நோர்வே தலைநகர் ஒஸ்லோவுக்கு அருகே கடந்த வாரம் நிகழ்ந்த களிமண் நிலச் சரிவில் சிக்கிய பத்துப் பேரில் ஏழு பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. நாய்க்குட்டி ஒன்று மட்டும் உயிர் பிழைத்துள்ளது.
காணாமற் போன எஞ்சியவர்களை மீட்கும் முயற்சிகள் கைவிடப்பட்டுள்ளன என்ற துயரமான செய்தியை நோர்வே பிரதமர் எர்னா சொல்பேர்க் (Erna Solberg) அறிவித்திருக்கிறார்.
எஞ்சிய மூவரையும் உயிருடன் மீட்க முடியும் என்ற நம்பிக்கை இனியும் இல்லை என்று மீட்புப் பணிகளுக்குத் தலைமை வகிக்கும் பொலீஸ் பொறுப்பதிகாரி தெரிவித்திருக்கிறார்.
நிலச் சரிவினால் உருவாகிய சுமார் 700 மீற்றர் நீளமும், 300 மீற்றர் அகலமும் கொண்ட ஆழக் கிடங்கில் கடும் உறை பனிக் காலநிலைக்கு மத்தியில் கடந்த ஏழு நாட்களாக மிக ஆபத்தான மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவந்தன
அந்தப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மற்றும் ஒரு சிறிய நிலச்சரிவு ஏற்பட்டது. ஆபத்துக்கு மத்தியில் விசேட மீட்புப்படை வீரர்கள் புதையுண்ட வீடுகளின் இடிபாடுகளை நெருங்கிச் சென்று அவற்றில் சிக்கிக் கிடந்த ஏழு உடல்களை மீட்டுள்ளனர்.
திங்கட்கிழமை நாய்க்குட்டி ஒன்று காயங்கள் இன்றி உயிருடன் மீட்கப்பட்டது. அதனால் ஓரிருவரையாவது உயிருடன் மீட்க முடியும் என்ற நம்பிக்கை காணப்பட்டது. ஆயினும் அந்த முயற்சிகள் கைகூடவில்லை.
ஒஸ்லோவுக்கு 30 கிலோ மீற்றர்கள் வடகிழக்கே Gjerdrum எனப்படும் நகரசபைப் பகுதியில் Ask என்ற கிராமத்தில் அமைந்திருந்த டசின் கணக்கான வீடுகளே கடந்த புதனன்று இரவு நேரம் திடீரெனப் புதையுண்டன.
குழந்தைகள், வயோதிபர்கள் உட்பட பத்துக்கு மேற்பட்டோர் வீடுகளுடன் சேர்ந்து உறை கழியில் சிக்குண்டனர்.
பலத்த காயமடைந்த பத்துப்பேர் ஒஸ்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
நோர்வேயில் இடம்பெற்ற மிக மோசமான நிலச்சரிவுகளில் இதுவும் ஒன்று. சுமை அதிகரிக்கும் போது புதைந்து உருகி விடக்கூடிய தன்மை உடைய களி மண் தரைப் பிரதேசத்திலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
நோர்வே மற்றும் சுவீடன் நாடுகளில் காணப்படும் துரித கழி (Quick clay) எனப்படும் மண் வகை பெரும் சரிவு ஏற்படும் போது உருகி நீராகிவிடும் தன்மை கொண்டது.
குமாரதாஸன். பாரிஸ். பாரிஸ்.06-01-2021