கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் புகைப்படங்களையும் விபரங்களையும் ஊடகங்களுக்கு வெளியிடுவது குறித்து காவற்துறைக்கு பொறுப்பான அமைச்சரின் தீர்மானத்தை, நாட்டின் உயர்மட்ட சட்ட ஆலோசகர்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் கண்டித்துள்ள நிலையில், ஊடக கண்காணிப்பாளர்களால் சமூக கலந்துரையாடல்களுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளது.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர், ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவின் கருத்தானது, நீதி நிர்வாகத்திற்கு பாரிய ஒரு அடியாக அமையுமென நீதி அமைச்சின் தலைமை சட்ட ஆலோசகர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இது சந்தேகநபர்களின் புகைப்படங்களையும் விபரங்களையும் ஊடகங்களுக்கு வெளியிடுவது ஜனநாயக விரோத செயல் மாத்திரமன்றி, தனிநபர் உரிமை மீறல் என புதிய சிறகுகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
திங்கள்கிழமை (டிசம்பர் 21) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், நியூ விங்ஸ் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் வ்ராய் கெலி பால்தாசர், மக்களின் உரிமைகளை மீறும் அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்தில் அதிகார போதையில் இருக்கும் அரசாங்கம், ‘ஜனநாயகம்’ என்ற வார்த்தையின் எழுத்துக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறுவர் துஷ்பிரயோகம், பெண் துஷ்பிரேயாகம், கொள்ளை மற்றும் தாக்குதல் போன்ற குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மீது வழக்குத் தொடரப்படும் எனவும், அவர்களை சங்கடத்திற்கு உட்படுத்தும் நோக்கத்துடன் புகைப்படங்கள் மற்றும் விபரங்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர டிசம்பர் 12ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
“சிறுவர் துஷ்பிரயோகம், பெண் துஷ்பிரயோகம் மற்றும் கொள்ளையில் ஈடுபடுவோரை நடு வீதியில் வைத்து தாக்குதல் நடத்துவதுபோல், குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டவுடன், அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்கின்ற அதேவேளை, அவர்கள் தொடர்பிலான புகைப்படங்கள் மற்றும் விபரங்களை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தி அவர்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துவோம்.
“தம்மைப் பற்றிய தகவல்கள் பொதுமக்களுக்கு தெரியும் என அறிந்துகொண்ட அவர்கள், அதன் பின்னர் அவ்வாறான ஒரு விடயத்தில் ஈடுபட முயற்சிக்கையில் அவர்களுக்கு ஒருவித அச்சம் அல்லது வெட்கத்தை ஏற்படுத்துவதே எமது நோக்கம்.” என அவர் தெரிவித்திருந்தார்.
ஊடக வேட்டை
சந்தேகநபர்கள் தொடர்பான சட்ட ரீதியான தீர்மானங்களை நீதிமன்றங்களால் மாத்திரமே எடுக்க முடியும் எனவும், மாறாக ஊடக நடவடிக்கைகளால் அதனை மேற்கொள்ள முடியாது எனவும் சிவில் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
“ஊடக வேட்டையாடல் ஊடாக தூக்கு மேடைக்கு அனுப்பப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்ட வரலாறு இலங்கையில் காணப்படுகிறது” என தெரிவித்த புதிய சிறகுகள் அமைப்பின் செயற்பாட்டுக் குழுவின் உறுப்பினர் வ்ரே கெலி சில வருடங்களுக்கு முன்னர் கம்பஹாவில் நடந்த ஒரு சம்பவத்தை உதாரணம் காட்டியுள்ளார்.
“பின்னர் அந்த கொலையை செய்தது வேரொரு நபர் என்பது பின்னர் நிரூபிக்கப்பட்டது. ஆனால் அதற்குள், முதலில் சந்தேகிக்கப்பட்ட நபரின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. ஊடகங்களால் புதைக்கப்பட்ட கதாபாத்திரங்களை மீண்டும் உருவாக்குவதில் ஊடகங்கள் அதிக கவனம் செலுத்துவதில்லை. “
நீதி அமைச்சு
சந்தேகநபர்களின் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியிடப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர வெளியிட்ட கருத்துத் தொடர்பில், நீதி அமைச்சின் தலைமை சட்ட ஆலோசகரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான உதய ரொஹான் டி சில்வா கடுமையாக சாடியுள்ளார்.
