சமூக ஊடக ஒழுங்குமுறை தொடர்பான, உண்மை அர்த்தத்தைப் புரிந்துகொள்ளாமல், அது குறித்து மோசமான முறையில் கருத்துக்கள் வெளியிடப்படுவதாகவும், சித்தரிக்கப்படுவதாகவும் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.
கொழம்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரை பதிவு செய்வதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தனது கருத்துக்களை தெளிவுபடுத்தி இன்று (திங்கட்கிழமை – 21.12.20) ஒரு அறிக்கையை வெளியிட்ட அமைச்சர், சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரை பதிவு செய்வது அரசாங்கத்தின் நோக்கம் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு வெளிநாட்டு டிஜிட்டல் செயற்பாட்டாளர்களை – நிறுவனங்களைப் பதிவுசெய்வதையே அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த டிஜிட்டல் பன்னாட்டு, இலங்கையின் கூட்டு நிறுவனங்கள் உள்ளூர் வணிகங்களை பெரிதும் பதிப்பதாகவும் இது நடுத்தர நிறுவனங்களை நேரடியாக பாதிப்பதாக தெரிவித்த அவர், இலங்கையில் உள்ள முன்னணி தொழில் நிறுவனங்களினால் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பரிசீலனைகள் இடம்பெறுவதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அத்துடன் இந்த வெளிநாட்டு டிஜிட்டல் தளங்கள் மூலம் நாட்டை விட்டு பெரும் தொகை பணம் வெளியேறுவதற்கு வழிவகுக்கிறது எனவும் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.