண்டார்.

குறிப்பாக ஈழத்து எழுத்தாளர்களின் நாவல்கள் , சிறுகதைகளை விரும்பி வாசிக்க தொடங்கினார்.  சிறைக்கு செல்லும் தந்தையிடம் நூல்களை வாங்கி வருமாறே கேட்டார். சில வருடங்களின் பின்னர் ஒரு நாள் தந்தையிடம் ஆங்கில அகராதி (டிக்ஸ்னரி) கேட்டுள்ளார். தந்தை அது எதற்கு என கேட்ட போதும் சொல்லவில்லை. பின்னர் சிங்கள எழுத்தாளர்களின் ஆங்கில நாவல்களை வாங்கி வருமாறு தந்தையிடம் கோரினார். தந்தையார் மறுப்பேதும் கூறாது அவற்றை வாங்கி கொடுத்தார். அதன் பின்னர் இந்திய எழுத்தாளர்களின் ஆங்கில நாவல்களை வாங்கி தருமாறு கோரினார். அவற்றையும் தந்தையார் வாங்கி கொடுத்தார். 

நாவல்களை வாங்குவதில் தந்தையார் சிரமங்களை எதிர்கொண்டார், பொருளாதார ரீதியிலும் அவற்றை தேடி வாங்குவதிலும் பல சிரமங்களுக்கு முகம் கொடுத்தார். ஆனாலும் மகன் வாங்கி தருமாறு கேட்ட நூல்களை வாங்கி கொடுக்க தந்தையார் பின் நிற்கவில்லை. 


சிறையில் உள்ள மகனின் மனநிலை பாதிப்படைய கூடாது. என்பது மட்டுமின்றி , ஆரம்பத்தில் மகன் கூறிய இந்த நரகத்தை வாசிப்பின் ஊடாகவே சொர்க்கம் ஆக்க போகிறேன் எனும் வார்த்தைக்காக தன் மகன் நரகத்தில் இருக்க கூடாது என தந்தையார் பல சிரமங்கள் மத்தியிலும் , மகன் கேட்கும் நூல்களை வாங்கி கொடுத்தார். 
ஒரு நாள் தந்தையார் எதற்காக தற்போது ஆங்கில நாவல்களை படிக்கிறாய் என கேட்ட போது , தான் ஒரு ஆங்கில நாவல் எழுத போகிறேன் எனவும் , அதற்காக ஆங்கில நாவல்களின் எழுத்து நடைகள் எவ்வாறு உள்ளது என்பதனை அறியவே ஆங்கில நாவல்களை படிக்கிறேன் என கூறியுள்ளார். அதற்கு தந்தையார் ஆங்கில நாவல் எழுத்துவது என்றால் ஆங்கில அறிவு இருந்தால் மாத்திரம் போதாது என கூறியுள்ளார். அது எதனையும் பொருட் படுத்தாது, The Innocent Victims எனும் ஆங்கில நாவலை சிறைக்குள் இருந்து எழுதியுள்ளார். 


அந்த நாவல் பத்து வயதில் மகன் உள்ள ஒரு விதவை தாய், அவர் வேலை செய்யும்  இடத்தில் ஒருவர் அந்த தாய் மீது காதல் கொண்டு மறுமணம் செய்து கொள்ளும் கதையை அடிப்படையாக கொண்டது. அதனூடாக மறுமணம் தொடர்பில் பேசியுள்ளார். 
அவரது நாவல்கள் எவற்றிலும் அரசியல் இல்லை மக்களின் வாழ்வியலை பேசும் நாவல்கள். அவரது தமிழ் நாவலான யாழிசை நாவல் 2015ஆம் ஆண்டுக்கான சிறந்த நாவலுக்கான சாகித்திய மண்டல பரிசினை பெற்றுக்கொண்டுள்ளது. 

தற்போதும் “துரியோதனன் துயரம்” எனும் நாவலை எழுதி முடித்துள்ளார். அது தற்போது அச்சில் உள்ளது. 
நாவலுக்கான விருதினை அப்போதைய ஜனாதிபதி மைத்திரி பால சிறி சேனாவின் கைகளால் ஆரூரனின் தந்தை பெற்றுக்கொண்டார். அப்போது, ஜனாதிபதியிடம் தனது மகனை சிறையிலிருந்து விடுவிக்குமாறு மன்றாட்டமாக கேட்டுள்ளார்.

அதற்கு அப்போதைய ஜனாதிபதி சாதகமாக பரிசீலித்து முடிவெடுப்பதாக உறுதி அளித்துள்ளார். ஆனாலும் அவரது விடுதலை சாத்தியமாகவில்லை. 


தன் மகன் திருமணம் முடித்து குடும்ப வாழ்வில் சிறப்பாக வாழுவான், கலாநிதி கற்கையை முடித்து கலாநிதியாக வருவான் என எதிர்பார்த்த தந்தையின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. ஆனாலும், சிறையில் இருந்த மகன் ஒரு எழுத்தாளனாக , அதுவும் சாகித்திய விருது பெற்ற எழுத்தாளனாக வருவான் என தந்தை கனவிலும் நினைக்கவில்லை. 


தற்போது கொரோனோ பாதிப்பு உச்சம் பெற்று வரும் நிலையில் , கொரோனோ தன் ஆயுளை குறைத்து விடுமோ எனும் அச்சத்துடன் தந்தையார் வாழ்கின்றார். அவரது அவா , ஆசை தன் மகனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதே. 


தற்போதைய ஜனாதிபதியிடமும் மகனின் விடுதலை தொடர்பில் கோரிக்கைகளை பல தடவைகள் கடிதங்கள் மூலம் முன் வைத்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே தனது மகனின் விடுதலை தொடர்பில் பரிசீலித்து , விடுதலையை சாத்தியமாக்குவார் எனும் நம்பிக்கையுடன் மகனின் வருகையை எதிர்பார்த்து யாழ்ப்பாணம் வடமராட்சியில் அவரது தந்தையான ஆ. சிவலிங்கம் காத்திருக்கிறார்.  #அரசியல் கைதி #மொறட்டுவ_பல்கலைகழக #பொறியியலாளர் #சிவ_ஆரூரன் #பயங்கரவாத தடைசட்ட #TRRO #எழுத்தாளரான

நன்றி – மயூரப்பிரியன்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More