ஓவ்வொருவர் வாழவிலும் மறக்க முடியாத தருணங்கள் நிகழ்வது என்பது அரிதான விடயம் இருப்பினும் என்னால் மறக்க முடியாத நாட்களில் இதவும் ஒன்றே! உலகிலே ஆரம்ப காலம் தொடக்கம் இன்றைய காலம் வரையிலான காலப்பகுதியில் மனித வளர்ச்சியானது பல தரப்பட்ட பரிணாம வளர்ச்சியினை அடிப்படையாக கொண்டு வளர்ந்து வந்துள்ள நிலையிலும் இவ் வளர்ச்சியில் அவர்களோடு இணைந்து வந்ததான அவர்கள் பேசிய மொழி, அணிந்த ஆடை ,பயன்படுத்திய கருவி வழிபட்ட வழிபாட்டு முறைமைகள் , இசை , இலக்கியம் , வாழ்க்கை முறை , உணவு , ஓவியம் , சிற்பம் , நாடகம் , நடனம் என்பன அனைத்தும் அவர்களது அடையாளங்களாக மாற்றம் பெற்று அவர்கள் குழுக்களாக மாறும் பொழுது அவை அனைத்தும் அக் குழுமத்தின் பண்பாடுகளாகின்றன. இவ்வாறாக மாறுபட்ட குழுக்கள் தோற்றம் பெற்றமையினால் வேறுவேறு வகையான கலைப்பாரம்பரியங்கள் உதயாமாகின்றன.
இதனை அடிப்படையாக கொண்டே இலங்கையில் பல தரப்பட்ட இனக் குழுமங்களின் சமூக பண்பாடுகளை அறியும் நோக்கில் கிழக்குப்பல்கலை கழகம் , பேராதெனிய பல்கலைக்கழகம் , யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என மூன்று விதமான சமூகங்களினை பிரதிநிதித்துவப் படுத்தும் பாரம்பரிய ஆடல் முறைமைகளினை அறியும் நோக்கில் 3 Notes Dance and Community Building Project எனும் தொனிப்பொருளினை அடிப்படையாக கொண்டு கிழக்குப்பல்கலைக்கழகம் பேராதெனிய பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களையும் இணைத்துக் கொண்டு 5 நாட்கள் கொண்ட பயிற்சி நெறியானது ஆரம்பமாக இருந்த நிலையில் நாட்டின் கொரோணவின் கோரத்தினால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் காரணமாக இவ் ஆற்றுகை பயிற்சி நெறியினை இணையத்தளத்தின் ஊடாக நடாத்தப்பட்டது.
இவ் செயலமர்வில் மூன்று பிரதேசத்திலும் அனுபவப்பலம் நிறைந்த நாடக ஆளுமைகளின் தலைமையில் 10 நபர்களை கொண்ட குழு பங்குகொண்டு மொத்தமாக 30 நபர்களை உள்ளடக்கியதாக இந் நிகழ்வு வடிவமைக்கப்பட்டது. அதில் கிழக்குப்பல்கலை கழகத்தில் ஈழத்து நாடக செயற்பாட்டாளரான கலாநிதி. சி. ஜெயசங்கர் தலைமையிலும் பேராதெனிய பல்கலைக்கழகத்தில் கலாநிதி.சுதேஸ் மந்திலக்கே மற்றும் கலாநிதி.ம.ரதிதரன் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் ஆற்றுகைகள் ஆற்றுகை செய்யப்பட்டு பயிற்றுவிக்கப்பட்டது.
இன் நிகழ்வானது சிறப்பான முறையில் கட்டமைக்கப்பட்டு நடாத்தப்பட்டமை பாராட்டதக்க விடயமாகும். இதில் மூன்று பிரேதேச பண்பாட்டுப் பாரம்பரிய ஆட்டமுறைமைகளும் ஆற்றுகை செய்தது மட்டும் அல்லாமல் மற்றவர்களுக்கு உரியவாறு பயிற்றுவிக்கப்பட்ட போது அனைவரும் ஓர் இடத்தில் சங்கமமாகி உயிர்த் தொடர்பு இல்லாது காணப்பட்டாலும் கூட ஓர் உயிர்த்துடிப்பான அணுகுதலை வெளிப்படுத்துவனவாக அமைந்தது. ஒவ்வொரு நாள் வீதம் மூன்று பல்கலைக்கழகத்திற்கும் முதல் மூன்று நாட்களும் நான்காவது நாள் மாணவர்கள் அனைவருக்குமான நாளாகவும் ஐந்தாவது நாள் அனைவருக்கும் பொதுவான நாளாகவும் அனுபவ பகிர்வாகவும் நாட்கள் பகிரப்பட்டது.
