Home இந்தியா “என்னை மன்னியுங்கள் அரசியலுக்கு வர முடியவில்லை”

“என்னை மன்னியுங்கள் அரசியலுக்கு வர முடியவில்லை”

by admin

தான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்வதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

தனது உடல்நலன் மற்றும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் மட்டுமின்றி தன்னுடன் பயணிப்பவர்களை பலிகடா ஆக்க விரும்பாததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக ரஜினிகாந்த் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினி வெளியிட்ட முழு அறிக்கை

“என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழக மக்களுக்கு எனது அன்பான வணக்கம்.

ஜனவரியில் கட்சி தொடங்குவேன் என்று அறிவித்து மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்றேன்.

கிட்டத்தட்ட 120 பேர் கொண்ட படக்குழுவினருக்கு தினமும் கொரோனா பரிசோதனை செய்து ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்தி, முகக் கவசம் அணிவித்து, மிகவும் ஜாக்கிரதையாக படப்பிடிப்பை நடத்தி வந்தோம்.

ரஜினிகாந்த்

இவ்வளவு கட்டுப்பாட்டோடு இருந்தும் 4 பேருக்கு கொரோனா இருக்கிறது என்று தெரிய வந்தது. உடனே இயக்குநர் படப்பிடிப்பை நிறுத்தி எனக்கு உட்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்வித்தார். எனக்கு கொரோனா நெகடிவ் வந்தது. ஆனால் எனக்கு ரத்தக் கொதிப்பில் அதிக ஏற்றத் தாழ்வு இருந்தது. மருத்துவ ரீதியாக எக்காரணத்தைக் கொண்டும் எனக்கு இரத்தக் கொதிப்பில் தொடர்ந்து ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாது, அது என்னுடைய மாற்று சிறுநீரகத்தை கடுமையாக பாதிக்கும். ஆகையால் என்னுடைய மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர்களின் மேற்பார்வையில் மூன்று நாட்கள் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருக்க நேரிட்டது.

என் உடல்நிலை கருதி தயாரிப்பாளர் திரு. கலாநிதி மாறன் அவர்கள் மீதமுள்ள படப்பிடிப்பை ஒத்திவைத்தார் இதனால் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு பல கோடி ரூபாய் நஷ்டம், இவை அனைத்துக்கும் காரணம் என்னுடைய உடல் நிலை.

இதை ஆண்டவன் எனக்கு கொடுத்த ஓர் எச்சரிக்கையாகத்தான் பார்க்கிறேன்.

நான் கட்சி ஆரம்பித்த பிறகு ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் மூலமாக மட்டும் பிரசாரம் செய்தால் மக்கள் மத்தியில் நான் நினைக்கும் அரசியல் எழுச்சியை உண்டாக்கி தேர்தலில் பெரிய வெற்றியை பெற முடியாது. இந்த யதார்த்தத்தை அரசியல் அனுபவம் வாய்த்த யாரும் மறுக்கமாட்டார்கள்.

நான் மக்களை சந்தித்து கட்டங்களை கூட்டி பிரச்சாரத்திற்கு சென்று ஆயிரக்கணக்கான ஏன் லட்சக்கணக்கான மக்களை சந்திக்க வேண்டியிருக்கும். 120 பேர் கொண்ட குழுவிலேயே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு நான் மூன்று நாட்கள் மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க நேர்ந்தது. இப்போது இந்த கொரோனா உருமாறி புது வடிவம் பெற்று இரண்டாவது அலையாக வந்து கொண்டிருக்கிறது.

தடுப்பூசி வந்தால்கூட நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் Immuno Suppressant மருந்துகளை சாப்பிடும் நான், இந்த கொரோனா காலத்தில் மக்களை சந்தித்து, பிரச்சாரத்தின் போது என் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டால் என்னை நம்பி என்கூட வந்து என்னுடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர்கள் பல சிக்கல்களையும் சங்கடங்களையும் எதிர்கொண்டு மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல துன்பங்களை சந்திக்க நேரிடும்.

என் உயிர் போனாலும் பரவாயில்லை, நான் – கொடுத்த வாக்கை தவற மாட்டேன், நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலுவிதமா என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை.

ரஜினிகாந்த்

ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும்தான் தெரியும்.

இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும், நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும், என்னை மன்னியுங்கள்.

மக்கள் மன்றத்தினர் கடந்த மூன்று ஆண்டுகளாக என் சொல்லுக்குக் கட்டுப்பட்டு ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும் கொரோனா காலத்திலும் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்திருக்கின்றீர்கள், அது வீண் போகாது.

அந்த புண்ணியம் என்றும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றும், கடந்த நவம்பர் 30-ம் தேதி நான் உங்களை சந்தித்த போது, நீங்கள் எல்லோரும் ஒரு மனதாக ‘உங்கள் உடல் நலம் தான் எங்களுக்கு முக்கியம், நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் எங்களுக்கு சம்மதமே என்று சொன்ன வார்த்தைகளை என் வாழ்நாளில் மறக்கமாட்டேன், நீங்கள் என்மேல் வைத்திருக்கும் அன்பிற்கும், பாசத்திற்கும் தலை வணங்குகிறேன். ரஜினி மக்கள் மன்றம் என்றும் போல செயல்படும்.

