மின் வெட்டைத் தவிர்ப்பதற்காக மின்சாரத்தை சிக்கனமாகப் பயன் படுத்துமாறு பாவனையாளர்கள் கேட்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் இன்று வெள்ளிக் கிழமை பகல் மின் பாவனை அதன் அதி உச்ச அளவைக் கடக்க இருப்பதை அடுத்தே பிரான்ஸின் மின் பரிவர்த்தனை வலைப்பின்னலின் முகாமையாளர் (Gestionnaire du réseau électrique-RTE) இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
கடும் பனிக் குளிர் காலநிலையால் வெப்பநிலை பல பிரதேசங்களிலும் மைனஸ் 4. 5 பாகை (-4.5 ° C) வரை குறைவதால் இன்று மின்பாவனை உச்ச அளவான 88,000 மெஹாவாட்ஸ் (megawatts) என்ற அளவைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் முழுத் தேவைக்குமான மொத்த மின் உற்பத்தி 88,200 மெஹாவாட்ஸ் ஆகும்.இதனால் உடனடியாக மின் வெட்டு ஏற்படும் நிலைமை இல்லை.
அவசர சந்தர்ப்பங்களில் மாற்று வழிகளில் மின் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனினும் இயன்றவரை மின் விளக்குகள், அவசியமற்ற மின் சாதனங்களை நிறுத்தி ஒத்துழைக்குமாறு பாவனையாளர்கள் கேட்கப்பட்டுள்ளனர்.பிரான்ஸ் அதன் 70 வீதமான மின் தேவைக்கு அணு மின் உலைகளிலேயே தங்கியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஆண்டு ஏற்பட்ட பொது முடக்கம் அணு உலைகளின் (nuclear reactors) பராமரிப்பு வேலைகளைப் பாதித்துள்ளது. இதனால் இந்த ஆண்டு மின் உற்பத்தி சிறு வீழ்ச்சி கண்டுள்ளது.
குமாரதாஸன். பாரிஸ்.08-01-2021