முதல் நாள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினை சேர்ந்தவர்களின் நிகழ்வு ஆரம்பமானதும் பொதுவான பயிற்சிகளை வழங்கியதன் பின்னராக அவர்களுக்கே சொந்தமான காத்தவராயன கூத்தின் ஒவ்வொரு பாத்திர வரவுகளையும் அதாவது (காத்தவராயன் , ஆரியப்புமாலை) மற்றும் வசந்தன் கூத்து மற்றும் உடல் மொழி மூலமான அசைவுகளையும் ஆற்றுகை செய்து பயிற்றுவித்தனர்.
இரண்டாவத நாள் கிழக்குப்பல்கலைகழகத்திற்கான பகிர்வு நாளாக அமைந்தது. இதில் கிழக்கின் பாரம்பரிய ஆற்றுகைக் கலை வடிவங்கள் ஆற்றுகை செய்யப்பட்டது.
முதலாவதாக எமது பாரம்பரிய முறைப்படி களரி வணக்கம் இடம்பெற்றது. இதனை தொடர்ந்து காவியம் உடுக்கோசையுடன் பாடப்பட்டது. வடமோடி தென்மோடி கூத்துக்களில்; வருகின்றதான (இராவணன் , மண்டோதரி , இலக்குமணன் , நாடகசாலைப்பெண்கள் ) வரவுத்தாள ஆட்ட முறைமைகளும், வசந்தன் கூத்து , கூத்து உடுப்பு கட்டும் முறைகள் ,பறைச்சமர், மற்றும் பறையர் ஆட்டமுறையானது ஓர் கேலிக்கையான ஆட்டமுறைமையாக காணப்பட்டது. அது அச் சமூகத்தினை இவ்வாறுதான் இவர்களின் ஆட்டம் என்று கட்டமைக்கப்பட்டு இருந்தது அதனை கட்டவிழ்க்கும் முகமாக பறையன் பாத்திரத்திற்கான உயர்முறை ஆட்டக்கோலங்கள் கொடுக்கப்பட்ட முறைமைகளும் மற்றும் ‘நாங்கள் வாழ வேண்டும் இந்த பூமியில் என்றும் நாங்கள் வாழ வேண்டும் இந்த பூமியில்’ என்ற பாடல் இசைத்துக்காட்டப்பட்டது. பின்னரான நாட்களின் அமர்வின் கரு இசையாக இப் பாடலே மேலோங்கிக் காணப்பட்டது.
மூன்றாவது நாளாக பேராதெனிய பல்கலைக்கழகத்திற்கான பகிர்வு அமைந்தது. இதில் அவர்கள் சிங்கள சடங்கரங்கு சார்ந்த பேய் ஆட்டங்களும் , கோலம் , சொக்கரி மற்றும் கண்டிய நடனம் போன்ற நடனங்களையும் மற்றும் அவர்களின் இசைக்கருவிகள் இசைக்கும் முறைமைகளையும் ஆற்றுகை செய்து காட்டினர். இதில் நாங்கள் அதிகம் ஆர்வம் உள்ளவர்களாக காணப்பட்டமைக்கு காரணம் என்னவெனில் சிங்கள ஆற்றுகைகளை நாங்கள் வாசித்தல் மூலமாக மாத்திரமே அறிந்து கொண்டோம் இதனை ஆற்றுகை வடிவில் காண்டுகொள்ளும் போது சிறப்பான ஓர் ஆற்றுகை சார் அறிவினையும் மேலும் கற்க வேண்டும் என்ற ஆர்வத்தினையும் ஏற்;படுத்தியது. கூடி செய்த ஆற்றுகைகளை தனிமையினிலே ஓர் திரைக்கு முன்னிலையில் இருந்து கொண்டு ஆடியதும் ஓர் வியப்பாகவே இருந்தது.
இப் பயில்நெறியானது நாடகக்காரர்களாகிய எங்களுக்கு கொடுத்த மிக பெரிய பரிசு என்னவெனில் முப்பண்பாட்டுக் கலாச்சாரத்தினை உடைய கலைஞர்களுக்கான எமக்கிடையே ஓர் கலைப்பாலத்தினை இணைக்கச் செய்தமையே ஆகும். இவ் அசாதாரண சூழ்நிலையிலே அரங்கச் செயற்பாடுகளில் ஈடுபடுத்திக் கொள்ள முடியாத நிலையிலும் எம்மை ஒன்றிணைத்து ஓர் செயற்பாட்டு ரீதியாக எம் ஆளுமையை வளர்க்க சிறப்பான வழிவகுத்தது. அதனோடு இணைந்து ‘கலையால் இணைவோம்’ என்ற வாக்கியம் உயிர் பெற்றதனை உணரும் வகையில் நாங்கள் வேறு வேறு பிரதேசங்களில் அறிமுகம் இல்லாமல் காணப்பட்ட போதிலும் எம்மை இணைத்த பெருமை எம் கலைகளையே சாரும்.