மூன்று ஆண்டுகளாக எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் தொடர்ந்து என்னை ஆதரித்து முதலில் உங்க உடல் நலத்தை கவனியுங்க, அதுதான் எங்களுக்கு முக்கியம் என்று அன்புடன் கூறிய மதிப்பிற்குரிய தமிழருவி மணியன் ஐயா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒரு பெரிய கட்சியில் பொறுப்பான பதவியிலிருந்து விலகி என் வந்து பணியாற்ற சம்மதித்த மரியாதைக்குரிய அர்ஜூன மூர்த்தி அவர்களுக்கும் நன்றி கூற நான் கடமைப்பட்டுள்ளேன். தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன சேவை செய்யமுடியுமோ அதை நான் செய்வேன்.

நான் உண்மையை பேச என்றுமே தயங்கியதில்லை.

உண்மையையும், வெளிப்படை தன்மையையும் விரும்பும், என் நலத்தில் அக்கறையுள்ள என்மேல் அன்பு கொண்ட என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்களும், தமிழக மக்களும் என்னுடைய இந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

வாழ்க தமிழ் மக்கள். வளர்க தமிழ்நாடு. ஜெய் ஹிந்த்” என்று தனது அறிக்கையில் நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினி கட்சி தொடங்கவில்லை: பிரபலங்கள் கூறுவதென்ன? – தமிழக அரசியல்

ரஜினி கட்சி தொடங்கவில்லை: பிரபலங்கள் கூறுவதென்ன?

தமது உடல்நிலை, கொரோனா பரவல், படப்பிடிப்பு ரத்தால் உண்டான இழப்பு ஆகியவை ஆண்டவன் தமக்கு கொடுத்த எச்சரிக்கை என்று கூறி அரசியலுக்கு வரும் முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

கட்சி ஆரம்பித்த பிறகு ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் மூலமாக மட்டும் பிரசாரம் செய்தால் மக்கள் மத்தியில் நான் நினைக்கும் அரசியல் எழுச்சியை உண்டாக்கி தேர்தலில் பெரிய வெற்றியை பெற முடியாது என்றும் என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை என்றும் இன்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும்தான் தெரியும் என்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும், என்னை மன்னியுங்கள்.தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன சேவை செய்யமுடியுமோ அதை நான் செய்வேன் என்று கூறியுள்ளார் ரஜினி. அதற்கு பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ரஜினியைச் சார்ந்தவர்கள் இது குறித்து வருத்தப்பட வேண்டியதில்லை; ரஜினியை உண்மையாக நேசிக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் இது ஒரு பிரச்சனையாக இருக்காது. திமுக மற்றும் அதிமுக இதனால் மகிழும், என்று பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.

ரஜினிகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட பின்னர் தனது முடிவு குறித்து அவர் என்னிடம் தெரிவித்தார். இது தவிர்க்க முடியாதது. ஆனால் அரசியலுக்கு வராமலேயே தமிழ்நாட்டு மக்களுக்கு சேவையாற்ற போவதாக அவர் அறிக்கையின் கடைசி பத்தியில் குறிப்பிட்டுள்ளதை படித்தேன். 1996ஆம் ஆண்டை போல இம்முறையும் ரஜினிகாந்த் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று ரஜினிக்கு நெருக்கமானவராக அறியப்பட்ட, ‘துக்ளக்’ இதழின் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ரஜினி அரசியலுக்கு வந்தால் அதன்மூலம் ஆதாயம் பெறலாம் என்று நினைத்தவர்களுக்கு இது ஓர் இழப்பு. ரஜினி அரசியலுக்கு வந்திருந்தால் மூன்றாவது அணி எனும் மாற்றுக்கான வாய்ப்பு வலுவாக இருந்திருக்கும். கமல் சீமான் போன்றவர்கள் தனித்தனியாக, உதிரி உதிரியாக இருக்கிறார்கள். இரண்டு பெரிய கட்சிகளுக்கும் இடையிலான போட்டி நெருக்கமாகியுள்ளது, என்று பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் மாலன் தெரிவித்தார்.

தலைவர் மட்டும்தான் இதைச் செய்ய முடியும். ரஜினிகாந்த் சார் அரசியலுக்கு வரும் முன்பே அதிலிருந்து ஓய்வு பெற்று விட்டார் என்று மருத்துவர் கஃபீல் கான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இவர் உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் குழந்தைகள் இறந்த சம்பவத்தின்போது வெளிச்சத்துக்கு வந்தவர். இப்போது செயல்பாட்டாளராக இருக்கிறார்.

“அடுத்து என்ன அர்ஜுனமூர்த்தி? திரும்பவும் பாஜகவா? மற்றும் (தமிழருவி) மணியன்?” என்று கார்த்தி சிதம்பரம் தமது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்பார்த்தது, கணித்தது, இருந்தாலும் ஏமாற்றம் அளிக்கிறது என்கிறார் நடிகை கஸ்தூரி.

கடந்த 3 ஆண்டுகளாக ரஜினி மக்கள் மன்றத்திற்கு பணியாற்றியவர்களுக்காக வருத்தப்படுகிறேன். தங்களது நாயகனின் வார்த்தையை நம்பியவர்கள், அவரது ரசிகர்கள் பொதுமக்கள் மற்றும் இதற்காக நீண்ட காலம் காத்திருந்தவர்கள் ஆகியோருக்காக வருத்தப்படுகிறேன். நீங்கள் வணங்கிய அல்லது வியந்த ஒருவர் அடிப்படையிலேயே பலவீனமாக இருப்பதை கண்டுபிடிப்பது வலி மிகுந்தது என்று தொலைக்காட்சி தொகுப்பாளரும் அரசியல் விமர்சகராக அறியப்பட்டவருமான சுமந்த் ராமன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ரஜினியின் முடிவை ஒரு சாரார் எள்ளியும், ஒரு சாரார் தங்களது அன்பையும் ஆதரவையும் தெரிவித்தும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

BBC

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More