“ஒரு நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு எங்கள் சட்டத்தின் மூலம் நிரூபிக்கப்படும் வரை ஒரு நபர் குற்றவாளியாக காணப்படாத நிலையில் பொலிஸுக்கு பொறுப்பான அமைச்சர் அத்தகைய தீர்மானத்தை குறுகிய மனநிலையுடன் எடுப்பதை கண்டிக்க வேண்டும். இது நீதி நிர்வாகத்திற்கு மிகப்பெரிய அடியாகும். இந்த நபர்களின் புகைப்படங்களை வெளியிடுவதன் ஊடாக அவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்படுகிறார்கள். எனவே அதன் பின்னர் வழக்கு விசாரணைகளை தொடர வேண்டிய அவசியமில்லை. ” என ஜனாதிபதி சட்டத்தரணி உதய ரொஹான் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
ஒரு சந்தேகநபரின் புகைப்படங்களை வெளியிடுவது அடையாள அணிவகுப்புகளை பாதிக்கும் செயல் எனவும் நீதி அமைச்சின் தலைமை சட்ட ஆலோசகர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எத்திக்ஸ் ஐ – ஊடக நெறிமுறை
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் புகைப்படங்கள் எதிர்காலத்தில் ஊடகங்களில் வெளியிடப்படும் என்ற அமைச்சரின் கருத்துத் தொடர்பில் வெரைட் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து செயற்படும் எத்திக்ஸ் ஐ குழு கேள்வி எழுப்பியுள்ளது.
சந்தேகநபர்களின் புகைப்படங்களை ஊடகங்கள் மூலம் வெளியிடும் அணுகுமுறை எவ்வளவு தூரம் ஊடக நெறிமுறைகளுக்கு ஏற்றதாக அமையும் அந்த அமைப்பு பேஸ்புக் தளத்தில் கருத்தாடல் ஒன்றை நடத்தியுள்ளது.
“சட்டத்தின் முன் குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை சந்தேகநபர் நிரபராதி என்ற அனுமானத்தின் அடிப்படையில் செயற்படுவது எந்தவொரு நபரின் உரிமையாகும். அத்தகைய சந்தர்ப்பத்தில், ஒரு சந்தேகநபரின் புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிடுவது சமூகக் களங்கத்திற்கும் இதுவரை தண்டனை பெறாத ஒருவருக்கு களங்கம் விளைவிக்கும் செயற்பாடாகும். அப்படியானால், மக்களிடம் பிளவு அல்லது எவ்வித மோதலும் இல்லாதபோது சந்தேகநபரின் புகைப்படங்களை வெளியிடுவது ஊடக நெறிமுறைகளை மீறுவதாக அமையாதா?” என எத்திக்ஸ் ஐ கேள்வி எழுப்பியுள்ளது.
“மேலும், நீதிமன்ற தீர்ப்பிற்கு முன்னர் சமூக களங்கத்திற்கு உள்ளான ஒரு சந்தேகநபர் ஊடகங்களில் புகைப்படங்களை வெளியிடப்பட்டதன் பின்னர், சட்டத்தின் மூலம் விடுவிக்கப்பட்டால், அதே அளவு முக்கியத்துவத்தை செய்தி ஊடகங்கள் இந்த செய்திக்கும் கொடுக்குமா” என எத்திக்ஸ் ஐ மற்றுமொரு கேள்வியை எழுப்பியுள்ளது.
பொலிஸ் அமைச்சரின் புதிய கொள்கையின்படி, சந்தேகநபர்களின் புகைப்படங்கள் அரசாங்கத்தால் விநியோகிக்கப்பட்டால், அவை வெளியிடப்படுமா இல்லையா என்பது குறித்து ஊடக உரிமையாளர்களோ அல்லது ஊடக அமைப்புகளோ கருத்து தெரிவித்துள்ளார்களா என்பது தொடர்பில் தகவல் எதுவும் வெளியாகவில்லை.