நாங்கள் பெரும்பாண்மை சிறுபாண்மை என எம்மை பிரக்க முற்பட்டாலும் கூட கலையானது அதற்கு இடம் தர மறுக்கின்றமையை உணர்த்தி நிற்கின்றது. தமிழர்ளின் வெள்ளாமை வெட்டும் தொழிலோடு தொடர்புடையதான கோல் கொண்டாடும் வசந்தன் கூத்தினை போன்றே சிங்கள கோலம் ஆற்றுகையிலும் கோல்களை கொண்டும் ஆடும் முறைமையினை காணக்கூடியதாக இருந்தது. அதுமட்டுமல்லாது எமது மந்திர தந்திர நிறைந்த மகிடி கூத்தாற்றுகை போன்றதான ஆற்றுகை முறைமையே அங்கு சொக்கரி ஆற்றுகையை காணமுடிந்தது. இவ்வாறாக கலைசார் ஒருமைப்பாடுகளை கண்டறிவதற்கான தளமாக இவ் பயிற்சிப்பட்டறையானது காணப்பட்டது.
மொழி என்பது எமக்கு சவாலாக இருந்த போதிலும் அதனை எதிர் கொண்டு அதனை அவர்களுக்கு வழங்கிய முறையும் அவர்கள் எமக்கு அதனை வழங்கிய முறைமையும் புதியதோர் இணைப்பாக்கமாக விளங்கியது. எவ்வாறு பேசினாலும் சொல்ல வந்ததை சிறப்பாக புரிந்து கொண்டு ஆற்றுகை செய்தது என்பது அவர்களுடானான உறவாடலை மென்மேலும் விரவு படுத்த கூடியதாகவும் மொழித் தேவையின் பிரதிபலிப்புக்களை உணர்த்தி நிற்பனவாகவும் காணப்பட்டது.
மாணவர்கள் எங்களுக்கான ஓர் ஆற்றுகை தயார் செய்து கொள்ளும் படி மூன்று குழுக்களாக அனைவரையும் இணைத்து பிரிக்கப்பட்டது அப்போது நாங்கள் மூன்று இடத்துக்குமான ஆட்டக்கோலங்களையும் இணைத்து ஓர் புதியதோர் ஆற்றுகையை வடிவமைத்த போது அதில் புலப்படுத்தியது யாதெனில் சிற்சில ஆட்டக் கோலங்கள் தனித்துவமாக இருந்தது சில ஆட்டக்தோலங்கள் ஒரே சாயலை கொண்டதாக அமைந்தது. இருப்பினும் அதில் உடல் அசைமுறைமைகளிலே இலகுவான மாற்றம் தென்பட்டது. மூன்று ஆட்டக்கோலங்களையும் இணைக்கும் போது ஓர் புதிதான அழகியல் ஆற்றுகையை எமக்கு வழங்க முடிந்தது. இதனால் ஓர் புத்துருவாக்கத்திற்கான வழிவகைகளை எமக்கு புலப்படுத்தியது என்பதில் பெருமிதம் அடைய கூடியதாக அமையப்பெற்றது.
இவ்வாறாக எங்களையும் எங்கள் சக சமூகத்தினரையும் கலைக் ஊடாக ஒன்றிணைத்து எமக்கிடையே ஓர் சிறந்த புரிதலுடன் கூடிய நல்லிணக்கத்தினை வலுபெறவித்து முப்பண்பாட்டுக் கலையம்சங்களையும் ஆற்றுகை மூலமாக அறியப்படுத்தி எங்கள் கலைகளுக்கிடையிலான ஒருமைப்பாடுகளையும் கண்டுகொள்ள வழியமைத்து எங்களைப் போன்ற கலைஞர்களை இணைத்ததில் இப் பயில்ரங்கானது வெற்றியடைந்துள்ளது மட்டுமல்லாது எதிர் காலத்தில் நாங்கள் எங்கள் கலைப்பாரம்பரயங்களை பேணிப்பாதுகாப்பது மட்டும் அல்லாமல் சக சமூகத்தினருடனான எங்கள் செயற்பாடுகளை இணைந்த மேற்கொள்ளவும் அவர்கள் கலைகளை நாங்களும் எங்கள் கலைகளை அவர்களும் வளப்படுத்;தி எதிர்கால சந்ததியினரை கலைக்கூடாக ஓர் சிறந்த வளமுள்ள முரண்பாடுகள் இல்லாத எதிர்காலத்தை அமைக்க வழிவகுப்;;போம்.
நன்றி